இலங்கை கடற்படைக்கு ஜப்பான் 2.1 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்த RHIBs படகுகளைக் கொள்வனவு செய்ய ஜப்பான் 2.1 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்குகிறது.

இலங்கை கடற்படைக்கு ஜப்பான் 2.1 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 2.1 பில்லியன் ரூபா (ஒரு பில்லியன் ஜப்பானிய யென்) நிதியுதவியை வழங்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தங்கள் கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) மற்றும் இலங்கை திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துயகொந்தா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஜப்பானின் 2026ஆம் நிதியாண்டுக்கான உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் (Official Security Assistance – OSA) கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த நிதியுதவியின் மூலம் இலங்கை கடற்படைக்குத் தேவையான இறுக்கமான அடிப்பாகத்தைக் கொண்ட ஊதப்பட்ட படகுகள் (Rigid Hull Inflatable Boats – RHIBs) கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு, கடலோரப் பகுதிகளை அவதானித்தல் மற்றும் அனர்த்த நிலைமைகளின்போது விரைவான மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தப் படகுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதன் மூலம் இலங்கை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கத் திறன்களை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு OSA திட்டத்தின் கீழ் ஜப்பான் வழங்கும் இரண்டாவது உதவித் திட்டம் இதுவாகும்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இணக்கம் காணப்பட்ட முதலாவது திட்டத்தின் கீழ், ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles – UAVs) கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த ஆளில்லா வானூர்திகளும் இலங்கை கடற்படையின் கண்காணிப்பு, அவதானிப்பு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கம் 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய OSA திட்டம், ஒத்த கருத்துடைய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தடுப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட மானிய உதவிக் கட்டமைப்பாகும்.

ஜப்பானின் இந்த உதவித் திட்டங்கள் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் (Free and Open Indo-Pacific – FOIP) என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதற்கு பொருளாதாரம், சமூகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நாடுகள் தன்னிறைவு மற்றும் மீள்திறனைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, ஜப்பானும் இலங்கையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பகிர்ந்துகொள்ளும் தீவு நாடுகள் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கடல்சார் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கப் பணிகளை சுயாதீனமாக முன்னெடுக்கும் இலங்கையின் திறனை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் இலங்கை ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கும் ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.