2026 முதல் அரையாண்டில் SLT குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் 54.4% உயர்வு – ரூ.6.6 பில்லியன் பதிவு

2026 முதல் அரையாண்டில் SLT குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் 54.4% அதிகரித்து ரூ.6.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. குழும வருமானமும் 11.1% வளர்ச்சியடைந்துள்ளது.

2026 முதல் அரையாண்டில் SLT குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் 54.4% உயர்வு – ரூ.6.6 பில்லியன் பதிவு

SLT குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 2026 முதல் அரையாண்டில் 54.4% உயர்ந்து ரூ. 6.6 பில்லியனாக பதிவு, 11.1% வருமான வளர்ச்சியும் பதிவு


 2026 முதல் அரையாண்டில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 54.4% இனால் உயர்ந்து ரூ. 6.6 பில்லியனாக பதிவு.
 SLT PLC இன் அரையாண்டு வரிக்கு பிந்திய இலாபம் 74.9% ஆக உயர்வு.
 மொபிடெல் வருமானம் 12.9% இனால் உயர்வு, புரோட்பான்ட் சேவைகளின் மீதான வரிக்கு பிந்திய இலாபம் 61.9% இனால் உயர்வு.
 2025 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2026 இரண்டாம் காலாண்டில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 55.3% ஆகவும், மொபிடெல் 60.6% ஆகவும், SLT PLC 97.2% ஆகவும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


நாணய மதிப்பு வீழ்ச்சி, அதிக எரிபொருள் மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டணங்களின் அதிகரிப்பு ஆகியவற்றினால் ஏற்பட்ட செலவீன அழுத்தங்களை புரோட்பான்ட் மற்றும் என்டர்பிரைஸ் சேவைகளுக்கான அதிகரித்த கேள்வி ஈடுசெய்ததன் காரணமாக; SLT குழுமம், 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் முன்னேற்றகரமான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. 2025 இன் முதல் அரையாண்டில் ரூ. 4.3 பில்லியனாகக் காணப்பட்ட ஒட்டுமொத்த குழும வரிக்குப் பிந்திய இலாபம், 2026 இன் முதல் அரையாண்டில் 54.4% அதிகரித்து ரூ. 6.6 பில்லியனை எட்டியுள்ளது. SLT PLC மற்றும் மொபிடெல் ஆகியவற்றில் பதிவான இரட்டை இலக்க வருமான வளர்ச்சி மற்றும் இலாபத் தன்மையின் முன்னேற்றம் என்பன, 2026 இன் முதலாவது காலாண்டில் எய்தப்பட்ட வளர்ச்சி வேகத்தை மேலும் நீடித்துள்ளன.


வருமான வளர்ச்சியுடன் உறுதியான குழும இலாபகரத்தன்மை பதிவு


2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் குழுமத்தின் மொத்த வருமானம் ரூ. 61,314 மில்லியனை எட்டியதுடன், இது 2025 முதல் அரையாண்டில் பதிவான ரூ. 55,167 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 11.1% வளர்ச்சியாகும். SLT PLC மற்றும் மொபிடெல் ஆகியவற்றின் புரோட்பான்ட் சந்தாக்களில் பதிவான வலுவான வளர்ச்சி, இந்த உயர்வுக்கு முதன்மைக்காரணமாக அமைந்ததுடன், இது குழுமத்தின் EBITDA தொகையை 13.7% ஆல் அதிகரித்து ரூ. 24,126 மில்லியனாக உயர்த்தியது.


தொழிற்படு இலாபம், முந்தைய ஆண்டின் ரூ. 7,551 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 34.6% அதிகரித்து ரூ. 10,165 மில்லியனை எட்டியது. முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 51.4% அதிகரித்து ரூ. 8,555 மில்லியனாகப் பதிவானது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 54.4% ஆல் உயர்ந்து, 2025 முதல் அரையாண்டில் பதிவான ரூ. 4,276 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூ. 6,601 மில்லியனை எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் SLT குழுமமானது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு ரூ. 18,559 மில்லியனாகும்.


இதே காலப்பகுதியில், குழுமத்தின் தொழிற்பாட்டு செலவுகள் (தேய்மானம் தவிர்ந்த) 9.6% அதிகரித்து ரூ. 37,188 மில்லியனாகப் பதிவாகியது. அதிகரித்த செலவினங்களின் பெரும்பாலான உயர்வு வெளிவாரிச் செலவு அழுத்தங்களினால் ஏற்பட்டது. அதாவது, ரூபாயின் பெறுமதி ஏறத்தாழ 10% வீழ்ச்சியடைந்தமை, பணவீக்கம் 6% ஐ விட அதிகமாகக் காணப்பட்டமை, மின்சாரக் கட்டணங்கள் உயர்வடைந்தமை மற்றும் உலகளாவிய எரிபொருள் விலைகளின் கணிசமான உயர்வு ஆகியவை செலவுகளை அதிகரித்தன. குறிப்பாக டொலரில் நிர்ணயிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்ப்புப் பொருட்களுக்கான செலவுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன.


