இலங்கையின் 5 தொடக்க வணிக முயற்சிகள் Uber Springboard மூலமாக வெளிநாட்டிற்கு.....

Uber's Springboard initiative, a program designed to support the next generation of Sri Lankan entrepreneurs, has announced its second cohort. The program provides mentorship, guidance, and international experience to help local business owners grow.

இலங்கையின் 5 தொடக்க வணிக முயற்சிகள் Uber Springboard மூலமாக வெளிநாட்டிற்கு.....

தேவைக்கேற்றவாறு சவாரி செல்வதற்கும், மற்றும் விநியோக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துள்ள உலகளாவிய தளமான Uber, வழிகாட்டல், ஆலோசனை, மற்றும் சர்வதேச அனுபவம் ஆகியவற்றினூடாக இலங்கை தொழில்முயற்சியாளர்களின் அடுத்த தலைமுறைக்கு ஆதரவளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு முயற்சியான Uber Springboard ன் இரண்டாவது தொகுதியை இன்று அறிவித்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன், இந்தியாவின் ஹைதரபாத் மாநகரிலுள்ள Uber ன் விசேட தொழில்நுட்ப மையத்தில் பிரத்தியேகமான வழிகாட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மிகவும் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்ட ஐந்து தொடக்க வணிக முயற்சிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் இடம்பெற்ற அங்குரார்ப்பண முதற்தொகுதியின் வெற்றியை அடுத்து, இந்த ஆண்டு தொகுதியானது பல்வேறுபட்ட துறைகள் மத்தியில் முன்னரை விடவும் பரந்த அளவிலும், வலுவான பிரதிநிதித்துவத்துடனும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலுள்ள 25 க்கும் மேற்பட்ட தொடக்க வணிக முயற்சிகளுடன் ஈடுபாடுகளைப் பேணியுள்ள Uber ன் தலைமைத்துவ அணியானது, வெளித்தரப்பு நிபுணர்களுடன் ஒன்றிணைந்து ஆழமான அனுபவத்தை வழங்கும் இந்த வாய்ப்பிற்காக பிரகாசம்மிக்க எதிர்காலத்தைக் கொண்ட ஐந்து வணிக முயற்சிகளைத் தெரிவு செய்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், பொறியியலாளர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “இலங்கையில் புத்தாக்கத் துறையை நாம் கட்டியெழுப்புவதை முன்னெடுப்பதில் தொழில்துறை-அரசாங்கம் இடையிலான ஒத்துழைப்பிற்கு மிகச் சிறந்த உதாரணமாக Uber Springboard அமைந்துள்ளது. 

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் தொடக்க வணிக முயற்சிகள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுவதுடன், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளுடன் அவர்களை சந்திக்கச் செய்வதனூடாக, அவர்கள் தமது வணிக முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அத்திவாரத்தையும் அவர்கள் இட்டுக்கொள்ள முடியும். 

எமது தொடக்க வணிக திறமைசாலிகள் மீது தொடர்ந்து முதலீடு செய்து, எமது தொழில்நுட்ப சமூகத்தின் படைப்பாற்றல் மற்றும் இலட்சியத்தை வெளிக்கொண்டு வர உதவுவதற்காக Uber நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

Uber Springboard 2025 தொடக்க வணிக முயற்சிகள் தொகுதி

AnyBanq: வங்கிகள் மத்தியில் நிதியியல் தீர்வுகளை ஒப்பீடு செய்து விண்ணப்பிக்க உதவும்

அதேசமயம், வாடிக்கையாளர்களை உள்வாங்கும் நடைமுறைகளை டிஜிட்டல்மயப்படுத்தி, சீரமைப்பதில் வங்கிகளுக்கு இடமளிக்கின்ற ஒரு டிஜிட்டல் வங்கிச்சேவை வர்த்தக முயற்சி.

PayMedia: வங்கிச்சேவை, நிதி, தொலைதொடர்பாடல், மற்றும் தொடக்க வணிக துறைகள் மத்தியில் கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்கி, பழமையான உட்கட்டமைப்பு வசதிகளை புதிய யுகத்தின் நிதியியல் தொழில்நுட்பங்களுக்கேற்றவாறு மேம்படுத்தும் நிதியியல் தொழில்நுட்ப நிறுவனம்.

Helios P2P: பாதுகாப்பான, தொழில்நுட்ப இடமளிக்கப்பட்ட கடன் மதிப்பீட்டு வடிவங்கள் ஊடாக கடன்படுனர்கள் மற்றும் கடன்கொடுனர்கள் ஆகிய இரு தரப்பினரையும் இணைத்து, கடன் வசதிக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்குடைய, சேவை வழங்குனர் - சேவை பெறுனர் அடிப்படையிலான கடன் வழங்கல் தளம்.

