34 புதிய அமெரிக்க பீஸ் கோர்ப்ஸ் தொண்டர்கள் இலங்கை வருகை

இரண்டு ஆண்டுகால சேவையை ஆரம்பிப்பதற்கான பயிற்சிகளைப் பெறுவதற்காக 34 புதிய அமெரிக்க பீஸ் கோர்ப்ஸ் பயிற்சி தொண்டர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கை கலாசாரம் மற்றும் அமெரிக்க ஆங்கில மொழிக் கற்பித்தல் தொடர்பான தீவிர பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர், அவர்கள் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

34 புதிய அமெரிக்க பீஸ் கோர்ப்ஸ் தொண்டர்கள் இலங்கை வருகை

கொழும்பு, 2026, செப்டெம்பர் 17: தமது இரு வருடகால சேவைப் பயணத்தினை ஆரம்பிக்கும் வகையில், அமெரிக்க Peace Corps அமைப்பின் 34 புதிய பயிற்சித் தொண்டர்கள் இவ்வாரம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள Peace Corps சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முன்பாக, சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கையின் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலத்தினை கற்பித்தல் என்பன தொடர்பான தீவிரப் பயிற்சியினை அவர்கள் முதலில் நிறைவு செய்வார்கள். உறுதிமொழி ஏற்ற பிறகு, வட மற்றும் வடமத்திய மாகாணங்களில் இலங்கைக் குடும்பங்களுடன் தங்கியிருந்து உள்ளூர் சமூகங்களின் ஒரு பகுதியாக வாழும் அதேவேளை, இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து அமெரிக்க ஆங்கிலக் கல்வியினை விரிவுபடுத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் கொழும்பிலுள்ள Peace Corps அலுவலகத்தில் புதிய பயிலுனர்களை வரவேற்றார். “எமது நாடுகளுக்கிடையேயான மிக வலுவான பிணைப்புகள் தனிநபர்களுக்கிடையிலான உறவுகள் மூலமே கட்டமைக்கப்படுகின்றன. Peace
Corps அந்தப் பணியின் மையத்தில் அமெரிக்கர்களை வைக்கிறது.” என தூதுவர் மயர் தெரிவித்தார். “தாம் சேவை செய்யும் சமூகங்களின் ஒரு பகுதியாக இப்புதிய தொண்டர்கள் மாறும்போது, பொருளாதார வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கக்கூடிய, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எமது இரு ஜனநாயகங்களையும் மேலும் நெருக்கமாக்கக்கூடிய, திறன்களையும் தொடர்புகளையும் அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.


இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில், அமெரிக்கத் தொண்டர்களின் முதலாவது குழு இலங்கைக்கு வருகை தந்த ஆண்டான 1962ஆம் ஆண்டு Peace Corpsஇன் சேவைகள் இலங்கையில் ஆரம்பித்தன. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற துறைகளிலும் சுனாமியின் தாக்கங்களிலிருந்து மீட்சியடையும் பணிகளிலும் 500இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இநாட்டில் சேவையாற்றியுள்ளனர். ஆங்கில மொழிக் கல்வி தொடர்பான ஒரு புதுப்பிக்கப்பட்ட கவனத்துடன், 2018ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சித்திட்டம் முறைப்படி மீள ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கைச் சமூகங்களில் தமது சேவைகளை ஆரம்பிக்கும்போது, ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அம்மரபை இப்புதிய
குழுவினர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள்.

34 புதிய Peace Corps தொண்டர்களை வரவேற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர். ஆங்கில மொழிக் கல்வியினை பலப்படுத்துவதற்காகவும், அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான பிணைப்புகளை ஆழப்படுத்துவதற்காகவும் இத் தன்னார்வத் தொண்டர்கள் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.