சீனா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த புதிய சீனத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங் இலங்கை வந்தடைந்து தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். சீனா–இலங்கை பாரம்பரிய நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங், செவ்வாய்க்கிழமை (11) இலங்கை வந்தடைந்து தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கினால் இலங்கைக்கான விசேட மற்றும் முழு அதிகாரமுடைய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங், இலங்கை வந்தடைந்ததைத் தொடர்ந்து விமான நிலையத்தில் தனது எழுத்துமூலமான செய்தியை வெளியிட்டார்.
அதில், “இந்தியப் பெருங்கடலின் முத்து” என வர்ணிக்கப்படும் இலங்கைக்கான சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த கௌரவமும் பெருமையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாரம்பரிய நட்பு நீண்ட வரலாற்றைக் கொண்டதுடன், காலப்போக்கில் மேலும் வலுப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்டைய கடல்வழி வர்த்தக தொடர்புகளிலிருந்து ஆரம்பித்து, 70 ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ரப்பர்–அரிசி ஒப்பந்தம் வரையிலும் நீண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இரு நாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்துள்ளதுடன், பட்டுப்பாதை முன்முயற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் புதிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனித்தனியாக சந்தித்தமை, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்த வெய் ஹுவாசியாங், இரு நாடுகளும் அபிவிருத்தி மற்றும் மறுமலர்ச்சிக்கான பாதையில் இணைந்து பயணிக்கும் பங்காளிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முயற்சிகளுடன் சீனாவின் அபிவிருத்தி மூலோபாயங்களை ஒருங்கிணைத்து, பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனா–இலங்கை இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்ப இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2027ஆம் ஆண்டு சீனா–இலங்கை இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவும், ரப்பர்–அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் இலங்கைக்கான தூதுவராக பொறுப்பேற்றுள்ள தாம், பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்வதற்கும், பரஸ்பர நன்மை தரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு துறைகளின் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தனது பணிகளுக்கு அவசியமானது எனத் தெரிவித்துள்ள புதிய சீனத் தூதுவர், சீனா–இலங்கை உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
editor