இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் இந்திய வர்த்தகத் தூதுக்குழுக்கள் 

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கொச்சி வர்த்தக சம்மேளனத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்ததுடன், கேரளா–இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டன.

இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் இந்திய வர்த்தகத் தூதுக்குழுக்கள் 

இந்தியாவின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (Cochin Chamber of Commerce and Industry – CCCI) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வர்த்தகத் தூதுக்குழுக்கள், இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்பதற்காக கொழும்புக்கு விஜயம் செய்துள்ளன.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை முன்னிட்டு இடம்பெற்ற இவ்விஜயங்கள், இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியா–இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தன.

சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள், சூரியசக்தி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் காலணித் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் தூதுக்குழு, இலங்கையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியது.

இந்தத் தூதுக்குழு, எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டுச் சபை (BOI) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்தித்தது.

இதன்போது, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக முன்னேற்றங்கள் மற்றும் சாத்தியமான வணிகக் கூட்டாண்மைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரம், தளவாடச் சேவைகள், கட்டுமானப் பொருட்கள், வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தூதுக்குழுவும் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியது.

அந்தத் தூதுக்குழு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்ததுடன், இலங்கை நிறுவனங்களுடன் வர்த்தகத்திலிருந்து வர்த்தகத்துக்கான (B2B) கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டது. இதன் மூலம் சாத்தியமான வணிகக் கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் ஆராயப்பட்டன.

மேலும், இலங்கையின் தொழில்துறைச் செயற்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில், நெஸ்லே மற்றும் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் இத்தூதுக்குழு விஜயம் செய்தது.

இரு தூதுக்குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் சந்தித்தன. இதன்போது, இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்குக் காணப்படும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலங்கை நிறுவனங்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும், வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்திய நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார்.

கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் இந்த விஜயம், இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இதற்கு முன்னதாக, தென் குஜராத் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (SGCCI) மற்றும் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலப் பேரவை (ICC) ஆகியவற்றின் வர்த்தகத் தூதுக்குழுக்களும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தன.

இதேவேளை, இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இன் ஒரு பகுதியாக, கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் சிலோன் வர்த்தக சம்மேளனமும் கேரளாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டன.

கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான சி. எஸ். கார்த்தா மற்றும் சிலோன் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பலேந்திர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவ்வொப்பந்தத்தின் மூலம் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துதல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்திய வர்த்தகத் தூதுக்குழுக்களின் விஜயங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்புகள், நிறுவனமட்டக் கூட்டாண்மைகள் மற்றும் விரிவான வர்த்தக, முதலீட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக இந்தியா–இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.