அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை : ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் !
Record flooding in Washington state after days of heavy rain has triggered mass evacuations, helicopter rescues, and emergency responses as rivers overflow and communities are inundated.
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்காஜிட் (Skagit) நதி கரைபுரண்டு ஓடியதன் காரணமாக, பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ப்யூஜெட் சவுண்ட் அருகே அமைந்துள்ள பர்லிங்டன் (Burlington) நகரம் முழுவதும், சுமார் 9,200 பேர் வசிக்கும் பகுதியாகும். இந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கிருந்து முழுமையாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
மவுண்ட் வெர்னன் பகுதியில் ஸ்காஜிட் ஆற்றின் நீர்மட்டம் 38 அடி (11.6 மீட்டர்) உயரத்தை எட்டியதாகவும், இது இதுவரை பதிவான அதிகபட்ச நீர்மட்டம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு மேற்கூரையில் சிக்கிய இருவர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்பு
வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், வீட்டு மேற்கூரையில் தஞ்சமடைந்த இருவர், அமெரிக்க தேசிய காவல் படையினரால் ஹெலிக்கொப்டர் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அமெரிக்க தேசிய காவல் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் வீடு வீடாக சென்று மக்களை வெளியேற்றினர். சில இடங்களில், வெள்ள நீரில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு காரணமாக, கடலில் உருவாகும் ‘Atmospheric River’ எனப்படும் ஈரப்பதம் நிறைந்த வளிமண்டல ஓட்டங்கள் மேற்குப் பசிபிக் பகுதிக்குள் நுழைந்ததே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வானிலை கணிப்பு மையத்தின் தகவலின்படி, கடந்த 7 நாட்களில் 6 முதல் 60 அங்குலம் வரை மழை பதிவாகியுள்ளது. “ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்துள்ளது” என வானிலை நிபுணர் ரிச் ஒட்டோ தெரிவித்தார்.
ஸ்காஜிட் நதியின் கரையோர அணைகள் தற்போது நிலைத்து இருந்தாலும், கடும் அழுத்தம் காரணமாக அணை உடைப்பு அபாயம் தொடர்கிறது. இதனால், நதியின் கீழ்ப்பகுதிகளில் Flash Flood Watch அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டன் மாகாண ஆளுநர் பாப் பெர்குசன் மற்றும் செனட்டர் மரியா கான்ட்வெல் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அவசர நிலையை (Federal Emergency Declaration) அறிவித்துள்ளார்.
தற்காலிகமாக மழை குறைந்தாலும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை மீண்டும் புதிய Atmospheric River புயல் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீதிகள், ரயில் பாதைகள், கனடாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
editor