‘ஷீ ஜின்பிங் – சீன ஆட்சிமுறை’ நூலின் 5ஆம் பாகம் கொழும்பில் வெளியீடு

Volume 5 of Xi Jinping: The Governance of China was launched in Colombo, highlighting President Xi Jinping's governance philosophy, modernization strategy, and China–Sri Lanka cooperation through a special conference.

‘ஷீ ஜின்பிங் – சீன ஆட்சிமுறை’ நூலின் 5ஆம் பாகம் கொழும்பில் வெளியீடு

“ஷீ ஜின்பிங் – சீன ஆட்சிமுறை” (Xi Jinping: The Governance of China ) என்ற நூலின் ஐந்தாவது பாகம் வெள்ளிக்கிழமை (03) கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள், ஆட்சிமுறை, தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய இந்த நூலின் வெளியீட்டு விழா, இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

“இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து பயணிப்பதற்கான அனுபவப் பகிர்வு” (Sharing Experiences for Joining Hands on the Path to Modernization) என்ற கருப்பொருளில் மாநாடும், கலந்துரையாடல் நிகழ்வும் இதனுடன் இணைந்து இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்தன, இந்த நூல் கல்வி மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்று அடையாளத்தையும் கலாசார மரபையும் பாதுகாத்துக்கொண்டு முன்னேற விரும்பும் எந்த நாட்டிற்கும் இந்த நூல் பெறுமதியான வழிகாட்டியாக அமைகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீன நவீனமயமாக்கலுக்கான தெளிவான கட்டமைப்பை இந்த நூல் முன்வைப்பதாகவும், சோசலிச அடித்தளம், பொருளாதார சீர்திருத்தம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், நவீன கல்வி மற்றும் கலாசார பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய அபிவிருத்தி மாதிரியை விளக்குவதாகவும் அவர் கூறினார்.

நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, இந்த நூல் சீனாவின் ஆட்சிமுறை, அபிவிருத்தி, சீர்திருத்தம், புதுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த பார்வைகளை உலகிற்கு எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கும், உலக அமைதி, கூட்டு வளமை மற்றும் நாடுகளுக்கிடையிலான வலுவான கூட்டாண்மைக்கும் சீன ஜனாதிபதி  ஷீ ஜின்பிங்கின் சிந்தனைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உட்கட்டமைப்பு, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனா, இலங்கையின் நம்பகமான அபிவிருத்தி பங்காளியாக இருந்து வருவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இரப்பர் - அரிசி ஒப்பந்தம் (Rubber-Rice Pact ) மூலம் ஆரம்பமான இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு இன்று மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 15 சதவீதம் அதிகரித்து 6.16 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாகவும் நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் சஞ்சீவ விமலகுணரத்ன, மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்கால சமூகத்தை உருவாக்கும் ஷீ ஜின்பிங்கின் பார்வை, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கை–சீனா உறவுகளில் ஏற்கனவே பிரதிபலித்து வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கீகனகே வீரசிங்க, புதிய யுகத்திற்கான சீன தனிச்சிறப்புகளுடனான சோசலிச சிந்தனை என்பது சமகால சீனாவின் மார்க்சிய சிந்தனை மட்டுமல்ல, 21ஆம் நூற்றாண்டின் மார்க்சிய சிந்தனையாகவும் விளங்குகிறது எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர், அரசாங்க அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பதிப்பகத் துறை பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.