ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து: நேரடி நிர்வாகப் பொறுப்பை ஏற்றது IPG மற்றும் SLC
The ownership agreement between Jaffna Kings and Sports Commune has been terminated due to financial obligations not being fulfilled. IPG and Sri Lanka Cricket will take direct control of the team, while the Jaffna Kings will continue in the Lanka Premier League 2026 without changes.
லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் உரிமை நிறுவனமான 'இன்னோவேடிவ் புரொடக்ஷன் குரூப்
(ஐ.பி.ஜி), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து, ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்போர்ட்ஸ் கம்யூன் (Sports Commune) நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது.
ஒப்பந்த நிபந்தனைகளின்படி நிதிப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றத் தவறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெப்னா கிங்ஸ் அணியின் அனைத்து உரிமைகளும் மீண்டும் ஐ.பி.ஜி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து அணியின் முழுமையான செயல்பாட்டுப் பொறுப்புகளையும் அந்த நிறுவனம்
ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனிடையே, எல்.பி.எல் தொடரின் 6ஆவது அத்தியாயம் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறும் என்றும், ஜெப்னா கிங்ஸ் அணி அதே பெயரிலேயே தொடர்ந்து விளையாடும் என்றும் ஐ.பி.ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அணியின் வீரர்கள், தொடரின் வடிவம் அல்லது போட்டி அட்டவணையில்
எவ்வித மாற்றமும் இருக்காது.
அணியின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் ஒப்பந்தங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஐ.பி.ஜி நிறுவனம் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளன. அணியின் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முழு அணியும் எவ்வித பாதிப்புமின்றி போட்டியில் களமிறங்கும்.
மேலும், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் சுமார் 90% ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகைகள் ஒப்பந்தத்தின் படி விரைவில் வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரர்கள், அணிகள், வர்த்தக பங்காளர்கள் மற்றும் ரசிகர்களிடையே தொழில்முறை தர்மம், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பேணி, 6வது எல்.பி.எல் தொடரை மிகச்சிறப்பாக நடத்தி முடிக்க ஐ.பி.ஜி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதியேற்றுள்ளன.
இதுகுறித்து ஜ.பி.ஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் கூறுகையில், “இது ஒரு கடினமான முடிவாக இருந்தபோதிலும், லங்கா பிறீமியர் லீக்கின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், வீரர்கள்,
பயிற்றுவிப்பாளர்கள், பங்காளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு முழுமையான நலனை உறுதி செய்வதும் மட்டுமே எங்களின் முதன்மை முன்னுரிமையாகும். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து, ஜெப்னா கிங்ஸ் அணி எவ்வித இடையூறுமின்றி தொடரில் தொடர்ந்து பங்கேற்பதை உறுதிசெய்ய நாங்கள்
உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். வீரர்கள் ஒப்பந்தங்கள், ஊழியர்களுக்கான கடப்பாடுகள் மற்றும் அணியின் ஏனைய அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சீராக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம். எல்.பி.எல் தொடரின் 6ஆவது அத்தியாயம் திட்டமிட்டபடி நடைபெறும், மேலும் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த தொடரை வழங்க நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.” என்றார்.
editor