இலங்கையின் ரப்பர் உற்பத்தியின் 150 ஆண்டுகள்: கொண்டாடப்பட வேண்டிய வரலாற்று மைல்கல்
இலங்கையின் ரப்பர் பயிர்ச்செய்கையின் 150 ஆண்டுகால வரலாறு, 2024ஆம் ஆண்டின் 1.1 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள்.
இலங்கையின் மண்ணில் முதன்முதலில் ரப்பர் பயிரிடப்பட்டு இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள்
நிறைவடைகின்றன. இந்த வரலாற்றுப் பயணம் 1876ஆம் ஆண்டில், கம்பஹாவிலுள்ள ஹேனரத்கொட தாவரவியல் பூங்காவிற்கு (Henarathgoda Botanical Gardens) முதன்முதலாக ரப்பர் கன்றுகள் கொண்டு வரப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. ஹென்றி விக்காம் (Henry Wickham) என்ற பிரித்தானிய தாவரவியலாளரால் அமேசான் காடுகளிலிருந்து இரகசியமாகக் கொண்டுவரப்பட்ட இந்த விதைகள், லண்டனின் கியூ கார்டன்ஸில் (Kew Gardens) முளைக்க வைக்கப்பட்டுப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இந்த கன்றுகளின் வருகையானது, ஆசியாவின் வர்த்தக ரீதியிலான ரப்பர் தொழில்துறையின் பிறப்பிடமாக இலங்கையை மாற்றியது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும் நாடு இன்றும் அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இலங்கை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் பெருந்தோட்டத் துறையை நிர்வகிக்கும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), இந்த 150 ஆண்டுகால ரப்பர் பாரம்பரியத்தை பெருமிதத்துடன் நினைவு கூர்கிறது. இந்த ரப்பர் விதைகள் உலகளாவிய வர்த்தகப் போட்டியின் ஒரு பெரும் வரலாற்றைத் தாங்கி நிற்கின்றன. 1839 ஆம் ஆண்டில் Charles Goodyear கண்டுபிடித்த ரப்பர் பதப்படுத்துதல் முறை, மென்மையான ரப்பரை ஒரு வலுவான தொழிற்துறைப் பொருளாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து, 1888 இல் John Boyd Dunlop கண்டுபிடித்த காற்று நிரப்பப்பட்ட ரப்பர் டயர் (Pneumatic tyre), உலக சந்தையில் ரப்பருக்கான தேவையை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. பிரேசிலின் காடுகளால் மட்டும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே பிரேசிலின் ஏகபோக உரிமையை உடைக்க நினைத்த பிரித்தானியா, தென் அமெரிக்காவிலிருந்து ரப்பர் விதைகளை இரகசியமாக எடுத்துவந்து தனது ஆசிய காலனிகளில் பயிரிட்டது.
அவ்வாறு முதன்முதலில் ரப்பர் கன்றுகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக மாறத் தொடங்கியது.
வர்த்தக ரீதியிலான ரப்பர் செய்கை இலங்கையில் மிக வேகமாக பரவியது. 1900களின் முற்பகுதியில், உலகச் சந்தையில் தேயிலை விலைகள் வீழ்ச்சியடைந்ததால், தாழ்நிலத் தோட்ட உரிமையாளர்கள் இலாபகரமான இந்த புதிய ரப்பர் பயிரை நோக்கித் திரும்பினர். இதன் காரணமாக, ரப்பர் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு சில வருடங்களிலேயே சுமார் 25,000 ஏக்கரிலிருந்து 100,000 ஏக்கருக்கும் அதிகமாகப் பிரம்மாண்டமாக உயர்ந்தது.
இந்தப் பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தது 1909 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (RRISL) ஆகும். இது உலகின் மிகப்பழமையான ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளதுடன், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விவசாய மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக உருவான Sri Lankan Latex Crepe No. 1 தரம், உலகிலேயே மிகவும் தூய்மையான இயற்கை ரப்பர் வடிவமாகக் கருதப்படுகிறது.
