இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு : கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அதிக நோயாளிகள்
Sri Lanka has recorded a steady rise in HIV infections since 2023, with Colombo and Gampaha reporting the highest number of cases. Health authorities have introduced free and confidential mobile HIV screening services.
நாட்டில் எச்.ஐ.வி. (HIV) தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், 2023ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி. தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பெண்களை விட ஆண்களிடையே அதிகளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளே எச்.ஐ.வி. பரவுவதற்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவோர் ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற ஊசி உபகரணங்களை பகிர்ந்து பயன்படுத்துவதும் வைரஸ் பரவலுக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எச்.ஐ.வி. தொற்றுக்கு முழுமையான குணமளிக்கும் சிகிச்சை இதுவரை இல்லை என்றும், தொற்றாளர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சிகிச்சையுடன் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் வைத்தியர் சத்யா ஹேரத் வலியுறுத்தினார்.
மேலும், தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ( National STD/AIDS Control Programme ) சார்பில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் எச்.ஐ.வி., பாலியல் தொடர்பான தொற்றுநோய்கள் (STIs) மற்றும் ஹெப்படைட்டிஸ் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்காக சிறப்பு நடமாடும் மருத்துவ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த முன்னோடி திட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் இலவசமாகவும் இரகசியத்தன்மையுடனும் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று பரவல் விகிதம் இன்னும் குறைவாகவே இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அவர் எச்சரித்தார்.
"2023ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி. தொற்றுகள் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை பதிவான எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகமாக உள்ளது. அதிக மக்கள் தொகை காணப்படுவதால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்," என வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்தார்.
editor