“டித்வா” புயலில் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள், மீனவர்களுக்கு அவசர உதவி அவசியம் – ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம்

FAO stresses the need for immediate support for Sri Lanka’s small-scale farmers and fishers hit by Cyclone Ditva, citing major damage to paddy lands, crops and fishing infrastructure.

“டித்வா” புயலில் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள், மீனவர்களுக்கு அவசர உதவி அவசியம் – ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம்

“டித்வா” புயலால் இலங்கையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு நெல் விவசாயிகள், காய்கறிப் பயிர்செய்கையாளர்கள் மற்றும் சிறு அளவிலான மீனவர்களின் மீளெழுச்சிக்காக உடனடி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதி விம்லேந்திர ஷரண் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவது, 


டித்வா புயல் இலங்கையில் பல குடும்பங்களுக்குத் துன்பத்தைக் கொண்டு வந்துள்ளதுடன், அன்புக்குரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த அனைவருடனும் எங்களது எண்ணங்கள் இருக்கின்றன. 

நாடு முழுவதும் பாதிப்புகள் உணரப்பட்டாலும், சிறியளவிலான நெல் விவசாயிகள், காய்கறிப் பயிர்செய்கையாளர்கள் மற்றும் சிறியளவிலான மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர். வயல்கள், உள்ளீடுகள், உபகரணங்கள், படகுகள் மற்றும் தரையிறங்கும் துறைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், இந்த நெருக்கடியான தருணத்தில், அவர்களின் பணியாற்றும் திறனைக் குலைத்துள்ளன.

சிறியளவிலான விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இலங்கையின் உணவு முறைமையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் உட்கொள்ளப்படும் அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்களில் பெரும்பகுதியை உற்பத்தி செய்வதுடன், கிராமப்புறக் குடும்பங்களில் பெரிய பகுதியினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். அவர்கள் மீண்டும் தமது விவசாய மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு திரும்புவது அவர்களின் சொந்த வாழ்வாதாரம் மற்றும் மீட்சிக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கிராமப்புறப்  பொருளாதாரங்களை பலப்படுத்தவும் இன்றியமையாததாகும். சரியான நேரத்தில் இலக்கு வைக்கப்பட்டு வழங்கப்படும் உதவிகள் இந்தக் சமுதாயங்கள் விரைவாக மீண்டு வரக்கூடிய வலிமை, மீண்டெழுதிறன் மற்றும் இயலளவு ஆகியவற்றை வழங்குகின்றன.

கடந்த வாரத்தில், நான் குருநாகல், அநுராதபுரம், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களைப் பார்வையிட்டேன். வெள்ளத்தால் சேதமடைந்த நெல் வயல்களில் நடந்து சென்றபோதும், சிலாபத்தில் உள்ள இறால் பண்ணையாளர்களை சந்தித்தபோதும், பயிர்கள் மற்றும் உபகரணங்களை இழந்த குடும்பங்களுடன் பேசியபோதும், ஒரு அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்களை ஒருபோதும் களமட்டத்தில் உள்ள யதார்த்தங்களுடன் முழுமையாகப் படம்பிடிக்க முடியாது என்பதை நான் நினைவு கூர்ந்தேன். இருப்பினும், இழப்புகளுக்கு மத்தியிலும், நான் சென்ற எல்லா இடங்களிலும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விவசாயிகளின் மற்றும் மீனவர்களின் அமைதியான உறுதிப்பாடு என்ற ஒரு
விடயம் தனித்து நிலைபெற்றிருந்தது. பல்வேறு நெல் விவசாயிகள் குறிப்பாக உரம் மற்றும் விதைகள் மூலமான உடனடி ஆதரவுடன், சேதமடைந்த பயிர் நிலத்தில் 25 - 30% வரை இந்த பருவத்தில் இன்னும் மீள்நடுகை செய்யப்பட முடியும் என்று என்னிடம் கூறினர். மீனவ சமுதாயத்தினரும் இதேபோன்ற உறுதியை வெளிப்படுத்தினாலும், அவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் முக்கிய தரையிறங்கும் உட்கட்டமைப்பை சரியான நேரத்தில் மீள்கட்டமைக்க முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

டித்வா புயல் மீட்புப் பணிகளின் மத்தியில் சிறியளவிலான விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) வலியுறுத்துகிறது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் சிறிய பயிர்நிலங்களை பயிரிடும் சிறு விவசாயிகள் என்பதுடன், அவர்களுக்கு ஆதரவை வழங்குவது கட்டாயமானதாகும். இந்த விவசாயிகள் இந்த நடப்புப் பருவத்தில் மீள்நடுகை செய்ய முடியாவிட்டால் அல்லது வரவிருக்கும் சிறு போகத்திற்கு முன்னராக தங்களது வயல்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்ற முடியாவிட்டால், தேசிய நெல் உற்பத்தியில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அது 2025 க்கு அப்பாலும் நீடிக்கலாம். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 108,000 ஹெக்டயர் நெல் வயல்களும், 11,000 ஹெக்டயர் மற்ற களப் பயிர்களும், 6,600 ஹெக்டயர் சோளப் பயிர்ச்செய்கையும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன. இப்போதே, ஒரு உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உதவி வழங்குவது, அந்த விவசாயிகள் விரைவாக உற்பத்திக்கு திரும்புவதை உறுதிசெய்ய உதவும், அத்துடன் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டின் உணவு வழங்கல் இரண்டையும் பாதுகாக்கும்.

அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்சிக்கான மிகவும் வினைத்திறனான காரணிகளாக விவசாயம் மற்றும் மீன்வளம் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், அ​வை ஒப்பீட்டளவில் மிதமான முதலீடுகளில் வலுவான வருமானத்தை வழங்குகிறது.

சேதமடைந்த நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளை மீள்புனரமைத்தல், இழந்த படகுகள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கால்நடைகளுக்கு மாற்றீடு வழங்குதல்,  மற்றும் தரமான விதைகள், உரம் மற்றும் பிற அத்தியாவசிய உள்ளீடுகளை மீண்டும் பெறுவதை முன்னுரிமைப்படுத்துவது, உற்பத்தியாளர்கள் விரைவாக பணியை ஆரம்பிக்கவும், உணவு வழங்கலை நிலைப்படுத்தவும், கிராமிய மீட்சியை உறுதிப்படுத்தவும் உதவும்.

புயலுக்கு பிறகு உடனடியாக, FAO, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயப் பயிற்றுநர்கள், மீன்பிடி அலுவலர்கள் மற்றும் கால்நடை அலுவலர்களிடம் முக்கிய தகவலளிப்பாளர்களின் நேர்காணல்கள் (Key Informant  Interviews) மூலமாக பயிர்கள், கால்நடைகள், உள்நாட்டு மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, மற்றும் நீரியல்வளங்களின் மீதான பாதிப்புக்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. நெல் பயிர்ச்செய்கையில் மிகவும் கடுமையான தாக்கமானது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் நெல் பயிர்ச்செய்கையையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அவதானிக்கப்பட்டதுடன், இங்கு நெல் வயல்கள் கிட்டத்தட்ட முழுமையாக (75 சதவீதத்திற்கும் மேல்) வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 

மொனராகலை, மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன் இங்கு 40-65 சதவீதம் வரையிலான நெல் வயல்கள் மூழ்கியதால் நெல் பயிர்ச்செய்கையை பெரிதும் நம்பியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். FAO மேலம் சர் வதேச அனர்த்த சாசனம் (IDC) மூலம் கிடைத்த செயற்கைக்கோள் தரவு மற்றும் FAO ஆல் உருவாக்கப்பட்ட விவசாயத் திணைக்களத்தின் CROPIX தளத்திலிருந்து நெல், காய்கறிகள் மற்றும் பிற களப்பயிர்கள் (OFCs) பற்றிய இரு வார பயிரிடுகைத் தரவுகளையும் ஆய்வு செய்தது.

இந்த புவியியல் தரவுத் தொகுப்புகள் புயலுக்குப் பிறகு உடனடியாக மிகவும்  முக்கியமானவை என்பதுடன், பாதிப்புகளின் விரிவான மற்றும் ஆதார மதிப்பீட்டிற்கு முக்கியமாகும். சுமார் 5,000 விவசாயிகள் மற்றும் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களின் இழப்புகளின் அளவை மேலும் புரிந்து கொள்வதற்காக நேரடியாக அணுகவும் உள்ளோம்.

இலங்கையில் உள்ள FAO, சிறியளவிலான நெல் மற்றும் காய்கறி விவசாயிகள் மற்றும் மீனவ சமுதாயங்களுக்கு ஆதரவளிக்க, அரசாங்கத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட மீட்பு முன்மொழிவுகளின் தொகுப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. 

மீட்பு உதவி ஆதார அடிப்படையிலானதாகவும், காலநிலை மாற்றங்களுக்கு மீண்டெழுதிறன் உடையதாகவும், அதிகம் தேவைப்படுபவர்களை இலக்கு வைப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு, நாங்கள் அரசாங்கம், இருதரப்புப் பங்காளர்கள் மற்றும் பல்தரப்பு முகவர் நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் இலங்கை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் மீண்டெழு திறனை நிரூபித்துள்ளனர். இந்தக் முக்கியமான தருணத்தில் ஒருங்கிணைந்த மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆதரவுடன், அவர்கள் மீண்டு வருவார்கள், தங்களது வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், அத்துடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தங்களது அத்தியாவசிய வகிபங்கைத் தொடர்ந்து வகிப்பார்கள் என உறுதியாக நம்புகின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.