இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எதிர்காலம் அமையுமா என்பதைப் பொறுத்தே, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்

The future of Asia and the Pacific depends on whether young people have hope, opportunities and equal choices, writes UNFPA Regional Director Dr. Aleksandar (Sasha) Bodiroza on World Population Day.

இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எதிர்காலம் அமையுமா என்பதைப் பொறுத்தே, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்

கலாநிதி அலெக்சாண்டர் (சாஷா) போடிரோசா

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் முழுவதும், மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள் நமது காலத்தின் மிக முக்கியமான கொள்கை சவால்களில் ஒன்றாக உருவெடுத்து வருகின்றன. சில நாடுகள் வீழ்ச்சியடைந்து வரும் மகப்பேறு விகிதங்களையும் வேகமாக முதிர்ச்சியடைந்து வரும் முதியோர் மக்கள்தொகையையும் எதிர்கொண்டுள்ளன. அதேநேரம், வேறு சில நாடுகள் தங்களின் பெருமளவிலான இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த மக்கள்தொகை மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் சந்தைகள், சுகாதாரக் கட்டமைப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் கேள்விகளை எழுப்புகின்றன.  

இவை முக்கியமான கேள்விகள். ஆனால், அவை பெரும்பாலும் தவறான இடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் என்பது வெறும் மகப்பேறு விகிதங்கள், மக்கள்தொகை கணிப்புகள் அல்லது வயதுக் கட்டமைப்புகளை மட்டும் சார்ந்தது அல்ல. அது மிகவும் அடிப்படையான ஒரு விஷயத்தால் தீர்மானிக்கப்படும்: இளைஞர்கள் நம்பிக்கை கொள்வதற்கான வலுவான காரணங்களைக் கொண்டிருக்கிறார்களா என்பதே அதுவாகும்.

பெரும்பாலும், மக்கள்தொகை மாற்றம் குறித்த பொது விவாதங்கள் மனிதர்களை விட புள்ளிவிவரங்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு புள்ளிவிவரத்தின் பின்னாலும் மிகவும் தனிப்பட்ட ஒரு முடிவு ஒளிந்துள்ளது: உயர்கல்வியைத் தொடர்வதா, ஒரு உறவில் இணைவதா, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதா, சொந்த சமூகத்திலேயே தங்கியிருப்பதா அல்லது வேறு எங்கேனும் வாய்ப்புகளைத் தேடிச் செல்வதா போன்ற தீர்மானங்கள் அவை. இந்த முடிவுகள் தனிப்பட்ட விருப்பங்களால் மட்டுமல்லாமல், இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் தடைகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ‘சனத்தொகை எதிர்காலக் கருத்துக்கணிப்பு’ (Demographic Futures Survey) என்ற அதன் வகையிலான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றின் புதிய சான்றுகள், பொது விவாதங்களில் அடிக்கடி முன்வைக்கப்படும் சில அனுமானங்களை மாற்றியமைக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் உறவுகள், பெற்றோர் நிலை அல்லது குடும்ப வாழ்க்கையை நிராகரிக்கவில்லை; மாறாக, தொடர்ந்து அவற்றை மதிக்கவும் விரும்பவும் செய்கிறார்கள். பலர் இன்னமும் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தங்களின் எதிர்கால நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே கருதுகிறார்கள்.

அந்த எதிர்காலம் தங்களின் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதா என்பதைப் பற்றியதாகவே அவர்களின் பிரதான கேள்வி அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்கு நிதிப் பாதுகாப்பு, நிலையான வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தயார்நிலை ஆகியவையே மிக முக்கியமான நிபந்தனைகள் என்று இளைஞர்கள் தொடர்ந்து அடையாளப்படுத்துகிறார்கள். இருப்பினும், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பெரும்பகுதியில், இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகி வருகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வீட்டுப் பாதுகாப்பின்மை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் விரிவடைந்து வரும் சமத்துவமின்மை ஆகியவை பல இளைஞர்கள் தாங்கள் விரும்பும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதைக் கடினமாக்குகின்றன.

பலருக்கு, சவால் என்பது தொழில் அல்லது குடும்பம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அல்ல, மாறாக இரண்டையும் தொடர்வதற்கான உண்மையான வாய்ப்பைப் பெறுவதாகும். அத்துடன், இளைஞர்களின் யதார்த்தங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. சிலர் வேலை மற்றும் குடும்ப ஆசைகளை சமநிலைப்படுத்த போராடும் அதே வேளையில், ஏனையவர்களுக்கு வறுமை, பாகுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக நெறிமுறைகள் அல்லது நடைமுறைகளால் அர்த்தமுள்ள தெரிவுகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. இளம் பெண்கள் தொடர்ந்து ஊதியமில்லாத பராமரிப்புப் பொறுப்புகளின் பெரும்பகுதியைச் சுமக்கிறார்கள், அதே நேரத்தில் பாதுகாப்பான, கண்ணியமான வேலைக்கான சமமற்ற வாய்ப்புகள் பலரை சுரண்டல், வன்முறை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைக்கு ஆளாக்குகிறது.

