டித்வா சூறாவளி: இலங்கையில் ஐ.நா அவசர மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பதிலாக ஐக்கிய நாடுகளும் அதன் பங்காளிகளும் மேற்கொண்ட அவசர மனிதாபிமான பதிலளிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. 5.75 லட்சம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மீள்கட்டமைப்பு கட்டத்திற்கு கவனம் மாற்றப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளி: இலங்கையில் ஐ.நா அவசர மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு

இலங்கையில் டித்வா சூறாவளி அவசர மனிதாபிமான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


இது குறித்து கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


டித்வா சூறாவளி 2025 டிசம்பர் மாதம் இலங்கையைத் தாக்கி, நாட்டில் என்றும் இல்லாத அளவிலான வெள்ளப் பெருக்குகளையும் மண்சரிவுகளையும் ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டத்தில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் சுமார் 522,000 சிறுவர் சிறுமிகளும் அடங்குவர். இந்த பேரனர்த்தத்தினால்2026 ஜனவரி நிலவரப்படி, 640-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 173 பேர் காணாமல் போயிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐக்கிய நாடுகள் சபையும் மனிதாபிமான பங்காளிகளும் 2025 டிசம்பர் 11 ஆம் திகதி மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP) ஆரம்பித்தன. அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட அவசரத் தேவைகளுக்கு சர்வதேச உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

தற்போது, ஐக்கிய நாடுகளும் மனிதாபிமான பங்காளிகளும் இந்த மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP) நிறைவு செய்துள்ளன. இதுவரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பாதிப்புக்குள்ளான 575,000 பேருக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அதிகளவில் பாதிக்கப்பட்ட பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்கள் குறித்தி அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மொத்தமாக தேவைப்பட்ட 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களில், சுமார்  28.5 மில்லியன் அமெரிக்க டொலர்  நன்கொடைகள் திரட்டப்பட்டன. இது இலங்கையின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் இலங்கை மக்களுடன் அவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. இந்த மனிதாபிமான நடவடிக்கை அவுஸ்திரேலியா, ஐக்கிய நாடுகள் மத்திய அவசரகால பதிலளிப்பு நிதியம் (CERF), அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, கேட்ஸ் மன்றம், ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, கொரியா குடியரசு, சைப்ரஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் ஆதரவால் சாத்தியமானது.

மேலும், யுனிசெப் (UNICEF) நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி தேசிய குழுக்கள், யுனிசெப் நிறுவனத்தின் உலகளாவிய கருப்பொருள் அவசரகால பதிலளிப்பு நிதியம், NUPGE கனடா, உலக உணவு தாபனத்தின் (FAO) அவசர மற்றும் மீள்திறன் நடவடிக்கைகளுக்கான விசேட நிதியம், அத்துடன் உலக சுகாதார தாபனம் (WHO), யுனெஸ்கோ மற்றும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) ஆகியவற்றின் அவசர நிதி ஒழுங்குகள் மூலமாகவும் மேலதிக பங்களிப்புகள் வழங்கப்பட்டன.

சர்வதேச மனிதாபிமான உதவிகள் இந்த மனிதநேய முன்னுரிமைத் திட்டத்திற்குள் (HPP)  மட்டுமே வரையறுக்கப்படவில்லை. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இருதரப்பு நிதி உதவிகளை வழங்கியதுடன், 19 நாடுகள் தேடுதல் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பியதோடு, பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளையும் வழங்கின. இது இலங்கையுடன் சர்வதேச சமூகம் வெளிப்படுத்திய பரந்த அளவிலான ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த எண்ணிக்கைகளின் பின்னால் எண்ணற்ற தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அலிஸ் நோனா தனது மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தபோது டித்வா சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக அவர்களின் வீடு முற்றிலுமாக இடிந்துவிட்டது. “நாங்கள் அனைத்தையும் இழந்தோம்; ஒரே இரவில் இடம்பெயர்ந்தவர்களாக மாறினோம்,” என அவர் கூறுகிறார். ஒற்றைப் பெற்றோராக உள்ள அலிஸ், மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தின் (HPP)   ஊடாக அவசரகால பண உதவியைப் பெற்றார். “அந்தப் பணத்தை உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், எனது பிள்ளைகளுக்கான உடைகளை வாங்கவும் பயன்படுத்தினோம். அந்த நேரத்தில் எங்களிடம் எதுவும் இல்லை. கிடைத்த உதவிக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.


