அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகள் – கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘Freedom 250’ விழா

The U.S. Embassy in Sri Lanka celebrated the 250th anniversary of American independence with the 'Freedom 250' event in Colombo. The celebration highlighted the enduring values of freedom through American cinema, featuring immersive experiences, cultural performances, and participation from government officials, diplomats, business leaders, and partners.

அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகள் – கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘Freedom 250’ விழா

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 'Freedom 250' என்ற பெயரில் அமெரிக்க சினிமாவை மையப்படுத்திய பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.

பிரதம விருந்தினரான சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நூற்றுக்கணக்கான இலங்கைப் பங்காளர்கள், அரச அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்காவின் நண்பர்களுடன் இணைந்து, அமெரிக்க சினிமாவின் வில்லைகளினூடாக சுதந்திரத்தின் அழியாத சக்தியைப் போற்றும் Freedom 250 கொண்டாட்டத்தில் அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. 

தனிநபர் சுதந்திரம், தன்னாட்சி, கருத்துச் சுதந்திரம், மற்றும் சுதந்திர மக்களுக்கு கனவு காண்பதற்கும், படைப்பதற்கும், தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைப்பதற்கும் இயலுமெனும் நம்பிக்கை போன்ற, இரண்டரை நூற்றாண்டுகளாக அமெரிக்காவை வடிவமைத்த இலட்சியங்களை ஜூலை 2ஆம் திகதி இடம்பெற்ற இக்கொண்டாட்டம் எடுத்துக்காட்டியது. இதன்போது, இலங்கையுட்பட உலகம் முழுவதும் பல தலைமுறைகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு உத்வேகமளித்த அதே வேளை, அமெரிக்கத் திரைப்படங்கள் அச்சுதந்திரத்தை எவ்வாறு பிரதிபலித்துள்ளன என்பதைக் கொண்டாடும், ஆழ்ந்த ஈடுபாடுடைய ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் இடமாக தூதரக வளாகம் மாற்றப்பட்டிருந்தது.

இக்கொண்டாட்டங்களுக்கு வருகை தந்திருந்த அதிதிகளை வரவேற்று உரையாற்றிய, தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் அமெரிக்க சுதந்திரத்திற்கும் சினிமா
பாணியிலான கதை சொல்லலுக்குமிடையிலான ஆழமான தொடர்பு பற்றி பின்வருமாறு கருத்துரைத்தார். “எமது தேசம் உலகிற்களித்த மாபெரும் கொடைகளிலொன்றான சினிமாவெனும்
கலையினைப் போற்றுவதன் மூலம் அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவினை நாம் இன்றிரவு கொண்டாடுகிறோம்.” 

“ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, எல்லைகளையும், கலாச்சாரங்களையும் கடந்து மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைப் படைப்பதற்காக அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்  தமது படைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 1896ஆம் ஆண்டு நிவ் ஓர்லியன்ஸில் திரைப்படங்களுக்கென்றே பிரத்தியேகமாக நிறுவப்பட்ட உலகின் முதலாவது திரையரங்கம் திறந்துவைக்கப்பட்டது முதல், ‘ஸ்னோ வைட்’ திரைப்படத்தின் புரட்சிகரமான அனிமேஷன் வரை, ‘த கோட்பாதர்’ போன்ற பிரம்மாண்டமான காவியங்கள் முதல் ‘அவதார்’, ‘ஸ்டார் வோர்ஸ்’, மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ போன்ற திரைப்படங்களின் தொழில்நுட்ப அற்புதங்கள் வரை, இலங்கையில் படமாக்கப்பட்டு, ஹொலிவுட்டின் வரலாற்றுடன் இலங்கைத்தீவினை நிரந்தரமாக இணைத்த ‘த பிரிட்ஜ் ஒன் த ரிவர்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் வரை, துணிச்சலாகக் கனவு காண்பதற்கான சுதந்திரம், ஆழமாகக் கேள்வி கேட்பதற்கான சுதந்திரம், புதிய சாத்தியங்களைப் பற்றிக் கற்பனை செய்வதற்கான சுதந்திரம் போன்ற, இன்று நாம் கொண்டாடும் அதே சுதந்திரங்களையே எமது திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் சக பாதுகாவலர்களான எமது இலங்கை நண்பர்களுடன் இத்திரைப்படப் பயணத்தைப் நாம் பகிர்ந்துகொள்ளும்போது,  சிறந்த அமெரிக்கக் கதைகள் உலகளாவிய கதைகளே என்பது எமக்கு நினைவூட்டப்படுகிறது. ‘த விஸர்ட் ஒஃப் ஓஸ்’ திரைப்படத்தில் நாம் காணும் துணிச்சல், ‘த அவெஞ்சர்ஸ்’ திரைப்படத்தில் நாம் காணும் ஒற்றுமை, ‘ஈ.ரி.’ திரைப்படத்தின் மூலம் நாம் அனுபவிக்கும் வியப்பு, ‘அப்பலோ 11’ போன்ற படங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் ஆய்வு மற்றும் சாதனை மனப்பான்மை, மற்றும் ‘ஃபொரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தில் நாம் போற்றும் மீண்டெழும்தன்மை ஆகியவற்றைப் பற்றி அவை பேசுகின்றன. இன்றிரவு நாம் அமெரிக்க சினிமாவை மட்டுமன்றி, அதைச் சாத்தியமாக்கும் சுதந்திரத்தையும் கொண்டாடுகிறோம்—எந்தவொரு கதையையும் சொல்வதற்கான சுதந்திரம், அமெரிக்காவின் மிகச்சிறந்த வடிவத்தையும், அதன் மிகவும் சிக்கலான வடிவத்தையும் படம்பிடித்துக் காட்டுவதற்கான சுதந்திரம், மற்றும் எம்மை நாம் பார்க்கும் விதத்தையும், மற்றவர்களை நாம் பார்க்கும் விதத்தையும் திரைப்படங்களால் மாற்ற முடியுமென நம்புவதற்கான சுதந்திரம். அந்த சுதந்திரத்தையும், எம்மை முன்னோக்கி வழிநடத்தும் நிலையான விழுமியங்களையுமே இந்த 250ஆவது ஆண்டுவிழாவில் நாம் போற்றுகிறோம்.” எனவும்
தெரிவித்தார்.

