47 ஆண்டுகால ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வரலாற்றை ‘Skyline Stories’ மூலம் நினைவுகூர்ந்த ஸ்ரீலங்கன் விமானப் பயிற்சிக் கல்லூரி

ஸ்ரீலங்கன் ஏவியேஷன் கல்லூரி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 47ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தனது ‘The Skyline Stories’ விமானப் போக்குவரத்து கலந்துரையாடல் தொடரின் சிறப்பு நிகழ்வை நடத்தியது. ஏர்லங்காவின் ஆரம்பகால முன்னோடி விமானப் பணியாளர்களில் இடம்பெற்றிருந்த கெப்டன் ரஞ்சித் பெட்ரிஸ் மற்றும் கெப்டன் நிஹால் ஜெயவிக்ரம ஆகியோரின் புதல்வர்களான கெப்டன் ஷவந்த பெட்ரிஸ் மற்றும் சிரேஷ்ட முதல் அதிகாரி நுவன் ஜெயவிக்ரம ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதன் மூலம் தேசிய விமான சேவையின் ஆரம்பகால வரலாறும் இன்றைய தலைமுறை விமானப் போக்குவரத்து நிபுணர்களும் இணைக்கப்பட்டனர்.

47 ஆண்டுகால ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வரலாற்றை ‘Skyline Stories’ மூலம் நினைவுகூர்ந்த ஸ்ரீலங்கன் விமானப் பயிற்சிக் கல்லூரி

கொழும்பு, செப்டெம்பர் 18: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 47ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஸ்ரீலங்கன் விமானப் பயிற்சிக் கல்லூரி தனது விமானப் போக்குவரத்து கலந்துரையாடல் தொடரான ‘The Skyline Stories’ நிகழ்ச்சியின் ஆறாவது அத்தியாயத்தை விசேட ஆண்டு நிறைவு பதிப்பாக நடத்தியுள்ளது.

1979ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Air Lanka நிறுவனத்தின் ஆரம்பகால முன்னோடி விமானிகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தேசிய விமான சேவை பின்னர் SriLankan Airlines என தனது தற்போதைய அடையாளத்தை பெற்ற விதத்தையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.

இந்த விசேட அமர்வில் கப்டன் ஷவந்த பெட்ரிஸ் மற்றும் சிரேஷ்ட முதலாவது அதிகாரி நுவன் ஜயவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் தந்தையர்களான கப்டன் ரஞ்சித் பெட்ரிஸ் மற்றும் கப்டன் நிஹால் ஜயவிக்ரம ஆகியோர் Air Lanka நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய முன்னோடி விமானக் குழுவினரில் இடம்பெற்றிருந்தனர்.

இதன் மூலம் தேசிய விமான சேவையை கட்டியெழுப்பிய தலைமுறைக்கும், அந்த மரபை இன்று முன்னெடுத்துச் செல்லும் புதிய தலைமுறை விமானப் பணியாளர்களுக்கும் இடையிலான தனித்துவமான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டது.

கப்டன் ஷவந்த பெட்ரிஸ், தனது தந்தையின் மூலம் சிறுவயது முதலே விமானப் போக்குவரத்துடன் தொடர்புபட்டிருந்ததாகவும், அவரின் ஊக்குவிப்பு தனது விமானப் பயணத்திற்கு அடித்தளமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். விமானத் துறையில் தனது பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்த போதிலும், ஒவ்வொரு அனுபவமும் தனது திறனையும் விமானப் போக்குவரத்து மீதான ஆர்வத்தையும் மேலும் வலுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட முதலாவது அதிகாரி நுவன் ஜயவிக்ரம, விமானப் போக்குவரத்து தமது குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், தனது தந்தையின் சாதனைகளைப் பின்பற்றுவதை விட அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு தனக்கான பாதையை உருவாக்குவதே முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

‘The Skyline Stories’ தொடர், ஸ்ரீலங்கன் விமானப் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு விமானத் துறையின் உண்மையான அனுபவங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. தொழில் தெரிவுகள், வாய்ப்புகள், சவால்கள், தோல்விகள், சாதனைகள் மற்றும் விமானத் துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்கள் குறித்து முன்னணி விமானிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள், Air Lanka நிறுவனத்தின் ஆரம்ப காலத்தை நேரடியாக அனுபவித்த விமானிகளிடம் இருந்து அவர்களின் அனுபவங்களை அறிந்துகொண்டது மிகவும் ஊக்கமளித்ததாக தெரிவித்தனர்.

இலங்கையின் தேசிய விமான சேவையின் பயிற்சிப் பிரிவாக செயற்படும் ஸ்ரீலங்கன் விமானப் பயிற்சிக் கல்லூரி, தொழில்நுட்ப மற்றும் கல்வி அறிவுடன் மட்டுமன்றி, விமானத் துறையில் எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள், பொறுப்புகள் மற்றும் சவால்கள் குறித்த நடைமுறை புரிதலையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

47 ஆண்டுகால ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து மரபை நினைவுகூர்ந்த இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு, அந்த மரபை அடுத்த தலைமுறை எவ்வாறு தங்களது சொந்த பங்களிப்புகளுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்தியது.