பிரித்தானியாவின் Global Marine Systems நிறுவனத்திற்காக அதிநவீன கேபிள் இடும் கப்பலை கட்டும் கொழும்பு டொக்கியார்ட்
பிரித்தானியாவின் Global Marine Systems நிறுவனத்திற்காக 100 மீற்றர் நீளமான அதிநவீன கடலடி கேபிள் இடும் மற்றும் பழுதுபார்க்கும் கப்பலை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கொழும்பு டொக்கியார்ட் கையெழுத்திட்டுள்ளது.
இலங்கையின் கப்பல் கட்டுமானத் துறையில் முன்னணி வகிக்கும் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம் (CDPLC), கடலடி தகவல் தொடர்பு கேபிள்களை நிறுவுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றிற்கான சிறப்புக் கப்பல்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் சர்வதேச நிறுவனங்களின் உயர்ந்த ஈர்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகிறது.
கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம், கடலடி கேபிள் இடுதல் மற்றும் பழுதுபார்ப்புக் கப்பல் (Cable Laying and Repair Vessel) ஒன்றை உற்பத்தி செய்வதற்காக பிரித்தானியாவின் Global Marine Systems Limited நிறுவனத்துடன் உத்தியோகபூர்வ கப்பல் கட்டுமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Global Marine Systems நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சைமன் ஹிப்பர்ட் அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வில் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகக் குழுவினர்களான, கிஹான் ரவீனாத் - பொது முகாமையாளர் (நிதி)/தலைமை நிதி அதிகாரி, வஜிர ரத்நாயக்க - பொது முகாமையாளர் (விநியோகச் சங்கிலி முகாமையாளர்), மங்கள டி சில்வா - பொது முகாமையாளர் (மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாகம்), பிரபாத் அபேசிங்க - பொது முகாமையாளர் (கப்பல் துறை மேம்பாடு), கே.என்.ஜி.டபிள்யூ. காரியவசம் - பொது முகாமையாளர் (உற்பத்தி) எஸ்.எச்.பி.கே. ரணதுங்க - பொது முகாமையாளர் (கப்பல் பழுதுபார்ப்பு வணிகம்), பென்னி பெர்னாண்டோ – ஆலோசகர், பிரின்ஸ் லை - கப்பல் கட்டுமான விற்பனைப் பிரிவுத் தலைவர், சஞ்சீவ ஜயதிலக்க - துணைப் பொது முகாமையாளர் (திட்ட மாற்றம்), எஸ்.எம்.எஸ்.பி. சேரசிங்க அவர்கள் - துணைப் பொது முகாமையாளர் (சிறப்புத் திட்டங்கள்), திஸர ஹேவாவசம் - துணைப் பொது முகாமையாளர் (ஆக்கம்), மனோரி மல்லிகாரச்சி - சட்ட ஆலோசகர்/நிறுவனச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிலைமை
இந்தக் கப்பல் அதிநவீனமானதாகவும், உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் பொருத்தப்பட்டதாகவும் இருக்கும். கடலடி கேபிள்களை இடுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய பணிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல், கடினமான கடல் நிலைகளிலும் நிலைத்திருக்கும் உயர் திறனையும், மிகக் குறைந்த எரிபொருள் நுகர்வையும் கொண்டிருக்கும்.
நோர்வேயின் Vard Design AS நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல், அதன் சிறப்பான மேலோட்ட வடிவமும் முன்பகுதி அமைப்பும் காரணமாக அதிக வேகத்தை அடையவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இயங்கவும் உதவுகிறது.
பிரான்சின் Bureau Veritas Classification Society தரநிலைகளுக்கு இணங்க உற்பத்தி செய்யப்படும், 100 மீட்டர் நீளமும் 1800 தொன் கொள்ளளவும் கொண்ட இந்த கேபிள் கப்பல், குறைந்த எரிபொருள் நுகர்வு கொண்ட டீசல்-மின்சார இயந்திர அமைப்பினால் இயக்கப்படுகிறது. இந்தக் கப்பல் கடலடியில் கேபிள் இடுதல், பழுதுபார்த்தல் மற்றும் ROV (தொலைவில் இயக்கப்படும் நீர்மூழ்கி) ஆய்வுகள் செய்யக்கூடிய ஆற்றல் மற்றும் 14.5 knots ஆகக் கூடிய வேகத்தில் செல்லக் கூடியதுடன் இதில் 76 பேர் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.
சந்தை முன்னிலைப் பங்கு
கடலடி கேபிள் இடுதல் மற்றும் பழுதுபார்ப்பு சிறப்புக் கப்பல்களை உற்பத்தி செய்யும் துறையில் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனத்திற்கு (CDPLC) உள்ள சர்வதேச சந்தை முன்னிலை இந்தத் திட்டங்களின் மூலம் நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் 113 மீட்டர் நீளமுள்ள KDDI Cable Infinity என்ற கேபிள் இடும் கப்பல் ஜப்பானுக்கு வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 100 மீட்டர் நீளமுள்ள Sophie Germain என்ற கேபிள் இடுதல் மற்றும் பழுதுபார்ப்பு கப்பல் பிரான்சுக்கு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாகவே பிரான்சுக்காக இதே போன்ற இரு கப்பல்களை
உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன, அவை 2028 மார்ச் மற்றும் 2029 ஜனவரி மாதங்களில் ஒப்படைக்கப்படவுள்ளன. பிரித்தானியாவின் Global Marine நிறுவனத்திற்காக உற்பத்தி செய்யப்படும் இந்த புதிய அதிநவீன கப்பல் 2029 செப்டம்பர் மாதத்தில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளது.
இலங்கையின் திறன்
தற்போது கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம், கடலடி கேபிள் இடுதல் மற்றும் பழுதுபார்ப்புக் கப்பல்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் உயர்ந்த அங்கீகாரத்தையும் நம்பகத்தன்மையையும் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனமாக அறியப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பிய கப்பல் உரிமையாளர்களின் விருப்பமான இடமாக கொழும்பு நகரம் உருவெடுத்துள்ளது. மேலும், புகழ்பெற்ற ஐரோப்பிய சந்தைக்கு வெற்றிகரமாக நுழைவதற்கு கொழும்பு டொக்கியார்ட் நிறுவனத்தால் முடிந்துள்ளது. இலங்கையின் கப்பல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாக, உலகளவில் இத்தகைய பெரிய அளவிலான திட்டங்களைப் பெற்று அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்து, இலங்கையின் தொழில்மயமாக்கலில் முன்னிலை வகிக்க அவர்களால் முடிந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற Mazagon Dock Shipbuilders Limited நிறுவனம் இதன் முக்கிய பங்குதாரராக உள்ளது.
அவர்களுடனான வெற்றிகரமான ஒத்துழைப்பிற்குப் பின்னர் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம் பெற்ற இரண்டாவது பெரிய சர்வதேச கேபிள் கப்பல் ஒப்பந்தம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி வருமானம்
கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம், கப்பல் கட்டுமான ஏற்றுமதித் துறை மூலம் இலங்கைப் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான பெருமளவு வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தருகிறது. இது தேசிய ஏற்றுமதி வருமானத்திற்கு உயர்ந்த பங்களிப்பை வழங்குகிறது. மேலும், இலங்கையை கடல் மண்டல மையமாக மேம்படுத்துவதற்கான கடல்சார் உத்திகளை வலுப்படுத்துவதிலும், நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்கள் முன்னணி பங்கை ஆற்றுகின்றனர்.
editor