இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு !
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர், அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த வெளிநாட்டு சேவை அதிகாரியான எரிக் மேயர், தற்போது நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு தூதுவராகப் பணியாற்றி வருகிறார். ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஒரே தூதரகப் பதவிநிலையமான ட்ரொம்சோ அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை அமுலாக்கத்தை அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.
2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை, அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிய அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் அமெரிக்காவின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளுக்கு தலைமை வகித்தார்.
இதற்கு முன்னர் வடக்கு மாசிடோனியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொறுப்பு தூதுவராகவும் துணைத் தலைமைத் தூதராகவும், கசகஸ்தானின் அல்மாட்டியில் அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு பல்வேறு அரச நிறுவனங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததுடன், தெற்கு கசகஸ்தானில் அமெரிக்காவின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலைமைத் தூதராகவும் செயற்பாட்டு துணைத் தலைமைத் தூதராகவும், பின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும் எரிக் மேயர் பணியாற்றியுள்ளார். ஹெல்சின்கியில் இருந்தபோது ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.
அவரது முந்தைய பதவிகளில் அர்ஜென்டினாவின் புவனஸ் அயர்ஸில் துணைத் தூதுவராகவும், எகிப்தின் கெய்ரோவில் கலாசார விவகார அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவமும் அடங்குகிறது.
வாஷிங்டனில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் தலைமை அதிகாரி மற்றும் மூத்த ஆலோசகராகவும், ஆர்க்டிக் கவுன்சிலின் அமெரிக்க தலைமைத்துவ காலத்தில் பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான பணியகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையில் இணைவதற்கு முன்னர், விமானப் போக்குவரத்துத் துறையில் நிறுவன விற்பனை மற்றும் அரசாங்க உறவுகள் தொடர்பான பணிகளில் எரிக் மேயர் ஈடுபட்டிருந்தார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பேர்க்லியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள அவர், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
அவரது சிறப்பான சேவைக்காக அமெரிக்க வெளியுறவுத்துறையின் பல்வேறு உயரிய மற்றும் சிறப்பு சேவை விருதுகளையும் எரிக் மேயர் பெற்றுள்ளார். மேலும், டேனிஷ், பிரெஞ்சு, ரஷ்ய மற்றும் ஸ்பானிய மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரின் நியமனம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய கொள்கைகள் மற்றும் கடல்சார் மற்றும் பிராந்திய விவகாரங்களில் அமெரிக்க–இலங்கை ஒத்துழைப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டுள்ளதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் எரிக் மேயர் புதிய அமெரிக்கத் தூதராக பதவியேற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையில் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். முழு தூதரகக் குழுவின் சார்பிலும் அவருக்கு எமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், எரிக் மேயரின் தலைமையின் கீழ் பணியாற்றுவதற்கும், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுப்பதில் அவரது தலைமையின் கீழ் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தூதரகம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
editor