அரகலய போராட்டக்காரர்களுக்கு உதவியவருக்கு உயிர் அச்சுறுத்தல்
அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞர்கள், அதில் பங்குப்பற்றியவர்கள் அண்மைக்காலமாக இலக்குவைக்கப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அரகலய போராட்டக்காரர்கள் தொடர்பில் போலியான விம்பமொன்றை மக்கள் மத்தியில் உருவாக்கும் பணியில் அரச ஊடகங்கள் பல ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அவர்களில் பலர் தமது தொழிலை இழந்து தொடர்ந்து உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர்.
வேறுசிலர் போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 38 வயதான வீரராஜன் ஜெயப்பிரியன் அரகலய மக்கள் போராட்டத்தில் பங்குபற்றிய ஒரே காரணத்துக்காக தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றார்.
இவர் தமிழர், அரகலய போராட்டக்காரர் என்ற இரட்டைப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றார்.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை, தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பை பேணியமை போன்ற போலியான குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி புலனாய்வு பிரிவினர் இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் வீட்டுக்கு தேடிவருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
அரகலய மக்கள் போராட்டம் துயரத்தை தவிர வேறொன்றையும் கொண்டு வரவில்லை.
எனது நண்பர்கள், குடும்பத்தினருடன் அரகலய மக்கள் போராட்டத்தில் நான் பங்குபற்றியுள்ளேன். இதுதவிர பிரதான போராட்டக்காரர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகளை செய்துள்ளேன். அவர்களை எனது காரில் ஏற்றி சென்றுள்ளேன். இதை தவிர நான் வேறு எந்த குற்றத்தையும் இழைக்கவில்லை. எனினும் தற்போது போலியான குற்றச்சாட்டுக்கள் என் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நான் வேலை நிமித்தம் எங்கு சென்றாலும் சிவில் உடையில் சிலர் என்னை பின்தொடர்கின்றனர்.
அதுமட்டுமின்றி அடிக்கடி வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதன்போது எனது 4 வயது மகள் சரியாக பயப்படுவாள்.
ஒவ்வொரு முறையும் நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது என் மனைவி பயப்படுகின்றார்.
எனது தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் என்னை வறுமையில் தள்ளியுள்ளது.
இந்நாட்டில் எதுநடந்தாலும் முதலில் தாக்கப்படுவது எம்மை போன்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழர்கள் என கவலையுடன் அவர் தெரிவித்தார்.
editor