செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கில் CDB அடுத்த கட்ட வளர்ச்சி

CDB நிறுவனம் ரூ.200 பில்லியன் சொத்து மதிப்பை கடந்த வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது. AI, டிஜிட்டல் மாற்றம் மற்றும் இலாப வளர்ச்சியுடன் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு தயாராகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கில் CDB அடுத்த கட்ட வளர்ச்சி

சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பைனான்ஸ் பிஎல்சி (Citizens Development Business Finance PLC - CDB) நிறுவனம், 2026 மார்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் மற்றுமொரு வலுவான நிதி மற்றும் செயற்பாட்டு ரீதியான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது ரூ. 200 பில்லியன் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொத்து மதிப்பை கடந்துள்ளதோடு, ரூ. 4.5 பில்லியன் வரிக்குப் பிந்தைய இலாபத்தை பதிவு செய்து, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் தனது நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 37% இனால் அதிகரித்து, ரூ. 214.7 பில்லியன் ஆக விரிவடைந்துள்ளதுடன், அதன் கடன் வழங்கும் பிரிவனாது, ஈர்க்கக்கூடிய வகையில் 53% இனால் அதிகரித்து, ரூ. 169.2 பில்லியனாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் வழங்கப்பட்ட ரூ. 110 பில்லியன் இற்கும் அதிகமான புதிய கடன்கள் இதற்குப் பக்கபலமாக அமைந்திருந்தன. மொத்த வருமானம் 18% இனால் அதிகரித்து, ரூ. 30.2 பில்லியனாக உயர்ந்ததுடன், வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 8.2 பில்லியன் ஆகவும், வரிக்குப் பிந்தைய இலாபம் 12% இனால் அதிகரித்து ரூ. 4.5 பில்லியன் ஆவும் உயர்வடைந்துள்ளது.

பணிப்பாளர் சபையானது இந்த நிதியாண்டிற்காக மொத்தமாக ரூ. 1.25 பில்லியன் இலாபப் பங்கு (dividend) கொடுப்பனவை அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16.67% அதிகமாகும். இதில் ஒரு பங்கிற்கு ரூ. 7.50 (பங்குப்பிரிப்பிற்கு முன்) இடைக்கால இலாபப் பங்கும், பிரிக்கப்பட்ட மூலதனத்தில் ஒரு பங்கிற்கு ரூ. 1.00 இறுதி இலாபப் பங்கும் உள்ளடங்கும். சந்தை அணுகல் தன்மை மற்றும் சந்தைப் புழக்கத்தை (liquidity) விரிவுபடுத்தும் நோக்கில், வாக்குரிமையுள்ள மற்றும் வாக்குரிமையற்ற இரண்டு பங்குகளையும் ஒரு பங்கிற்கு பத்து பங்குகள் (share subdivision) எனும் வீதத்திலான பங்குப் பிரிப்பையும் பணிப்பாளர் சபை 2026 ஏப்ரலில் நிறைவு செய்தது.

ஒழுங்குடனான கடன் ஒப்புதல் நடைமுறைகள், மேம்பட்ட கடன் கண்காணிப்பு, தன்னியக்க கடன் தீர்மானங்கள், மிகவும் நிலையான பொருளாதாரச் சூழல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், நிகர செயற்பாடற்ற கடன் விகிதம் (Net Non-Performing Loan Ratio) முந்தைய ஆண்டுடனான 3.1% இலிருந்து 1.53% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

நிறுவனத்தின் இந்தச் செயற்றிறன் குறித்து அதன் தலைவர் அலஸ்டெய்ர் கொரேரா (Alastair Corera) கருத்துத் தெரிவிக்கையில், "2025/26 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் சாதகமான சந்தை நிலவரங்களின் விளைவு மட்டுமல்லாது, திட்டமிட்ட மூலோபாயச் செயலாக்கம், ஒழுங்குடனான நிர்வாகம் மற்றும் எமது திறன்களை வலுப்படுத்துவதற்காக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் பெறுபேறாகும். ரூ. 200 பில்லியன் சொத்து மைல்கல்லைக் கடந்துள்ள நிலையில், CDB தற்போது தனது அடுத்தகட்ட மூலோபாய வளர்ச்சி படியை அடைவதற்கு தன்னை உறுதியாக தயார்படுத்தியுள்ளது என்றார்.

CDB இன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலோபாயம், வலுவூட்டப்பட்ட இடர் முகாமைத்துவ கட்டமைப்பு, நிலைபேறான தன்மைக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியன நிறுவனத்தின் மீளெழுச்சித் திறனை மேம்படுத்தியுள்ளதோடு, எவ்வித தடையுமின்றி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை விரிவாக்கவும் வழிவகுத்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

2025/26 நிதியாண்டை CDB இன் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளில் ஒன்று என, நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், "இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எமது மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பித்தபோது, CDB ஆனது ரூ. 1 பில்லியனிற்கும் குறைவான சொத்து மதிப்பைக் கொண்ட ஒரு நிறுவனமாக இருந்தது. இன்று, நாம் வலுவான நிதி நிலை, பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஆதாரங்கள், மேம்பட்டு வரும் சொத்துத் தரம், அளவிடக்கூடிய டிஜிட்டல் திறன்கள், எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான எதிர்கால திட்ட வரைபடத்தைக் கொண்ட, ரூ. 214 பில்லியன் பெறுமதியான நிறுவனமாக நிமிர்ந்து நிற்கிறோம்.

