இலங்கைக்கான பட்டுப்பாதை முன்முயற்சியின் வாய்ப்புகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கருத்தரங்கு

BRISL கருத்தரங்கில் 25 பல்கலைக்கழக மாணவர்கள் பட்டுப்பாதை முன்முயற்சி, இலங்கை–சீன உறவுகள், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி குறித்து அறிந்துகொண்டனர்.

இலங்கைக்கான பட்டுப்பாதை முன்முயற்சியின் வாய்ப்புகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கருத்தரங்கு

25 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு; பொருளாதாரம், இராஜதந்திரம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் நிபுணர்கள் விளக்கம்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சி (Belt and Road Initiative – BRI) எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் புரிதலை விரிவுபடுத்தும் நோக்கில், இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் ஆதரவுடன், பட்டுப்பாதை முன்முயற்சி இலங்கை (Belt and Road Initiative Sri Lanka – BRISL) அமைப்பினால் கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

“இலங்கையும் பட்டுப்பாதை முன்முயற்சியும்: நிலைபேறான அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த வாய்ப்புகளை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட புரிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

அமாரி கொழும்பு ஹோட்டலில் கருத்தரங்கு அமர்வுகள் இடம்பெற்றதுடன், ஹுவாவே (Huawei), போர்ட் சிட்டி கொழும்பு மற்றும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) ஆகிய இடங்களுக்கான கல்விசார் விஜயங்களும் நிகழ்ச்சித்திட்டத்தில் இடம்பெற்றன.

கொழும்புப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 25 இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் இதில் பங்கேற்றனர். 

பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேசக் கற்கைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், நிதி, இராஜதந்திரம், புவிசார் அரசியல், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான நிபுணர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

பங்கேற்பாளர்களை வரவேற்ற BRISL பணிப்பாளர் மாயா மயூரன், பட்டுப்பாதை முன்முயற்சியை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மட்டும் மட்டுப்படுத்திப் பார்க்காமல், வர்த்தகம், முதலீடு, இராஜதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பரந்த தளங்களிலும் ஆராயுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச ஒத்துழைப்பு இலங்கையின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப அமைவதுடன், மக்களுக்கு நடைமுறையில் பயனளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கேள்விகளைக் கேட்பதற்கும், ஆதாரங்களை ஆராய்வதற்கும், மாறுபட்ட கருத்துகளை மதித்து விவாதிப்பதற்கும் அவர் மாணவர்களை ஊக்குவித்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களையும் கல்வித் துறைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையே தொடர்புகளை உருவாக்கியதுடன், இந்த முன்முயற்சியுடன் தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு இக்கருத்தரங்கு தளமமைத்தது.

நிதியிடல், இராஜதந்திரம் மற்றும் மூலோபாய சுயாதீனம்

கருத்தரங்கின் முதல் நாள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பொருளாதார நிபுணர் கலாநிதி வாகிஷா குணசேகரவின் உரையுடன் ஆரம்பமானது. புத்தாக்கமான நிதியிடல், கடன் மறுசீரமைப்பு மற்றும் மூலோபாய சுயாதீனம் ஆகியவை தொடர்பில் அவர் விளக்கமளித்தார்.

ஒரு நாட்டின் நிதியிடல் தெரிவுகள் அதன் சுயாதீனமான கொள்கைத் தீர்மானங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். கடன் நிபந்தனைகள், நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் செலவுகள், நன்மைகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பவற்றின் முக்கியத்துவமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

நிதியை வழங்குவது யார், அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளைச் சுமப்பது யார், முதலீடுகள் இலங்கையின் எதிர்காலத் தெரிவுகளை விரிவுபடுத்துகின்றனவா என்பன தொடர்பில் சிந்திக்குமாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பொருத்தமான நிதி மூலங்களை நன்கு தயாரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைப்பதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

 சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை வளர்ச்சி மற்றும் இலங்கை–சீன உறவுகளின் வரலாற்றுப் பின்னணியில் பட்டுப்பாதை முன்முயற்சியை கலாநிதி ஜோர்ஜ் ஐ. எச். கூக் ஆராய்ந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முக்கிய மைல்கல்லாக விளங்கிய இறப்பர்–அரிசி ஒப்பந்தம் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தியப் பெருங்கடலில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் இலங்கையின் மூலோபாய சுயாதீனம் குறித்து அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே உரையாற்றினார். இலங்கையின் கடல்சார் அமைவிடம், பாதுகாப்பான வர்த்தகப் பாதைகளின் முக்கியத்துவம் மற்றும் சுயாதீனமான தீர்மானங்களைப் பேணிக்கொண்டு சர்வதேச உறவுகளைச் சீராக முன்னெடுப்பதன் அவசியம் ஆகியவற்றை அவர் விளக்கினார்.

பட்டுப்பாதை முன்முயற்சியின் பொருளாதார வாய்ப்புகளும் சவால்களும்

இரண்டாம் நாள் அமர்வில், “தலைப்புச் செய்திகளுக்கு அப்பால்: இலங்கைக்கான பட்டுப்பாதை முன்முயற்சியின் பொருளாதாரம்” என்ற தலைப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன உரையாற்றினார்.

கொழும்புத் துறைமுகத்தில் முன்மொழியப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத் (South Asia Commercial and Logistics Hub – SACLH) திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings – CMPort) நிறுவனம் விலகியமை குறித்து அவர் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

இது இழக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச ஒத்துழைப்பை நடைமுறைப் பொருளாதார நன்மைகளாக மாற்றுவதற்கு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம் என வலியுறுத்தினார்.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், சீனாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான கலாநிதி பாலித டி. பி. கொஹன, இலங்கை–சீன உறவுகளின் எதிர்காலம் குறித்து இராஜதந்திர மற்றும் சட்டக் கண்ணோட்டத்தில் உரையாற்றினார்.

தனது நீண்டகால இராஜதந்திர அனுபவத்தின் அடிப்படையில், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அவர் ஆராய்ந்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் சீனா அடைந்துள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாய்ப்புகளிலிருந்து பயனடையும் வகையில் இலங்கை மூலோபாய ரீதியாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இருதரப்பு ஒத்துழைப்பை நடைமுறை அபிவிருத்தி வாய்ப்புகளாக மாற்றுவதற்கு தகவலறிந்த அணுகுமுறையும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, BRISL பணிப்பாளர் மாயா மயூரன், “தரமான பட்டுப்பாதை முன்முயற்சியும் இலங்கையும்: நிலைபேறான அபிவிருத்திக்கான புதிய வழிகளைத் திறத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சர்வதேச ஒத்துழைப்பை தேசியத் தேவைகளுடன் இணைப்பதுடன், முதலீடுகள் நீண்டகால பொருளாதார மற்றும் சமூகப் பெறுமதியை உருவாக்குவதை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

நிதி நிலைபேறுத்தன்மை, வெளிப்படையான கொள்வனவு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகங்களுடனான கலந்தாலோசனை மற்றும் நம்பகமான பராமரிப்பு ஆகியவை அபிவிருத்தித் திட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக அவர் குறிப்பிட்டார்.

உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மட்டும் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்திய அவர், திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் வழங்குநர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளுக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவற்றையும் உள்ளடக்க வேண்டும் என்றார்.

நடைமுறைச் செயற்பாட்டுத் திட்டமொன்றை முன்வைத்த அவர், சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட திட்டங்கள், உட்கட்டமைப்புக்கும் உற்பத்திப் பொருளாதாரத் துறைகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் மற்றும் பொருளாதார, சமூகத் தாக்கங்களை அளவிடும் முறைகள் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

உட்கட்டமைப்பு முதலீடுகள் மக்களுக்கும் வணிகங்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் உருவாக்கும் நீண்டகாலப் பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே அவரது உரையின் மையக் கருத்தாக அமைந்தது.

