அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுத்தல் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஆவணச் சரிபார்ப்புக் குழுவுக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாராட்டு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி பயண ஆவணங்களைக் கண்டறிந்து விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குழுவின் பணிகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுத்தல் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஆவணச் சரிபார்ப்புக் குழுவுக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாராட்டு!

கடல் மார்க்கமாகவோ அல்லது விமான மார்க்கமாகவோ சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கையுடன் அவுஸ்திரேலியா நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றது. போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பதைத் தடுப்பதிலும், விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஆவணச் சரிபார்ப்புக் குழுவுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பணியாற்றும் குறித்த விசேட குழுவின் சேவைகளைப் பாராட்டும் வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி விபால் மிஸ்ராவுடன் இணைந்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.

2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தப் பிரிவில் 12 நிபுணத்துவப் பயிற்சி பெற்ற ஆவணப் பரிசோதகர்கள் பணியாற்றுகின்றனர்.

போலியான பயண ஆவணங்களைப் பயன்படுத்துவோரைக் கண்டறிதல், மோசடியான ஆவணங்களை அடையாளம் காணுதல் மற்றும் உரிய பயண ஆவணங்கள் இல்லாத பயணிகள் விமானங்களில் பயணிப்பதைத் தடுப்பது ஆகியன இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

"ஆவணச் சரிபார்ப்பு மற்றும் விமானப் பாதுகாப்பில் உயர்தரமான தரநிலைகளைப் பேணுவதற்கான உங்களது அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகின்றோம்" என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி விபால் மிஸ்ரா மற்றும் பயண ஆவணச் சரிபார்ப்பு நிறைவேற்று அதிகாரி தம்மிக்க விக்ரமாராச்சி ஆகியோரிடம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

கடல் மார்க்கமாகவோ அல்லது விமான மார்க்கமாகவோ சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கையுடன் அவுஸ்திரேலியா நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜோடிகளாகப் பணியாற்றும் இந்த ஆவணச் சரிபார்ப்புக் குழுவினர், சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களுக்குப் பயணிக்கும் வாராந்தம் 2,500க்கும் மேற்பட்ட பயணிகளின் ஆவணங்களைப் பரிசோதித்து வருகின்றனர்.

இதன்படி, ஆண்டுதோறும் 100,000க்கும் அதிகமான பயணிகளின் ஆவணங்கள் அவுஸ்திரேலியாவுக்கான இறுதிப் புறப்பாட்டுத் தளமான கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விசேட குழுவினரால் கவனமாகப் பரிசோதிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விசாரணைகள் மற்றும் பயண ஆவணச் சரிபார்ப்புப் பிரிவு முகாமையாளர் சஜித் வினோதஹேவா கருத்துத் தெரிவிக்கையில், ஆண்டுதோறும் முறையான பயண ஆவணங்கள் இல்லாத 60 முதல் 100 பயணிகளை இந்தக் குழுவினர் அடையாளம் காண்பதுடன், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய ஏனைய விடயங்களையும் கண்டறிந்து வருவதாகத் தெரிவித்தார்.

கறுப்பு நிற மேலங்கி, சிவப்பு நிற கழுத்துபு்பட்டி மற்றும் சாம்பல் நிற கால்சட்டை அணிந்து தனித்துவமாகப் பணியாற்றும் இந்த அதிகாரிகள், வாரமொன்றுக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைப் பாராட்டும் வகையில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புதிய ஆவணப் பரிசோதனை உபகரணங்களை குழுவினருக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்படும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் அவுஸ்திரேலியா பேணிவரும் விசேட ஒத்துழைப்புகளுக்கும் உயர்ஸ்தானிகர் நன்றியைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜெட்ஸ்டார் உள்ளிட்ட அவுஸ்திரேலியாவுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான நிறுவனங்கள், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, இலங்கைப் பொலிஸ், இலங்கை விமானப்படை, இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பை அவர் பாராட்டினார்.

"விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச விமானப் பயணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்" என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சர்வதேச விமானப் பயணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் விமானப் போக்குவரத்து மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் சர்வதேச ஒத்துழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இந்த விஜயம் எடுத்துக்காட்டியுள்ளது.