இலங்கையின் சிறுபான்மை இளைஞர்களுக்கான புதுமையான தலைமைத்துவப் பயிற்சி இந்தியாவில் நிறைவு
செப்டெம்பர் 21 முதல் 25, 2026 வரை இந்தியாவின் நொய்டாவில் உள்ள NIESBUD நிறுவனத்தில் நடைபெற்ற ஐந்து நாள் ‘நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்புக்கான புதுமையான தலைமைத்துவம்’ (ILOGE) பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர். புதுமையான தலைமைத்துவம், தொழில்முனைவோர் திறன், நிறுவன வளர்ச்சி, சமூக ஈடுபாடு, காலநிலை தலைமைத்துவம் மற்றும் சமூகங்களின் மீள்திறன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றன.
கொழும்பு: இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 28 சிறுபான்மை இளைஞர்கள், நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமைத்துவம் (Innovative Leadership for Organization Growth and Excellence – ILOGE) தொடர்பான ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சி செப்டெம்பர் 21 முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவின் நொய்டாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் (NIESBUD) இல் நடைபெற்றது.
NIESBUD, இந்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் கீழ் இயங்கும் முக்கிய நிறுவனமாகும். தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி, ஆலோசனை மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தப் பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் தமது தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதுடன், நவீன தலைமைத்துவ அணுகுமுறைகள், நிறுவன வளர்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான நடைமுறை அறிவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.
புதுமையான தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி, சுய தலைமைத்துவம், வடிவமைப்பு சிந்தனை (Design Thinking), தலைமைத்துவ பாணிகள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை, உணர்ச்சி நுண்ணறிவு, காலநிலை தலைமைத்துவம் மற்றும் சமூகங்களின் மீள்திறன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், பயிற்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள் ‘Back Home Action Plans’ எனப்படும் செயற்றிட்டங்களைத் தயாரித்தனர். இதன் மூலம் பயிற்சியின் போது பெற்ற அறிவு மற்றும் திறன்களை தமது நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அவர்கள் திட்டங்களை வகுத்தனர்.
இதன் ஒரு பகுதியாக ஆக்ராவுக்கான கலாசாரப் பயணத்திலும் பங்கேற்றனர். இதன்போது தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்தப் பயணம் இந்தியாவின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தை அறிந்துகொள்வதற்கும், முறைசாரா தொடர்புகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான கற்றலை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.
இலங்கை தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் ஆற்றல் கட்டியெழுப்பலை வலுப்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறை விஜயத்தின்போது, இலங்கை தொழில் வல்லுநர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தப் பயிற்சி நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
editor