கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார் செய்த செயல் – டிரம்ப், நெதன்யாகு முதல் மோடி வரை குவியும் பாராட்டு !
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைதுபை விமானத்தில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழுவதற்கு முன்னர் கொக்பிட் கதவைத் திறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளும் விமானப் பணியாளர்களும் கொக்பிட்டுக்குள் சென்று தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. FZ1073 விமானம் சவூதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்துக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டதுடன், விமானத்தில் இருந்த 174 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஸ்மித் மச்சாரின் செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானத்தில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழுவதற்கு முன்னர் காக்பிட் கதவைத் திறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு விமானியை கட்டுப்படுத்த முடிந்ததாக நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபையின் FZ1073 விமானம் அவசரமாக சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபுக் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இஸ்ரேலிய பயணி யானிவ் ஹயூன், பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட கேப்டன் மச்சார் கொக்பிட் கதவுக்கு அருகில் இருந்ததால், ஆரம்பத்தில் பயணிகளால் கதவைத் திறப்பது கடினமாக இருந்ததாக ஹயூன் தெரிவித்துள்ளார்.
எனினும், மயங்கி விழுவதற்கு முன்னர் கேப்டன் மச்சார் கதவின் திறப்பு பொறிமுறையை இயக்கியிருக்கலாம் என தான் கருதுவதாக ஹயூன் கூறியுள்ளார். இதன் பின்னரே பயணிகள் கொக்பிட்டுக்குள் நுழைந்து தாக்குதல்காரரை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டினார். கடுமையாக காயமடைந்த நிலையிலும் அவர் எதிர்த்து போராடி கொக்பிட் கதவைத் திறந்ததன் மூலம் பயணிகளும் விமானப் பணியாளர்களும் தாக்குதல்காரரை கட்டுப்படுத்த உதவியதாக நெதன்யாகு குறிப்பிட்டார்.
சம்பவத்தின்போது மிக வேகமாக விமானம் உயரத்தை இழந்ததாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. குறுகிய காலப்பகுதியில் சுமார் 14,000 அடி உயரம் வரை விமானம் திடீரென கீழிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்பிட்டுக்குள் பயணிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விமானியை கட்டுப்படுத்திய பின்னர், விமானத்தில் பயணித்திருந்த மேலும் இரண்டு விமானிகள் விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்க உதவியுள்ளனர். இதையடுத்து விமானம் தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
காயமடைந்த கேப்டன் மச்சாருக்கு இஸ்ரேலிய பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவ் உள்ளிட்ட பயணிகள் முதலுதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையிலும் கைகளிலும் ஏற்பட்ட காயங்களால் அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த உதவியதாகவும் முசாயேவ் தெரிவித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த விமானி
ஸ்மித் மச்சார் போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் அனுபவம் கொண்டவர் என அவரது LinkedIn சுயவிவரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃப்ளைதுபையில் இணைவதற்கு முன்னர், இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டில் சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கு சிரேஷ்ட விமானியாகவும், பின்னர் புதிய விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் Training Captain ஆகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது சுயவிவரத்தின்படி, Boeing 737-800, Boeing 737 MAX 8 மற்றும் MAX 9 ஆகிய விமானங்களில் சுமார் 9,750 மணி நேர பறப்பு அனுபவம் அவருக்கு உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கேப்டன் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளதுடன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் மச்சாரின் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார். கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையிலும் அவர் விரைந்து செயல்பட்டு விமான அறையின் கதவைத் திறந்து உதவிக்கு வழிவகுத்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தாம் கருத்து தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஃப்ளைதுபை விமானத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சவூதி அரேபியா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காயமடைந்த விமானி, பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த அனுபவமிக்க விமானிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் மிகப்பெரிய விமானப் பேரழிவு தவிர்க்கப்பட்டதாக இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
editor