நிறுவனத்தின் வளர்ச்சியின் அளவு தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற அதேவேளையில், நிறுவனத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியானது இலாபத் தன்மையை மேம்படுத்துதல், மூலதனத் திறனை அதிகரித்தல், வருமானங்களை வலுப்படுத்துதல், பங்குதாரர்களுக்கு உயர்தர நீண்டகால மதிப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்திலிருந்து செயற்கை நுண்ணறிவை (AI-enabled) முழுமையாகப் பயன்படுத்தும் நிறுவனமாக மாறுவதற்கு CDB எடுத்துள்ள தீர்மானமானது, இந்த வருடத்தின் முக்கிய மூலோபாய முன்னேற்றமாக அமைந்தது. இது ஊழியர்களுக்கு நிறுவனத் தரம் சார்ந்த (enterprise-grade) generative AI திறன்களை வழங்குதல், வணிக செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பயணம் முழுவதும் செயற்கை நுண்ணறிவை உட்புகுத்துதல் மற்றும் சிக்கலான செயற்முறைகளைத் தன்னியக்கமாக்குவதற்கு agentic AI தீர்வுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற, ஒரு விரிவான திட்ட வரைபடத்தின் மூலம் ஆதரிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் டிஜிட்டல் மயமாக்கலானது, தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதில் CDB SELF தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் (YoY) 93% இனால் அதிகரித்துள்ளதுடன், மொத்த வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளில் 74% டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக அமைந்துள்ளன. 

நிதிச் செயல்திறனுக்கு அப்பால், தனது ஒருங்கிணைந்த மதிப்பு உருவாக்க மாதிரியின் மூலம் அனைத்து பங்குதாரர் குழுக்களிடையேயும் அர்த்தமுள்ள மதிப்பை CDB தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 

நிறுவனம் சமூகம் சார்ந்த திட்டங்களுக்காக ரூ. 49 மில்லியனை முதலீடு செய்துள்ளதுடன், அனைத்து மாவட்டங்களிலும் அதன் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் கணனி ஆய்வுகூடங்கள்' திட்டத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்ததுடன், மன இறுக்க (autism) குறைபாடுகளுக்கான தலையீட்டு முன்முயற்சிகளை முன்னெடுத்தல், சிசுதிரி (Sisudiri) புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் கல்விக்கான ஆதரவையும் வலுப்படுத்தியது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாடு, மின்சார வாகனப் பயன்பாடு, காலநிலை மீள்திறன், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில், ரூ. 31 பில்லியனிற்கும் அதிக Green financing பிரிவு மூலம் CDB தனது நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்தியுள்ளது.


எதிர்வரும் 5 வருடங்களில் காபன் வெளியீட்டை 30% இனால் குறைப்பது தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடன் வழங்கும் முடிவுகள் மற்றும் இடர் மதிப்பீட்டு செயன்முறைகளில் சூழல் காரணிகளும் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

நிலைபேறான தன்மை கொண்ட நிறுவனங்கள் தலைமத்துவ தொடர்ச்சியின் மூலமே கட்டமைக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து, கவனமாக வடிவமைக்கப்பட்ட தலைமைத்துவ மாற்றக் கட்டமைப்பின் மூலம் தனது அடுத்த தலைமைத்துவ திட்டமிடலுக்கான அர்ப்பணிப்பை CDB உறுதிப்படுத்துகின்றது. பல வருடங்களாக உருவாக்கப்பட்ட இத்திட்டமானது, சர்வதேச வெளிப்பாடு, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் படிப்படியாக பாரிய பொறுப்புகளை வழங்குவதன் மூலம் அடுத்த தலைமுறை தலைவர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது நிறுவனத்தின் தொடர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால நிலைபேறான தன்மையை உறுதி செய்கிறது.

அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கை தனது பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், CDB நிறுவனம் ஒரு வலுவான நிலையுடன் 2026/27 நிதியாண்டிற்குள் கால்பதிக்கிறது. வலுவான நிதி நிலை, பன்முகப்படுத்தப்பட்ட நிதித் தளம், மேம்பட்டு வரும் சொத்துத் தரம், அளவிடக்கூடிய டிஜிட்டல் செயற்பாட்டு மாதிரி, உறுதியான நிலைபேறான கட்டமைப்பு மற்றும் AI வழிநடத்தும் உருமாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை கொண்டுள்ள இந்நிறுவனம், அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்ச்சியாக நிலையான மதிப்பை உருவாக்குவதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளது.