“Mayday” தொலைக்காட்சி தொடரைப் பார்த்ததால் விமானத்தை கட்டுப்படுத்த உதவினேன் – பயணி யானிவ் அனுபவம் ; நேரில் பாராட்டிய நெதன்யாகு

டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான விமானி அறை சம்பவத்தின்போது, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்த உதவிய பயணி யானிவ் ஹயூனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். விமான விபத்துகள் தொடர்பான “Mayday” தொலைக்காட்சி ஆவணத் தொடரைப் பார்த்திருந்தது, அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள உதவியதாக யானிவ் தெரிவித்துள்ளார். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

“Mayday” தொலைக்காட்சி தொடரைப் பார்த்ததால் விமானத்தை கட்டுப்படுத்த உதவினேன் – பயணி யானிவ் அனுபவம் ; நேரில் பாராட்டிய நெதன்யாகு

டுபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது, விமானி அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்த உதவிய பயணி யானிவ் ஹயூனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

Flydubai விமானம் 174 பேருடன் டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, விமானி அறையில் இரு விமானிகளுக்கும் இடையே வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் தகவலின்படி, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஒருவர் இந்தியப் பிரஜையான பிரதான விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதுடன், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் தலையிட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்துக்கான காரணமும் நோக்கமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இதனையடுத்து விமானம் திடீரென சுமார் 14,000 அடி உயரத்தை மிகக் குறுகிய நேரத்தில் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்திருந்த போதிலும் பிரதான விமானி ஸ்மித் மச்சார் விமானி அறையின் கதவைத் திறக்க உதவியதாகவும், இதன் மூலம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே செல்ல முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானி அறைக்குள் நுழைந்த பயணிகளில் ஒருவரான யானிவ் ஹயூன், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தனது அனுபவத்தை பகிர்ந்த யானிவ், விமானி அறைக்குள் நுழைந்தபோது காயமடைந்த விமானி கதவுக்கு அருகில் இருந்ததாகவும், மற்றைய நபர் விமானத்தின் கட்டுப்பாட்டு கருவிகளுக்கு அருகில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

அவர் அந்த நபரை பிடித்து கட்டுப்பாட்டு கருவிகளிலிருந்து வெளியே இழுத்ததாகவும், பின்னர் உதவிக்காக ஏனைய பயணிகளை அழைத்ததாகவும் கூறினார்.

விமானம் மீண்டும் தீவிரமாக கீழ்நோக்கிச் செல்வதை உணர்ந்தபோது, தான் மீண்டும் விமானி அறைக்குள் சென்று கட்டுப்பாட்டு கருவிகளைப் பிடித்து விமானத்தை நிலைநிறுத்த உதவியதாக யானிவ் தெரிவித்தார்.

அப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரளவு அறிந்திருந்ததாகவும், அதற்குக் காரணம் விமான விபத்துகள் தொடர்பான “Mayday” என்ற தொலைக்காட்சி ஆவணத் தொடரைப் பார்த்திருந்ததாகவும் அவர் நெதன்யாகுவிடம் கூறினார். விமானம் சற்று நேராகிய பின்னர் ஒரு விமானி கட்டுப்பாட்டை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கினார். 

பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் மற்றொரு Flydubai விமானம் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பென் குரியன் விமான நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தனர். 

பென் குரியன் விமான நிலையத்தில் பயணிகளை நேரில் சந்தித்த பிரதமர் நெதன்யாகு, யானிவ் ஹயூனை ஆரத்தழுவி பாராட்டியதுடன், விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையை கட்டுப்படுத்த உதவிய பயணிகள் மற்றும் பணியாளர்களின் துணிச்சலையும் பாராட்டினார்.

மேலும், காயமடைந்த நிலையிலும் எதிர்த்து போராடி, விமானி அறைக்குள் மற்றவர்கள் நுழைய வழிவகுத்த பிரதான விமானி ஸ்மித் மச்சாரின் நடவடிக்கையையும் நெதன்யாகு பாராட்டியுள்ளார். 

இந்தச் சம்பவத்திற்கான முழுமையான காரணமும் நோக்கமும் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதிகாரிகள் விசாரணை முடிவடையும் முன்னர் எந்தவொரு முடிவுக்கும் வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.