“சுத்தமான இலங்கை” முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு – 112 மில்லியன் ரூபா திட்டத்தில் 8 தாழ்வான தளம் கொண்ட பேருந்துகளை வழங்கியது !
Japan donates 8 low-floor eco-friendly buses to Sri Lanka under the GGP grant, supporting the Clean Sri Lanka initiative and improving public transport accessibility.
“அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்திற்காக எட்டு (8) தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குவதற்காக நன்கொடை உடன்படிக்கை ஒன்றில் ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா இன்று வெள்ளிக்கிழமை (27) கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேராவுடன் கைச்சாத்திடப்பட்டது.
ஜப்பான் அரசு இந்தத் திட்டத்திற்கு 362,476 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 112 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் பெப்ரவரி 2025-ல் இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஜப்பானின் வெளிநாட்டு பிரது அமைச்சர் திருமதி. அகிகோ இகுய்னாவுடனான ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் சந்திப்பில், அவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த சந்திப்பில் ஜனாதிபதி, ஜப்பானில் இருந்து தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ள பேருந்துகள், பயன்பாட்டின் பின் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட வாகனங்களாகும். அவை யூரோ 4 வெளியீட்டுத் தரநிலைகளுக்கு உட்பட்ட, சூழலுக்கு மிகவும் உகந்த வாகனங்களாகும். இந்த திட்டம் தற்போதைய நிர்வாக அமைப்பில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றான “சுத்தமான இலங்கை” முன்னெடுப்பை நேரடியாக ஆதரிக்கிறது. இந்த உயர் தர வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறைப்பது போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதை
நோக்கமாகக் கொண்டுள்ளோம். தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடியவையாக இருப்பதால், இந்தத் திட்டம் ஜப்பான் அரசின் ராஜதந்திர கொள்கைகளில் முக்கியமான “மனித பாதுகாப்பு” என்ற கொள்கையின் கீழ் உள்ளடங்கும். இது நலிவுற்ற நபர்கள் மரியாதையுடன் வாழவும் வலிமை பெறவும் உதவும். இந்த பேருந்துகள் பணியாளர்களின் போக்குவரத்தை சீராக்குவதன் மூலம், இலங்கையர்களின் மொத்த வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாக நான் நம்புகிறேன்.” என்றார்.
இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா, இவ்வாறு கூறினார்.
“இந்த மதிப்புமிக்க நன்கொடை, இலங்கையர்களின் வாழ்க்கையில் அத்தியாவசிய பங்காற்றும் பொது போக்குவரத்துக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நேரடி மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை மக்களின் ‘ஒரு வளமையான நாடு – அழகான வாழ்க்கை என்ற தேசிய கண்ணோட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நீண்டகால நிகழ்ச்சியில் பங்களித்திருக்கும் ஜப்பான் அரசு மற்றும் ஜப்பானிய மக்களுக்கு, நாங்கள் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது இரு நாடுகளுக்கிடையிலான
நிலையான மற்றும் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை தரும் எதிர்காலத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது.
editor