குழுமத்தின் பெறுபேறுகள் தொடர்பில் SLT குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “2026 ஆம் நிதியாண்டின் முதலாவது அரையாண்டானது SLT- MOBITEL இற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது. இந்த வெற்றியின் அடித்தளமாக திகழும் எமது ஊழியர்களின் சிறப்பான பணிக்கு எனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது இலக்குகளை அடையவும், புதிய தொழில்துறை தரநிலைகளை அமைக்கவும் உதவும் வகையில், எமது குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சிறப்பான சேவையை வழங்குவதில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கூட்டுச் சாதனைகள் குறித்து நாங்கள் அளப்பரிய பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.


பிரதான சேவைகளின் பங்களிப்புடன் SLT PLC வளர்ச்சி பதிவு


SLT PLC இன் வருமானம் 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் 10.7% அதிகரித்து ரூ. 39,309 மில்லியனை எட்டியுள்ளதுடன், இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 35,513 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. இதில் புரோட்பான்ட் சேவை மீண்டும் ஒருமுறை குறிப்பிடத்தக்க சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, EBITDA தொகையும் 11.3% அதிகரித்து ரூ. 14,854 மில்லியனாக உயர்ந்துள்ளது.


இலாபத் தன்மையின் அதிகரிப்புகள் மேலும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தன. தொழிற்படு இலாபம் 39.8% அதிகரித்து ரூ. 6,663 மில்லியனாகவும், வரிக்கு முந்தைய இலாபம் 66.5% உயர்ந்து ரூ. 6,127 மில்லியனாகவும் பதிவாகின. மேலும், 2025 முதல் அரையாண்டில் ரூ. 2,647 மில்லியனாகக் காணப்பட்ட வரிக்குப் பிந்தைய இலாபம், 74.9% அதிகரித்து ரூ. 4630 மில்லியனை எட்டியுள்ளது.

 தொழிற்பாட்டு செலவுகள் (தேய்மானம் தவிர்ந்த) 10.3%


உயர்வடைந்த போதிலும், நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாப வளர்ச்சி இதை விட அதிகமாக இருந்ததால் இந்தச் செலவுக் கூடுதலை எளிதாக ஈடுகட்ட முடிந்தது. பணவீக்க சவால்கள் இருந்தபோதிலும், இந்த நிதிப் பெறுபேறுகள் வினைத்திறனான செலவு முகாமைத்துவத்தை வெளிப்படுத்துவதுடன், வளர்ச்சியை வலுவான ஈட்டலாக மாற்றியுள்ளன.


SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் கருத்துத் தெரிவிக்கையில், “2026 ஆம் ஆண்டின் எமது முதலாவது அரையாண்டுச் செயல்பாடானது, புரோட்பான்ட் சேவைகளுக்கான தொடர்ச்சியான தேவை, என்டர்பிரைஸ் மற்றும் carrier வியாபாரங்களின் வலுவான பங்களிப்பு மற்றும் மொபிடெலின் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றால் அடையப்பட்டது. எமது 5G மற்றும் FTTH விரிவாக்கங்களுடன் நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அரசாங்கத்தின் இலட்சியங்களுக்கு அமைவாக, இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் வளர்ச்சிக்குத் தேவையான இணைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குவதில் SLT குழுமம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.” என்றார்.

புரோட்பான்ட் மற்றும் பாவனையாளர் வளர்ச்சியுடன் மொபிடெல் முன்னேற்றகரமான பெறுபேறுகளை பதிவு


மொபிடெலின் வருமானம் 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் 12.9% அதிகரித்து ரூ. 26,340 மில்லியனை எட்டியதுடன், இது முந்தைய ஆண்டை விட ரூ. 3,007 மில்லியனின் உயர்வாகும். புரோட்பான்ட் துறையில் பதிவான தொடர்ச்சியான வளர்ச்சியே இதற்கு பிரதான காரணியாக அமைந்தது.


EBITDA தொகை, 16.9% அதிகரித்து ரூ. 8,739 மில்லியனாகவும், தொழிற்படு இலாபம் 30.3% வளர்ச்சியடைந்து ரூ. 2,595 மில்லியனாகவும் உயர்வடைந்தது. வரிக்கு முந்தைய இலாபம் 60.5% அதிகரித்து ரூ. 2,086 மில்லியனை எட்டியதுடன், வரிக்குப் பிந்தைய இலாபம் 62% வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ. 1,724 மில்லியனாக உயர்ந்தது. 2025 டிசம்பரில் பெறப்பட்ட 5G அலைவரிசையுடன் தொடர்புடைய உரிமக் கட்டணங்கள் உள்ளிட்ட வலையமைப்பு செலவுகள் மற்றும் வணிகத்தின் ஏனைய துறைகளில் அதிகரித்த உள்ளீட்டுச் செலவுகள் காரணமாக, தொழிற்பாட்டு செலவுகள் 11.0% உயர்வடைந்தன.


5G இணைப்புத்திறன் மற்றும் AI பின்பற்றலை மேம்படுத்தல்


5G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றுக்கு இடையே உள்ள சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பை அங்கீகரித்து, SLT-MOBITEL மொபைல் அதன் 5G வலையமைப்பின் விரிவாக்கத்தை மேலும் துரிதப்படுத்துகிறது. 5G வலையமைப்பு மூலம் அதிவேகம், சிறந்த நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட இணைப்பு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரங்களுக்கும் வழங்கி AI ஆல் இயக்கப்படும் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றது. நாட்டின் பிரதான AI நிகழ்வான Sri Lanka AI Week 2026 க்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடி முயற்சியுடன் இணைந்து, உலகளாவிய டிஜிட்டல் முன்னேற்றப் போட்டியில் இலங்கை மக்கள் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதிலும், அதிநவீன தொழில்நுட்பங்களை நேரடியாக அனுபவிப்பதற்கும் AI இன் உருமாற்றத் திறனைப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதற்குமான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதிலும் குழுமம் கொண்டுள்ள
பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. 


Q2 2026 உறுதியான முதல் காலாண்டு போக்கை வெளிப்படுத்தியிருந்தது


இரண்டாவது காலாண்டானது, முதலாவது காலாண்டின் வலுவான வளர்ச்சியைப் பிரதிபலித்து, தொடர்ச்சியான அதிகரித்த வளர்ச்சிப் போக்கைக் காண்பித்தது. 2025 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் குழுமத்தின் வருமானம் 11.7% அதிகரித்து ரூ. 30,517 மில்லியனாக உயர்ந்தது. புரோட்பான்ட் துறையில் நிலவிய தொடர்ச்சியான பலத்தின் காரணமாக, மொபிடெலின் 2 ஆம் காலாண்டு வருமானம் மேலும் அதிகரித்து 16.0% வலுவடைந்தது. இக்காலாண்டிற்கான குழுமத்தின் EBITDA தொகையானது 10.9% ஆக மேலும் அதிகரித்து ரூ. 11,960 மில்லியனை எட்டியதுடன், தொழிற்படு இலாபம் 30.4% அதிகரித்து ரூ. 5,033 மில்லியனாக உயர்வடைந்தது.


நிறுவன மட்டத்தில், SLT PLC இன் 2 ஆம் காலாண்டுச் செயல்பாடானது குறிப்பாக மிக வலுவாக இருந்தது. EBITDA தொகையானது 9.4% அதிகரித்து ரூ. 7,219 மில்லியனாகவும், தொழிற்படு இலாபம் 44.1% அதிகரித்து ரூ. 3,212 மில்லியனாகவும், வரிக்கு முந்தைய இலாபம் 83.5% உயர்ந்து ரூ. 3,228 மில்லியனை எட்டியதுடன், வரிக்குப் பிந்தைய இலாபம் 97.2% அதிகரித்து ரூ. 2,570 மில்லியனாகப் பதிவானது. தொழிற்பாட்டு செலவுகள் (தேய்மானம் தவிர்ந்த) 11.6% அதிகரித்திருந்தது.

மொபிடெலின் 2 ஆம் காலாண்டு EBITDA ஆனது 11.8% அதிகரித்து ரூ. 4,396 மில்லியனாகவும், தொழிற்படு இலாபம் 11.8% உயர்ந்து ரூ. 1,266 மில்லியனாகவும் முன்னேற்றமடைந்தன. மேலும், வரிக்கு முந்தைய இலாபம் 44.3% அதிகரித்து ரூ. 1,103 மில்லியனாகவும், வரிக்குப் பிந்தைய இலாபம் 60.5% உயர்ந்து ரூ. 943 மில்லியனாகவும் பதிவாகின. தொழிற்பாட்டு செலவுகள் 18.0% உயர்ந்தன.


இரண்டாவது காலாண்டிற்கான (Q2) குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 55.3% அதிகரித்து ரூ. 3,533 மில்லியனாக வளர்ச்சியடைந்தது. ஆண்டின் முதலாவது ஆறு மாத காலத்தில் காணப்பட்ட அதே செலவின அழுத்தங்கள் காரணமாக, இக்காலாண்டிற்கான தொழிற்பாட்டுச் செலவுகள் (தேய்மானம் தவிர்ந்த) 12.2% உயர்ந்து ரூ. 18,557 மில்லியனாகப் பதிவாகின.