அந்த மாலைப்பொழுது ஒரு கண்கொள்ளாக் காட்சியுடன் ஆரம்பமானது: 250 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடும் விதத்திலும், 1776ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டதை நினைவுகூரும் விதத்திலும் அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த திரைகளில் விவரணக்கீற்றுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இன்றும் பயன்படுத்தப்படும் கட்புலக் கதைசொல்லல் நுட்பங்களை நிறுவிய ஊமைப் படங்கள் முதல், டிஸ்னியின் ‘ஸ்னோ வைட் என்ட் த செவன் ட்வார்ஃப்ஸ்’ (முதலாவது முழு நீள அனிமேஷன் திரைப்படம்), ‘த மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தின் புரட்சிகரமான “புல்லட் டைம்” விளைவுகள், நீதி மற்றும் சமூகம் குறித்த சிக்கலான கேள்விகளை ஆராய்வதற்கான ஒரு கருவியாக சூப்பர்ஹீரோ சினிமாவை மறுவரையறை செய்த கிறிஸ்டோபர் நோலனின் ‘த டார்க் நைட்’ வரையான திரைப்படங்கள் வரை, அமெரிக்க சினிமாவின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும், கவனமாகத் தொகுக்கப்பட்ட காணொளிக்கீற்றுகளை, விண்மீன்கள் கண்சிமிட்டிய வானத்தின் கீழ் திறந்தவெளியில் திரையிட்டமை, இக்கொண்டாட்டங்களின் பிரதான அம்சமாக அமைந்தது.

ஜப்பானின் ஒக்கினாவா நகரைத்தளமாகக் கொண்ட, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்க மரைன் படையினரின் முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட இசைப்பிரிவான III Marine Expeditionary Force Band, பலதலைமுறையினருக்கு ஊக்கமளித்த பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கையில், கொழும்பு வானத்தை ஒளிரச்செய்த வாணவேடிக்கைகளுடன் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்தன. அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளின் உலகளாவிய நற்பெயரைப் பறைசாற்றும் வகையில், உயர்தரமான அமெரிக்க மாட்டிறைச்சியையும் மற்றும் பிற அமெரிக்க உணவு வகைகளை​யும், குடிபானங்களையும் விருந்தினர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.

அமெரிக்கா தனது 250 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடுகையில், 1776ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசத்தின் வரைவிலக்கணமாக விளங்கிய ஒரு நிலையான சிந்தனையினை Freedom 250 கொண்டாடுகிறது. சுதந்திரமானது, மனித ஆற்றலை வெளிக்கொணர்கிறது, படைப்பாற்றலுக்கும், புத்தாக்கத்திற்கும் உந்து சக்தியாக அமைகிறது, மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக தனிநபர்களை வலுவூட்டுகிறது என்பதே அச்சிந்தனையாகும். 

கல்வி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் எமது மக்களுக்கிடையிலான நீடித்த பிணைப்புகள் ஆகியவற்றினூடாக, வாய்ப்புகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு பங்காண்மையினை, அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றன.

வைர அனுசரணையாளர்களான பிரெண்டிக்ஸ், ஹேய்லிஸ், ஹிர்தாரமணி, மாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ்டர்கார்ட், ஆர்எம் பார்க்ஸ் மற்றும் வீசா உட்பட, இவ்வருட சுதந்திரதினக் கொண்டாட்டத்தை சாத்தியமாக்கிய தாராளமான அனுசரணையாளர்களுக்கும், ஏனைய மதிப்புமிக்க பங்காளர்களுக்கும் தனது இதயம்கனிந்த நன்றிகளை அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துக் கொள்கிறது.