Articom.io: உருவாக்குனர்கள் வர்த்தக முயற்சி மற்றும் தொழில்துறை தரத்திலான கருவிகள் ஆகியவற்றின் துணையுடன் நுண்ணறிவுமிக்க வாடிக்கையாளர் ஆதரவு உதவிச் சேவைகளைக் கட்டமைத்து, நடைமுறைப்படுத்தி, நிர்வகிப்பதற்கு வணிகங்களுக்கு உதவும் ஒரு முகவர் செயற்கை நுண்ணறிவுத் தளம்.

Ceylon Speechie: ஆட்டிசம் வியாதி குறித்த ஆபத்தை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கு, பேச்சுச் சிகிச்சை சேவைகள் கிடைக்கப்பெறுவதையும், அவர்களுடைய முன்னேற்றம் குறித்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சர்வதேச சிகிச்சை வலையமைப்பு ஆகியவற்றுக்கான இணைய மற்றும் மொபைல் பயன்பாடுகளை வழங்கும் ஒரு மருத்துவத் தொழில்நுட்ப வணிக முயற்சி.

தெரிவு செய்யப்பட்டுள்ள தொடக்க வணிக முயற்சிகள், உற்பத்தி மேம்பாடு, வளர்ச்சிக்கான மூலோபாயம், நிதி திரட்டுதல், மற்றும் அணியைக் கட்டியெழுப்புதல் போன்ற அமர்வுகளைக் கொண்ட ஒரு வார கால வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பதற்காக ஹைதரபாத் மாநகரிலுள்ள Uber ன் விசேட தொழில்நுட்ப மையத்திற்கு தற்போது பயணிக்கவுள்ளன. இலங்கையில் தொடக்க வணிக முயற்சிகள் கட்டமைப்பிற்கு வலுவூட்டுவதில் நீண்ட காலமாக Uber காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டு இம்முயற்சி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

Uber Sri Lanka விநியோக சேவைக்கான இலங்கைக்கான முகாமையாளர் வருண் விஜேவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:

“அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுப்பதில் தொழில்முயற்சியாண்மையின் வலிமை மீது Uber எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. Springboard மூலமாக இலங்கையிலுள்ள தொடக்க வணிக முயற்சிகளுக்கு நாம் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவதுடன் மாத்திரம் வெறுமனே நின்றுவிடாது, நிஜ உலகு குறித்த ஆழமான அறிவு, நடைமுறைக் கருவிகள், மற்றும் தொழில்துறையின் கண்ணோட்டம் குறித்த அனுபவத்தையும் வழங்குகின்றோம்.

உள்நாட்டில் புத்தாக்கத்தை வளர்த்து, தொடக்க வணிக முயற்சியாளர்கள் தமது முயற்சிகளை விரிவுபடுத்தி, நெகிழ்திறன் மிக்கதாக, மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெற்றி காண்பதற்கு
உதவுவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

Uber Sri Lanka போக்குவரத்து சேவைக்கான இலங்கைக்கான முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “Uber நிறுவனமும் ஒரு தொடக்க வணிக முயற்சியாகவே தோற்றம் பெற்றது. ஆகவே இத்தகைய முயற்சிகளின் வளர்ச்சிக்குத் தேவையான உறுதுணை மற்றும் வழிகாட்டல் குறித்து நாம் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். 

இதனாலேயே Springboard மூலமாக இலங்கையில் தொடக்க வணிக முயற்சியாளர்களின் புதிய அலையொன்றைத் தோற்றுவிக்க உதவுவதற்கு நாம் பெருமையுடன் முன்வந்துள்ளதுடன், இவ்வாண்டில் இன்னும் கூடுதலான துறைகளை உள்ளடக்கும் வகையில் மேலும் விரிவுபடுத்தியுள்ளோம். இதனை சாத்தியமாக்குவதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு நாம் மிகவும் நன்றி தெரிவிப்பதுடன், இந்த தொழில்முயற்சியாளர்கள் தமது இலட்சியங்களை நனவாக்கி, நல்விளைவை ஏற்படுத்துவதை காண்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

2015 ம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு (போக்குவரத்து சேவை: 2015 மற்றும் விநியோக சேவை: 2018), நாடெங்கிலும் தனது சேவைகளை Uber விஸ்தரித்துள்ளதுடன், பிராந்தியத்தில் போக்குவரத்து, புத்தாக்கம், மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றுக்கு இடமளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் மீது தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.