இலங்கைக்கு மீண்டும் உயர்மட்ட நடுத்தர வருமான நாடு அந்தஸ்து – உலக வங்கியின் புதிய தரப்படுத்தல்

2025 ஜூலை 1 முதல் உலக வங்கி இலங்கையை மீண்டும் உயர்மட்ட நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தியுள்ளது. பொருளாதார மீட்சி, GNI உயர்வு மற்றும் புதிய தரப்படுத்தலின் முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ளுங்கள்.

இலங்கைக்கு மீண்டும் உயர்மட்ட நடுத்தர வருமான நாடு அந்தஸ்து – உலக வங்கியின் புதிய தரப்படுத்தல்

இலங்கையை கீழ்-நடுத்தர வருமான நாடுகள் (Lower-Middle-Income) பட்டியலிலிருந்து உயர்மட்ட நடுத்தர வருமான நாடுகள் (Upper-Middle-Income) பட்டியலுக்கு உலக வங்கி மீள்தரப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் இவ்வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

உலக வங்கி வெளியிட்டுள்ள ஊடக விளக்கக் குறிப்பின்படி, இது இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை அல்லது நிதி ஸ்திரத்தன்மையை முழுமையாக பிரதிபலிப்பதாக கருதக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உலக வங்கி, ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானம் (GNI) – ஒருவருக்கான சராசரி வருமானம் (GNI per capita) அடிப்படையில் நாடுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. இவை ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி புதுப்பிக்கப்படுகின்றன. இந்த வகைப்பாடு, பணவீக்கம், நாணய மாற்று விகிதம் மற்றும் முந்தைய ஆண்டின் வருமானத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. 

2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதம் வளர்ச்சி பெற்றது. தொழிற்துறை மீட்சியும், நிதி மற்றும் சுற்றுலா சேவைகள் உள்ளிட்ட சேவைத் துறையின் வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

மேலும், மக்கள் தொகை சற்றுக் குறைந்ததும், நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் இணைந்து, இலங்கையின் ஒருவருக்கான தேசிய வருமானம் 4,670 அமெரிக்க டொலராக உயர்ந்ததால், உயர்மட்ட நடுத்தர வருமான நாடுகள் பட்டியலில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.  

உலக வங்கி, இலங்கை ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக உயர்மட்ட நடுத்தர வருமான நாடாக அறிவிக்கப்பட்டதை நினைவூட்டியுள்ளது. எனினும், 2020 ஆம் ஆண்டில் மீண்டும் கீழ்-நடுத்தர வருமான நாடாக தரமிறக்கப்பட்டது. பின்னர், 2022 ஆம் ஆண்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு கடன் தவறுதல் மற்றும் அதிக பணவீக்கம் ஆகியவற்றை நாடு எதிர்கொண்டது. 

இந்த புதிய தரப்படுத்தல் பொருளாதார முன்னேற்றத்தை அங்கீகரித்தாலும், பல்வேறு அபாயங்கள் தொடர்கின்றன என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அவற்றில், ஆண்டுதோறும் தரப்படுத்தல் மறுபரிசீலனை செய்யப்படுவதால் மீண்டும் தரமிறங்கும் அபாயம், அரசின் கடன் சுமை இன்னும் அதிகமாக இருப்பது, ஒருவருக்கான சராசரி வருமானம் மக்களிடையேயான வருமானப் பகிர்வை பிரதிபலிக்காதது, வறுமை நிலை 2022-க்கு முந்தைய நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பாதது, எதிர்கால பொருளாதார வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்பன முக்கிய சவால்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, தெற்காசியாவில் உயர்மட்ட நடுத்தர வருமான நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவது அரிதானது. சுகாதாரம், கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி குறியீடுகளில் நீண்டகாலமாக முன்னிலையில் இருந்த இலங்கையின் சாதனைகளுடன் இந்த புதிய வருமான வகைப்பாடு தற்போது ஒத்துப்போகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.