எவ்வித துர்நாற்றமும் இல்லாத இந்த உயர்தரப் பொருள், இன்றும் சர்வதேச மருத்துவப் பொருட்கள் மற்றும் காலணி (Footwear) சந்தைகளில் அதிக தேவையைப் பெற்றுள்ளது. இலங்கைக்கு ரப்பரின் முக்கியத்துவம் என்பது வெறும் வர்த்தகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை; இந்த ஆண்டு நிறைவானது விவசாயத்தைப் போலவே நாட்டின் இராஜதந்திரம் மற்றும் அடையாளத்தின் ஒரு கதையுமாகும். இரு நாடுகளும் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இலங்கை தனது ரப்பரை வழங்கி, அதற்குப் பதிலாகச் சீனாவிடமிருந்து அத்தியாவசியமான அரிசியைப் பெற்றுக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது ஒரு பெருந்தோட்டப் பயிர் நாட்டின் இராஜதந்திரக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ஒரு அரிய உதாரணமாகும். 1960களின் நடுப்பகுதியில் ரப்பர் உற்பத்தி முதன்முறையாக 107,000 மெட்ரிக் தொன்னை எட்டியது. இது தேயிலை மற்றும் தேங்காயுடன் சேர்ந்து நாட்டின் மூன்று முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்றாக ரப்பரை நிலைநிறுத்தியது. கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்களின்படி, அதற்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி அதன் வரலாற்று சாதனையாக 158,000 மெட்ரிக் தொன்னை எட்டிப் பதிவாகியுள்ளது.
அந்தப் பாரம்பரியம், உலக அரங்கில் இன்றும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு வெற்றிகரமாகத் தொடர்கிறது. அறுவைசிகிச்சை கையுறைகள் (Surgical gloves), தொழிற்துறை மற்றும் திடமான டயர்கள் (Solid tyres) ஆகியவற்றின் மூலம், ரப்பர் மற்றும் ரப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்களிலிருந்து கிடைத்த ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டில் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. குறிப்பாக, திடமான டயர்களை (Solid tyres) உற்பத்தி செய்வதில் உலகிலேயே மிகப்பெரிய நாடாக இலங்கை தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இத்தொழிற்துறை இன்றும் சுமார் 300,000 மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் பாரம்பரிய ரப்பர் வளரும் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புறப் பெண்களாவர். ரப்பர் பால் வெட்டுபவர்கள் (Tappers), சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டக் குடும்பங்களின் தலைமுறைகளைக் கடந்து இந்த உற்பத்திப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. 150 ஆண்டுகளைக் குறித்தல், குறிக்கோளுடன் எதிர்காலத்தை நோக்குதல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சம்மேளனம் (PA) மற்ற தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து இந்த நீண்டகால வரலாற்றைக் கௌரவிப்பதுடன், இதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் உறுதியளித்துள்ளது. ரப்பர் துறையின் அடுத்த அத்தியாயத்தை வழிநடத்துவதற்காகப் பின்வரும் திட்டங்களைக் கொண்ட ஒரு முறையான வழிகாட்டி வரைபடம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுக் கிடக்கும் நிலங்களை உடனடியாக மீண்டும் உற்பத்திப்
பயன்பாட்டிற்கு கொண்டு வருதல். நாட்டின் ஒட்டுமொத்த ரப்பர் விளைச்சலை (Yields) கணிசமாக அதிகரிக்க இலக்கு வைத்தல். புதிய கன்றுகளை மறுநடவு செய்தல் (Replanting), ரப்பர் பயிரிடப்படாத புதிய பாரம்பரியமற்ற பிரதேசங்களுக்குச் செய்கையை விரிவுபடுத்துதல் மற்றும் சர்வதேச சந்தைகளில் இலங்கை ரப்பரின் போட்டித்தன்மையை பல தசாப்தங்களுக்குத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய நவீன தயாரிப்புத் தகவல் கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை ஆகும்.
இலங்கையின் 150ஆவது ரப்பர் ஆண்டு நிறைவு என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சில கடத்தப்பட்ட கன்றுகளிலிருந்து ஒட்டுமொத்தத் தொழிற்துறையையும் ஒரு பில்லியன் டொலர் ஏற்றுமதித் துறையாக மாற்றியமைத்த பல தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கான ஒரு நல்வாழ்த்தாகும். இதில் ரப்பர் பால் வெட்டுபவர்கள், சிறு தோட்ட உரிமையாளர்கள், தோட்ட ஊழியர்கள், முகாமையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என அனைவரின் உழைப்பும் அடங்கும். கம்பஹாவில் அந்த முதல் கன்றுகள் வேரூன்றியதிலிருந்து இந்தத் தொழிற்துறை கடந்து வந்த நீண்ட தூரத்தைக் கொண்டாடும் தருணம் இதுவாகும். அத்துடன், அதன் அடுத்த 150 ஆண்டுகால எதிர்காலமும் அதன் ஆரம்பகால
பலங்களான — உறுதித்தன்மை, மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் ஒற்றை மரத்திலிருந்து உருவாகும் நிலையான மதிப்பு ஆகியவற்றாலேயே வடிவமைக்கப்படும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
editor