எரிபொருள் விலை உயர்வு : அவுஸ்திரேலியா – நியூசிலாந்து விமான சேவைகள் பாதிப்பு
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், அவுஸ்திரேலியா–நியூசிலாந்து இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் பல சேவைகளை ரத்து செய்துள்ளதுடன், பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழ்நிலை காரணமாக விமான எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, ஜெட்ஸ்டார் நியூசிலாந்து (Jetstar New Zealand) நிறுவனம் தனது பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மே மாதத்திற்கான திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் சுமார் 12 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்களால் ஆக்லாந்து, கிறிஸ்ட்சேர்ச், வெலிங்டன் போன்ற நியூசிலாந்தின் முக்கிய நகரங்களுக்கும், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் போன்ற அவுஸ்திரேலிய நகரங்களுக்கும் இடையிலான பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் சந்தித்த சிரமங்களுக்கு வருந்துவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக விமான எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், செயல்பாட்டு செலவுகளும் உயர்ந்துள்ளன. இதனால் விமான அட்டவணையில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
இதேவேளை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் கிடைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் காரணமாக வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் சில உள்நாட்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. அதேபோன்று மியான்மர் நாட்டின் விமான நிறுவனங்களும் தங்களது உள்நாட்டு விமான சேவைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய அரசியல் பதற்றங்களின் தாக்கம் விமானப் போக்குவரத்து துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு எதிர்காலத்தில் மேலும் பல விமான சேவைகளின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் என விமானத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
editor