இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளி : பாரிஸ் – கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - பிரான்ஸ் தூதுவர்

French Ambassador Rémi Lambert announced that French Bee will launch direct flights between Paris and Colombo three times a week from next year, reaffirming France's commitment to Sri Lanka's economic growth, investment, education, tourism and maritime cooperation.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளி : பாரிஸ் – கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் எமக்கு பொதுவான நலன்களும் பொறுப்புகளும் உள்ளன எனத் தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ரெமி லெம்பர்ட், அடுத்த ஆண்டிலிருந்து French Bee விமான சேவை, பாரிஸ் – கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரான்ஸ் தேசிய தினத்தை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டதுடன் பல நாடுகளின் இராஜதந்திரிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ரெமி லெம்பெர்ட் (Rémi Lambert),

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் (UN Charter) மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு இயல்பான பங்காளியாக பிரான்ஸ் விளங்குகிறது. எங்களது அருகாமையில் சுமார் பத்து இலட்சம் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்கின்றனர். இந்தப் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் எமக்கு பொதுவான நலன்களும் பொறுப்புகளும் உள்ளன.

கொழும்பில், கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்புத் திறன் மற்றும் கடல்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பிராந்திய கடல்சார் ஆய்வு மையம் (Regional Center for Maritime Studies) மூலம் இணைந்து செயல்படும் ஒத்துழைப்பு தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும், தெற்காசியா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், பசிபிக் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

பிரான்ஸ், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காளியாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான CMA CGM, கொழும்புத் துறைமுக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆழ்கடல் ஒளியிழை (Deep Sea Cable) அமைக்கும் பிரெஞ்சு நிறுவனமான Orange Marine இன் கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட்ஸ் நிறுவனத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, பிரான்சின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான Michelin, இலங்கையில் அதிக பணியாளர்களைக் கொண்ட பிரெஞ்சு நிறுவனமாக திகழ்கிறது. மேலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் ஏழாவது பெரிய குழுவாக பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய Airbus விமானங்களில் பயணம் செய்கின்றனர், அவற்றில் சில பிரான்சில் தயாரிக்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டிலிருந்து French Bee விமான சேவை, பாரிஸ் – கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

பிரான்ஸ், இலங்கையின் நிலைத்தன்மை மற்றும் மீளெழுச்சியை வலுப்படுத்தும் நம்பகமான பங்காளியாகவும் உள்ளது. பிரெஞ்சு அபிவிருத்தி முகாமை (AFD), இந்த ஆண்டு இலங்கையுடனான தனது 20 ஆண்டுகால ஒத்துழைப்பை கொண்டாடுகிறது. 2004 சுனாமிக்குப் பிந்தைய மறுகட்டமைப்பிலிருந்து தொடங்கிய இந்த ஒத்துழைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, வேளாண்மை மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பல துறைகளில் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோதும், பிரெஞ்சு அபிவிருத்தி முகாமை ( AFD ) தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கியது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கும் பிரான்ஸ் ஆதரவு அளித்தது. அண்மையில், டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது.

பிரெஞ்சு அபிவிருத்தி முகாமையின் ஒரு அங்கமான Expertise France, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பசுமை மாற்றம், ஆற்றல் மாற்றம், காலநிலை நடவடிக்கைகள் மற்றும் ஜெர்மனியின் GIZ அமைப்புடன் இணைந்து சுற்றுச்சுழல் பொருளாதார (Circular Economy) திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உயர்கல்வி மற்றும் கல்வித் துறையிலும் பிரான்ஸ் ஒரு சிறந்த பங்காளியாக உள்ளது. Campus France Sri Lanka மூலம் இலங்கை மாணவர்கள் பிரான்சில் கல்வி கற்க முடியும். அங்கு பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களுக்காக சுமார் 1,500 உயர்கல்வி பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

அதேவேளை, இலங்கையின் பல பாடசாலைகளிலும், கொழும்பு, கண்டி, மாத்தறை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இயங்கும் Alliance Française மையங்களின் ஊடாகவும் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. இம்மையங்கள் கலாசார பரிமாற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. கொழும்பிலுள்ள French International School பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்று சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது.

இந்தப் பல்துறை ஒத்துழைப்புகள், எதிர்காலத்தை நோக்கிய வலுவான அரசியல் உறவுகளுக்கும் அடித்தளமாக உள்ளன. கடந்த ஆண்டு இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, கலாசார அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் ஆகியோர் பிரான்சிற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு பிரான்சின் செனட் உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு பிரதிநிதிக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்தன.

மேலும், இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் நியூடெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகிய இருவரும் கலந்துரையாடினர்.

இறுதியாக, இலங்கையில் தொழில்முறைச் செயல்பாடுகளின் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தி வரும் பிரெஞ்சு குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொழும்பிலோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளிலோ நீங்கள் எங்கு இருந்தாலும், பிரான்ஸ் தூதரகத்தின் சேவைகள் எப்போதும் உங்களுடன் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.