நீர் வழங்கல் மற்றும் சுகாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் நிதியுதவி
இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை சீர்திருத்தங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது.
இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையை மறுசீரமைத்து வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் சுகாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் உபதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
நாட்டின் நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சேவைத் தரம் மற்றும் நீர்த் துறையின் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
நீர் வள முகாமைத்துவம், செயற்பாட்டு மற்றும் நிதி வினைத்திறன் குறைபாடுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சமூக உள்ளடக்கத்தில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை உள்ளிட்ட முக்கிய சவால்களைத் தீர்ப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் கீழ், நீர் வள நிர்வாகத்தை வலுப்படுத்துதல், குடிநீரின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சுகாதார மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், நீர் சேமிப்பை ஊக்குவித்தல், நீர்க் கட்டண மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துதல், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் காலநிலை நிதியைத் திரட்டுதல் போன்ற மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கையின் நீர்த் துறையில் கொள்கை அடிப்படையிலான கடன் முறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது திட்டமாக இது அமைந்துள்ளது. இத்திட்டம் இரண்டு உபதிட்டங்களைக் கொண்டுள்ளது.
இதன் முதலாவது உபதிட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன், நீர் நிர்வாகம், காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் ஆற்றல், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான கொள்கை, ஒழுங்குமுறை மற்றும் நிறுவன அடித்தளங்களை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த உபதிட்டம் 2024ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது உபதிட்டத்திற்கும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதுடன், நிலையான, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை உருவாக்குவதற்கான துறைசார் மறுசீரமைப்புகளை மேலும் ஆழப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த நிதியுதவியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை அடிப்படையிலான 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து வழங்கப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும் உள்ளடங்குகின்றன.
இலங்கை தனது பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுக்கான நிதி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையில் முன்னுரிமை மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கும் இந்தக் கடனுதவி முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இத்திட்டத்தின் செயற்படுத்தும் முகவராகவும் அதேவேளை நடைமுறைப்படுத்தும் முகவராகவும் செயற்படுகிறது. பிரதமர் அலுவலகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியன ஏனைய நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளன.
இதற்கான கடன் ஒப்பந்தங்கள் 2026 நவம்பர் 06ஆம் திகதி கொழும்பிலுள்ள பொதுத் திறைசேரியில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான வதிவிடத் தூதரகத்தின் நாட்டுப் பணிப்பாளர் ஷனன் கவ்லினும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
editor