500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரம்பமாகும் LPL 2026

The Lanka Premier League (LPL) 2026 will begin on July 17 at the Colombo SSC Ground with a grand opening ceremony featuring a 500-drone aerial display, team launches, trophy unveiling and performances by leading Sri Lankan artists including Yohani, Sanka Dineth and Centigradz.

500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரம்பமாகும் LPL 2026

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) 2026 தொடரின் தொடக்க விழா  ஜூலை 17ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வதேச தரம் வாய்ந்த இந்த உள்நாட்டு டி20 தொடரின் ஆறாவது அத்தியாயம் இந்த பிரம்மாண்டான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது.

ஏல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்கமுடியாத ஒரு தொடக்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ மரபுவழி நிகழ்வுகள், அணிகளின் அறிமுகம், எல்பிஎல் சம்பியன் கிண்ணம் அறிமுகம் மற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான 500 ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி (Drone Show) என கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத பல சுவாரஸ்யங்களை இந்தத் தொடக்க விழா உள்ளடக்கியுள்ளது.

 இந்த மாபெரும் மாலைப் பொழுதை மேலும் சிறப்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற யொஹானி, சங்க தினேத் மற்றும் செண்டிகிரேட்ஸ் ஆகிய இலங்கையின் முன்னணி கலைஞர்கள் வழங்குகின்ற இசை நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன. இதில் குறிப்பாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி யொஹானி, தனது உலகளாவிய ஹிட் பாடலான மெனிகே மகே ஹித்தே பாடல் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளார். அவருடன் இணைந்து பிரபல பாடகர் சங்க தினேத் மற்றும் செண்டிகிரேட்ஸ் இசைக் குழுவினரும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையில் தங்களது அதிரடி இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.


இந்த விழாவின் முக்கிய அங்கமாக, லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல 2026 எல்பிஎல் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான எல்பிஎல் சம்பியன் கிண்ணம் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் தருணம் மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கும், தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் பார்க்கும் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த காட்சி விருந்தாக அமையும். 


மேலும், இம்முறை களமிறங்கும் ஐந்து அணிகளும் ரசிகர்களுக்கு முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இது தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, ரசிகர்கள் மத்தியில் தத்தமது அணிகள் மீதான ஆதரவையும், உற்சாகத்தையும், அரவணைப்பையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.


இந்த விழாவிற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், 500 ட்ரோன்கள் கொழும்பு வானத்தை அலங்கரிக்கவுள்ளன. எல்பிஎல் பிராண்டிங் முத்திரைகள், கிரிக்கெட் சார்ந்த காட்சிகள், தேசத்தின் பெருமையை பறைசாற்றும் வடிவங்கள் மற்றும் அணிகளின் சின்னங்கள் ஆகியவற்றை இந்த ட்ரோன்கள் வானில் ஒளி வடிவில் சித்தரிக்கவுள்ளன. ரசிகர்களைப் பரவசப்படுத்தி, என்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு காட்சி விருந்தாக அமையவிருக்கும் இந்த ட்ரோன் காட்சி, 2026 எல்பிஎல் தொடரை ஒரு சர்வதேச அளவிலான விளையாட்டுக் திருவிழாவிற்குரிய தரத்திற்கு உயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் தொடக்க விழா குறித்து ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “2026 எல்பிஎல் என்பது வெறும் கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல. அது ரசிகர்களுக்கான ஒரு முழுமையான கொண்டாட்டமாகும். ஜூலை 17 ஆம் திகதி நடைபெறும் தொடக்க விழா விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து இலங்கையைக் கொண்டாடுவதாக அமையும். இந்த முதல் நாளில் ரசிகர்கள் பங்கெடுப்பதற்கான வலுவான காரணியாக இது இருக்கும். இந்தத் தொடக்க விழா, இந்த அத்தியாயம் முழுவதும் ஆற்றல், உற்சாகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டுக்கான அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார். 


இந்த நிலையில், லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு எல்பிஎல் அத்தியாயத்திலும் தொடக்க விழா என்பது மிக முக்கியமான ஒரு தருணமாகும். ஏனெனில், இது கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு வீரர்கள், அணிகள் மற்றும் ரசிகர்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டு தொடக்க விழா, தொடரின் வளர்ந்து வரும் பெருமையை பறைசாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 2020 எல்பிஎல் இன் மறக்கமுடியாத தொடக்கத்திற்காக ரசிகர்களை கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.


எனவே, இந்த ஆண்டு எல்பிஎல் தொடரின் தொடக்க விழாவும், முதல் போட்டியும் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், கொழும்பு நகரின் மையப்பகுதியில் கிரிக்கெட் திருவிழா களைகட்டவுள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்கள், குடும்பங்கள் மற்றும் அணிகளின் ஆதரவாளர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு, டி20 கிரிக்கெட்டின் விறுவிறுப்பும், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கும் இணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரவின் ஒரு பகுதியாக மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தொடக்க நாளன்று மாலை 5:00 மணிக்கு மைதானத்தின் வாயில்கள் ரசிகர்களுக்காகத் திறக்கப்படும். மாலை 6:15 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதோடு, இரவு 7:45 மணிக்கு இந்த அத்தியாயத்தின் முதல் போட்டி தொடங்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாவைக் காண ரசிகர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். லங்கா பிறீமியர் லீக் 2026 தொடரானது ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளதுடன், இதில் ஐந்து முன்னணி அணிகள், இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சர்வதேச டி20 நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.