இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கு பிரான்ஸ் ஆதரவு

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை மேம்படுத்த பிரான்ஸ் 520,000 யூரோ நிதியுடன் இரண்டு ஆண்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கு பிரான்ஸ் ஆதரவு

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கமான மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையில் “Inclusive Health” எனும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பிரான்ஸ் தூதரகம் மற்றும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPASL) ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஜூலை 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம்  FPASL நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் ருசித பெரேரா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

பிரான்ஸ் தூதரகத்தின் 520,000 யூரோ நிதியுதவியுடன், 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை FPASL ஒருங்கிணைக்கவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள், தங்களுக்கு ஏற்ற பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு பதிலளிப்பதற்குமான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

2023 முதல் 2025 வரை FPASL உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பிரான்ஸின் நிதியுதவி பெற்ற “Collective Action Against Period Poverty” (CAAPP) திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு “Inclusive Health” திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

CAAPP திட்டத்தின் மூலம் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள், சுகாதார வசதிகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான அணுகல் மேம்படுத்தப்பட்டிருந்த போதிலும், மாற்றுத்திறனாளிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத் தேவைகளுக்கு போதிய கவனம் செலுத்தப்படாத நிலை அடையாளம் காணப்பட்டது.

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான ஆதரவு சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான, தகவல் சார்ந்த மற்றும் நிறுவன ரீதியான தடைகளை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு அதிகமாக உள்ளாகக்கூடியவர்களாக இருப்பதுடன், துஷ்பிரயோகங்களைப் புகாரளிப்பதிலும் தேவையான ஆதரவைப் பெறுவதிலும் மேலதிக தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, புதிய திட்டம் உள்ளடக்கத்தை தனது மைய அணுகுமுறையாகக் கொண்டு செயல்படவுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கான இலக்கு அடிப்படையிலான பயிற்சிகள் வழங்குதல், சுகாதார நிலையங்களின் அணுகல்தன்மையை மேம்படுத்துதல், அத்தியாவசிய சேவைகளை சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை ரீதியான பரிந்துரைகளை முன்னெடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாலின சமத்துவத்தை சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகக் கொண்டுள்ள பிரான்ஸின் பெண்ணிய இராஜதந்திரக் கொள்கையுடன் இந்தத் திட்டம் இணைந்துள்ளது. மனித உரிமைகள், உள்ளடக்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்த்தல் ஆகியவற்றில் பிரான்ஸ் கொண்டுள்ள பரந்த முன்னுரிமைகளையும் இத்திட்டம் பிரதிபலிக்கிறது.

அத்துடன், பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் இலங்கை சிவில் சமூகத்துக்கு பிரான்ஸ் வழங்கி வரும் ஆதரவின் தொடர்ச்சியாகவும் “Inclusive Health” திட்டம் அமைகிறது.