எனவே, தேர்வுகளை விரிவுபடுத்துவதற்கு தனிப்பட்ட முடிவுகளை ஊக்குவிப்பதை விட மேலான ஒன்று தேவைப்படுகிறது. ஒவ்வொரு இளைஞரும் தனது சொந்த எதிர்காலத்தை கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சம வாய்ப்புகளுடன் தீர்மானிக்க உதவும் கொள்கைகளும் முதலீடுகளும் அதற்குத் தேவைப்படுகின்றன. காலநிலை மாற்றம் மற்றொரு நிச்சயமற்ற தன்மையைச் ஏற்படுத்துகிறது. ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும், தீவிர வானிலை நிகழ்வுகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை தொடர்பான இடப்பெயர்வு ஆகியவற்றால் அதிகரித்து வரும் முறையில் பாதிக்கப்படும் ஒரு பிராந்தியத்தில் இளைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள். எதிர்காலம் குறித்த அவர்களின் கவலைகள் பொருளாதாரத்தையும் தாண்டி விரிவடைகின்றன. தாங்கள் எத்தகைய உலகைப் பெறுவோம், அது தங்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தக் கவலைகள் முக்கியமானவை; ஏனெனில், நம்பிக்கை என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது மீள்திறன் கொண்ட சமூகங்களின் அடிப்படையாகும். மக்கள் தங்களின் எதிர்காலம் சாத்தியமானது என்று நம்பும்போது, அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இளைஞர்கள் கற்றுக்கொள்ளவும், பணியாற்றவும், பங்களிக்கவும், வளரவும் வாய்ப்புகளைப் பெறும்போது சமூகங்கள் வலுவடைகின்றன. முன்னேற்றம் சாத்தியம் என்று இளைஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கும்போது சமூகங்கள் அதிக மீள்திறனைப் பெறுகின்றன.

நம்பிக்கை தற்செயலாக உருவாவதில்லை; மாறாக, வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் முதலீடுகள் மூலமே அது கட்டியெழுப்பப்படுகிறது. இது தரமான கல்வி, கண்ணியமான வேலைவாய்ப்பு, மலிவு விலை வீட்டுவசதி, எளிதான சுகாதார வசதிகள், வலுவான சமூகப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்திற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் சாத்தியமாக்கப்படுகிறது.

இளைஞர்கள் தங்களின் உரிமைகளைப் பயன்படுத்தவும், தங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் பங்கேற்கவும், பொது நிறுவனங்கள் தங்களின் நலனுக்காகவே செயல்படுகின்றன என்று நம்பிக்கை கொள்ள முடிகின்ற போது இது மேலும் வலுவடைகிறது.

இதனால்தான், முடிவுகளை வலுக்கட்டாயமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் மூலம் ஆரோக்கியமான மக்கள்தொகையை அடைய முடியாது. உரிமைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது ஆழமான தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்துவதன் மூலமோ அதனை உருவாக்க இயலாது. சனத்தொகை மாற்றங்களுக்கான நிலையான தீர்வுகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்கள் செழித்து வளரக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குவதிலும் தொடங்குகின்றன.

இந்த உலக சனத்தொகை தினத்தில், சனத்தொகை எதிர்காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவை சமூகங்கள் இன்று எடுக்கும் தீர்மானங்களாலேயே வடிவமைக்கப்படுகின்றன. நாளை நமக்கு மீள்திறன் கொண்ட பொருளாதாரங்கள், செழிப்பான சமூகங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி வேண்டுமானால், இளைஞர்களுக்கு வெறும் ஆசைகள் மட்டும் இருப்பதை உறுதி செய்தால் போதாது; மாறாக, அவர்கள் நம்பிக்கை கொள்வதற்கான உண்மையான காரணங்கள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். (முற்றும்).


எழுத்தாளர் பற்றியது:

கலாநிதி அலெக்சாண்டர் (சாஷா) போடிரோசா, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் மற்றும் மனிதாபிமான திட்டமிடல் ஆகியவற்றில் நாடு, பிராந்தியம் மற்றும் உலகளாவிய மட்டங்களில் மூலோபாய தொலைநோக்கு, தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தில் 27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். கலாநிதி போடிரோசா தற்போது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான UNFPA-வின் இடைக்கால பிராந்திய இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். இப்பிராந்தியத்தில் உள்ள 36 நாடுகளின் திட்டங்களைக்  கண்காணிப்பதுடன், பிராந்திய ரீதியிலான முயற்சிகள் சீரான முறையில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான மூலோபாய வழிகாட்டல்களையும் அவர் வழங்கி வருகின்றார்.