இந்த செயற்பாடுகள் நெடுகிலும், மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP)   தேசிய முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில் விரைவான உதவிகளை வழங்குவதற்கும் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களை முதலில் சென்றடைவதற்கும் வடிவமைக்கப்பட்டது. தேவையுடைய குடும்பங்களுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டதுடன், அது அரசாங்கத்தின் பண உதவித் திட்டத்தையும் பூர்த்தி செய்தது. அதேபோல், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இடைக்கால தங்குமிடங்களும் வழங்கப்பட்டன. மேலும், அவற்றிற்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் உறுதி செய்யப்பட்டன. 83 பங்காளர் அமைப்புகள் வெளிவிவகார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டன. இதன் மூலம், சர்வதேச உதவிகள் அரசாங்கத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.

“தேசியத் தலைமைத்துவம் வலுவாக இருக்கும்போது, உள்ளூர் உரிமைத்துவம் மதிக்கப்படும்போது, மற்றும் கூட்டாண்மைகள் பயனுள்ள வகையில் செயல்படும்போது, உதவி தேவைப்படுவோருக்கு நாம் இன்னும் விரைவாகவும், சமமான முறையிலும், திறமையான வகையிலும் உதவிகளை வழங்க முடியும்,” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். “மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தின் (HPP) ஊடாக வெளிப்பட்ட கூட்டாண்மை, தெளிவான நோக்கத்துடனும் ஒருவரின் பங்கினை மற்றவர் மதிக்கும் அணுகுமுறையுடனும் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், இலங்கை இன்னும் திறம்பட பதிலளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த பேரழிவை இலங்கை தனியாக எதிர்கொள்ளவில்லை,” என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) தெரிவித்தார். “ஆரம்ப நாட்களிலிருந்தே மனிதாபிமான பங்காளிகளும் அரசாங்கமும் தேசிய மட்டத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்கள் வரை தோளோடு தோள் நின்று செயல்பட்டன. சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து உதவியது. அதேவேளை, இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனவுறுதியும் ஒற்றுமையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது. மீட்சிக்கான பயணம் நீண்டது. அந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து தொடர்ந்தும் பயணிப்போம்,” என்றும் அவர் கூறினார்.

மனிதாபிமான பதிலளிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தாலும், மீட்பு மற்றும் புனரமைப்பிற்கான சவால்களின் பரிமாணம் தற்போது மேலும் தெளிவாக வெளிப்படுகிறது. அரசாங்கத்தின் அனர்த்ததிற்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டின் படி, மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பிற்காக சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

சுமார் 113,000 வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிந்துள்ளன. இதன் மிகப் பெரிய தாக்கம் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர் சமூகங்கள் மற்றும் ஒழுங்கற்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மீது ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலர் 2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையிலேயே இந்தப் பேரழிவை எதிர்கொண்டனர்.

மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP) நிறைவடைந்தாலும், மீட்சிப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. பல குடும்பங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளதுடன், காணி உரிமை மற்றும் நிரந்தர வீட்டுவசதி தொடர்பான சிக்கலான சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன. அரசாங்கம் இடைக்கால தங்குமிடத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றம் மற்றும் நிரந்தர வீடமைப்பை ஆதரிக்கும் முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மீதமுள்ள இடைவெளிகளை நிரப்பவும், எந்தவொரு குடும்பமும் பின்தங்கவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பங்காளிகளும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன.

டித்வா சூறாவளியானது, காலநிலை மாற்றத்தின் விளைவாக இப்பிராந்தியத்தில் வானிலை சார்ந்த பேரனர்த்தங்கள் அடிக்கடியும் தீவிரத்துடனும் ஏற்பட்டு வருவதை நினைவூட்டும் தெளிவான எச்சரிக்கையாகும். எனவே, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரனர்த்தங்களைச் சமாளிப்பதற்காக பேரிடர் தயார்நிலையிலும் சமூகங்களின் மீட்சித் திறனிலும் முதலீடு செய்வது மிகவும் அவசியமானதாகும். அவசரகால பதிலளிப்பிலிருந்து 

மீட்பு, மீள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மீள உருவாக்கும் கட்டத்திற்குத் தற்போது கவனம் மாறியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து துணைநிற்க ஐக்கிய நாடுகள் சபை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.