கலந்துரையாடல்களும் கல்விசார் கள விஜயங்களும்

ஒவ்வொரு உரையைத் தொடர்ந்தும் கேள்வி–பதில் அமர்வுகள் இடம்பெற்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும், உரைகளில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராயவும் வாய்ப்புப் பெற்றனர்.

BRISL பணிப்பாளர் யசிரு ரணராஜா இந்தக் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தியதுடன், மாணவர்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து சுறுசுறுப்பாகப் பங்கேற்க ஊக்குவித்தார். BRISL அமைப்பின் சமோதி பொரலெஸ்ஸவும் ஓர் அமர்வை நெறிப்படுத்தினார்.

கருத்தரங்கின் முக்கிய அம்சமாக அமைந்த கல்விசார் விஜயங்கள், வகுப்பறைக் கலந்துரையாடல்களை தொழில்நுட்பம், முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான நடைமுறை அனுபவங்களுடன் இணைத்தன.

ஹுவாவே நிறுவனத்திற்கான விஜயத்தின்போது, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்துகொண்டனர். தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுவரும் பொருளாதாரத்தில் இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.

போர்ட் சிட்டி கொழும்புக்கான விஜயம், நகர அபிவிருத்தி, முதலீடு மற்றும் பிராந்திய வர்த்தக, சேவை மையமாக இலங்கை வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த புரிதலை ஏற்படுத்தியது. வளர்ந்துவரும் தொழில்துறைகள், தொழில்முறைத் திறன்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பிலும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில், கொள்கலன் முனையச் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து வலையமைப்பில் இலங்கையின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கடல்சார் இணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் துறைமுக உட்கட்டமைப்பு, தளவாடச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வகிக்கும் பங்களிப்பை இந்த விஜயம் எடுத்துக்காட்டியது.

சீனத் தூதரகம் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வலியுறுத்தியது

கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில், இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் பிரதி தூதுவரான சூ யான்வேய் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சூ யான்வேய், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

பட்டுப்பாதை முன்முயற்சியின் ஊடாக இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளை எடுத்துரைத்த அவர், குறிப்பாக சீனச் சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்குள்ள சாத்தியக்கூறுகளை வலியுறுத்தினார்.

இணைப்பு வசதிகள், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரந்த கலந்துரையாடல்களுக்கு அவரது உரை வர்த்தகக் கண்ணோட்டத்தையும் சேர்த்தது.

நிறைவு நிகழ்வில் மாணவர்களின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன. நிபுணர்களின் உரைகள் மற்றும் கல்விசார் விஜயங்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்ளவும், தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்தவும், பட்டுப்பாதை முன்முயற்சி தொடர்பான தமது புரிதலை விரிவுபடுத்தவும் உதவியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டம், முன்பிருந்த கருத்துகளை மறுபரிசீலனை செய்து, இலங்கைக்கான பட்டுப்பாதை முன்முயற்சியின் பொருத்தப்பாடு குறித்து தகவல்களின் அடிப்படையில் சிந்திக்க மாணவர்களுக்கு உதவியதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்தின.

கருத்தரங்கில் வெற்றிகரமாகப் பங்கேற்ற மாணவர்களுக்கு சூ யான்வேய் மற்றும் கலாநிதி பாலித டி. பி. கொஹன ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளித்த சூ யான்வேய் மற்றும் சீனத் தூதரகத்துக்கு BRISL நன்றியைத் தெரிவித்ததுடன், உரையாளர்கள், பங்கேற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தது.

நிறைவு உரையில், மாயா மயூரன் மாணவர்கள் தாம் பெற்ற அறிவை சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் திறந்த மனப்பான்மையுடனும் சிந்தனைபூர்வமாகவும் தொடர்ந்து ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச அபிவிருத்தி முயற்சிகளை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதற்கும், சர்வதேசக் கூட்டாண்மைகள் இலங்கைக்கு நிலைபேறான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நன்மைகளை எவ்வாறு வழங்க முடியும் என்பதை ஆராய்வதற்கும் இளைஞர்களைத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தக் கருத்தரங்கு வலியுறுத்தியது.