இந்தியாவில் சுயநிதித் திட்டத்தின் கீழ் உயர்கல்வி: இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்
The High Commission of India in Colombo has invited applications from eligible Sri Lankan students for MBBS, BDS, Engineering, Pharmacy, Architecture and other undergraduate programmes under the Self-Financing Scheme for the 2026–27 academic year.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், 2026–2027 கல்வியாண்டிற்கான சுயநிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இளநிலைப் பட்டப்படிப்புகளைப் பயில விரும்பும் தகுதியான இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்த வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுடன், PIO/OCI அட்டைதாரர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்காத இந்தியப் பிரஜைகள் (NRI) இதற்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் MBBS, BDS, BE, B.Tech, B.Pharm, B.Arch, பொறியியல் டிப்ளோமா மற்றும் மருந்தியல் டிப்ளோமா ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேசிய தகுதித் தேர்வான NEET -இல் குறைந்தது 50வது பர்சென்டைல் பெறுவதுடன், உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) இயற்பியல், இரசாயனவியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தலா குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
BE, B.Tech மற்றும் பொறியியல் டிப்ளோமா படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா குறைந்தது 60 சதவீதமும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
B.Pharm மற்றும் மருந்தியல் டிப்ளோமா படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 60 சதவீதமும், ஆங்கிலத்தில் 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
B.Arch படிப்பில் சேர விரும்புவோர், இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள Council of Architecture நிர்ணயித்துள்ள திறனறித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவில், வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை, G.C.E. O/L, G.C.E. A/L சான்றிதழ்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து ஆதார ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 ஜூலை 24 ஆம் திகதிக்குள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
editor