உலக உணவு தினம் 2026: இலங்கை இளைஞர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு புதிய தளம்

FAO, கல்வியமைச்சு மற்றும் HNB இணைந்து இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்பின் சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேசிய இளைஞர் புத்தாக்க சவாலை அறிமுகப்படுத்தியுள்ளன.

உலக உணவு தினம் 2026: இலங்கை இளைஞர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு புதிய தளம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது (FAO), கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியவற்றுடன் இணைந்து உலக உணவு தினம் 2026 இளையோருக்கான புதுமைப் படைப்பாற்றல் சவால் (World Food Day 2026 Youth Innovation Challenge) என்ற போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இப்போட்டியானது, இலங்கையின் விவசாய-உணவுக் கட்டமைப்பு
எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய எமது புதிய கண்டுபிடிப்புக்களே நாளைய உலகை வளமாக்கும்! என்ற உலக உணவு தினம் 2026 இன் கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்முயற்சியானது, திறமையான, நெகிழ்ச்சியான மற்றும் நிலையான விவசாய-உணவுக் கட்டமைப்புகளுக்கு பங்களிக்கும் நடைமுறைக்கு சாத்தியமான, அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்காக இளைஞர்களின் படைப்பாற்றல், அறிவு மற்றும் தொழில்முனைவோர் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் இப்போட்டி நடத்தப்படுகின்றது. தொழில்நுட்ப பங்காளர்களாக ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டி (TRACE Expert City), மின் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர் நிறுவனம் (IEEE), இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (SLIC), இலங்கை விவசாய தொழில்முனைவோர் மன்றம் (SLAF), இலங்கை உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL) மற்றும் தேசிய புத்தாக்க முகவர் நிலையம் (NIA) ஆகியன உள்ளடங்குவதுடன், தொழில்நுட்ப மற்றும் வசதியளிக்கும் பங்காளராக ஸ்கொயர் ஹப் (Square Hub) நிறுவனம் இணைந்துள்ளது.

இலங்கையின் விவசாய-உணவுக் கட்டமைப்புகளை பொறுத்தவரை, அறுவடைக்கு பிந்தைய இழப்புகள், காலநிலை சார் நெருக்கடிகள், வினைத்திறனற்ற நீர் பயன்பாடு, பூச்சி மற்றும் நோய்த்தாக்க அச்சுறுத்தல்கள், பலவீனமான சந்தை இணைப்புகள், கடற்றொழில் உற்பத்திகள் பழுதடைதல், மீன்பிடி உபகரணங்களின் இழப்பு மற்றும் கட்டுப்படியாகும் செலவிலான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேலாண்மைக்கான தடைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை, தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றன. அதேவேளையில், நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி, பொறியியல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் திறன் ஆகியவற்றில் கணிசமான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன. இவை புத்தாக்கங்களின் ஊடாக இச்சவால்களுக்குத் தீர்வுகாண உதவ முடியும்.

எமது நாட்டின் மிக முக்கியமான சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான படைப்பாற்றல், அறிவு மற்றும்
மனஉறுதியைக் கொண்ட திறமையான இளைஞர்களின் மையமாக எமது பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன, என்று கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான
கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உலக உணவுத் தின இளைஞர் புத்தாக்க போட்டியின் ஊடாக, பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் தங்களது கற்றலை நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உயர்கல்வித் துறையில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் திறனை வலுப்படுத்துகிறோம். மேலும் நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க இந்த முன்முயற்சி அடுத்த தலைமுறை புத்தாக்குநர்களுக்கு ஊக்கமளிக்கும் எனன நம்புகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.


அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு கல்வித்துறைகளைச் சார்ந்த மாணவர் குழுக்கள் இணைந்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை, சுற்றாடல், காலநிலை மாற்றத்திற்கு முகம்கொடுக்கும் திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் காணப்படும் நிஜ உலக சவால்களுக்குரிய தீர்வுகளை உருவாக்குவதற்காக, இந்த இளைஞர் புத்தாக்க சவாலானது ஒரு தேசிய தளத்தை வழங்கும்.


இந்த சவால் குறித்து ஹட்டன் நெஷனல் வங்கி பிஎல்சி-யின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த கூறுகையில், இளைஞர்கள் தமது சிந்தனைகளை சமூகத்திற்கு நிலையான பெறுமதியை உருவாக்கும் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்று HNB ஆகிய நாம் நம்புகின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயம், உணவுத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கு வழியமைக்கும் அதேவேளையில், தொழில்முனைவோர் பண்பாட்டையும் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் திறனையும் வளர்க்கும் இந்த முன்முயற்சியில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடனும், இலங்கை அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படுவதில் நாம் பெருமையடைகின்றோம்" என மேலும் தெரிவித்தார்.


இலங்கையின் விவசாய-உணவுக் கட்டமைப்பின் எதிர்காலம் புத்தாக்கத்திலும், இளைஞர்களின் ஆற்றல் மற்றும் படைப்பாற்றலிலுமே தங்கியுள்ளது, என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி திரு. விம்லேந்திர ஷரண் தெரிவித்தார்.


இப்போட்டியின் ஊடாக, மாணவர்கள் தமது சிந்தனைகளை நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளாக
மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் அதன் பங்காளர்களும் உருவாக்கித் தருகின்றனர். இவை நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், மேலும் நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விவசாய-உணவுக் கட்டமைப்புகளுக்கு பங்களிப்பு செய்யும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


இப்போட்டியானது பல கட்டங்களைக் கொண்ட செயன்முறை மூலம் நடத்தப்படும். முதற்கட்டமாக, நாடளாவிய ரீதியில் திட்ட விளக்கக் குறிப்புகளை (Concept notes) சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படும். ஆரம்பகட்ட மதிப்பீட்டினை தொடர்ந்து, சுமார் 25 குழுக்கள் தமது திட்டங்களை இணையவழியாக முன்வைக்கும் சுற்றுக்கு அழைக்கப்படுவர். அதிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த 10 குழுக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துறைசார் பங்காளர்களின் வழிகாட்டலுடன் தமது மாதிரி வடிவங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்வர்.


இறுதிச் சுற்றுக்கு தெரிவுசெய்யப்படும் குழுக்கள், தமது மாதிரி வடிவங்களை தேசிய உலக உணவு தினம் 2026 கொண்டாட்டங்களின் போது காட்சிப்படுத்துவர். அங்கு முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும்
குழுக்கள் நடுவர் குழு மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமது புத்தாக்கங்களை
முன்வைப்பர். முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொள்ளும் குழுக்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படும் அதேவேளையில், இறுதிச் சுற்றுக்கு தெரிவுசெய்யப்படும் அனைத்து குழுக்களும் தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றுக்காள்வதுடன், அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும்
பெற்றுக்கொள்வர்.


புத்தாக்கத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்கள், அரசாங்க நிறுவனங்கள், தொழில்முன்னோடிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் இந்த போட்டி நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கல்விசார் ஆராய்ச்சிகளை நடைமுறைக்கு சாத்தியமான பயன்பாடுகளாக மாற்றி, அதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள், கால்நடை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்க வழிவகுக்கும்.


1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதை
நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் இந்த தினமானது, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் நிலையான விவசாய-உணவுக் கட்டமைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு
கிடைப்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளையும் ஊக்குவிக்கின்றது.