‘Atlas Angel II’ பயிற்சி: பேரனர்த்தங்களுக்கு பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் அமெரிக்கா – இலங்கை
பேரனர்த்தங்களின் போது தயார்நிலை மற்றும் விரைவான பதிலளிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து ‘Atlas Angel II’ கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன.
பேரனர்த்தங்களின் போது திறம்பட பதிலளிக்கும் திறனையும் தயார்நிலையையும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து ‘Atlas Angel II’ என்ற கூட்டுப் பயிற்சியை இன்று (31) ஆரம்பிக்கின்றன.
ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சியில் C-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், சம்பவக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கட்டுமானப் பொறியியல், நிலச்சரிவு மீட்பு மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் அபாயங்களுக்கான பதிலளிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பரிமாற்றமும் கூட்டுப் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப் படையினருடன், மொன்டானா தேசிய காவற் படையைச் சேர்ந்த குழுக்களும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. விமானப்படை பிரிகேடியர் ஜெனரலுக்கான உதவிப் பிரதான நிர்வாக அதிகாரி ட்ரேஸ் தோமஸ் மற்றும் இராணுவ பிரிகேடியர் ஜெனரலுக்கான உதவிப் பிரதான நிர்வாக அதிகாரி ரினேயா டோர்வல் ஆகியோரின் தலைமையில் மொன்டானா தேசிய காவற் படை குழுக்கள் பங்கேற்கின்றன. ஐக்கிய இராச்சியம் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த அதிகாரிகள் இப்பயிற்சியை அவதானிக்கவுள்ளனர்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இப்பயிற்சியின் சில நடவடிக்கைகள் கண்டியிலும் இடம்பெறவுள்ளன. மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்றும் இலங்கைப் படைகளுக்கிடையிலான நடைமுறை ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
“பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதில் அமெரிக்காவும் இலங்கையும் பகிரப்பட்ட அக்கறையைக் கொண்டுள்ளன. அமெரிக்கர்களும் இலங்கையர்களும் நிபுணத்துவங்களைப் பகிர்ந்து, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, ஒன்றிணைந்து பயிற்சி செய்வதன் மூலம் எமது பங்காண்மையை நடைமுறையில் வலுப்படுத்துகிறோம்” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பண்டு எதிரிசிங்க, இயற்கை அனர்த்தங்களுக்கு எல்லைகள் கிடையாது எனக் குறிப்பிட்டதுடன், பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவசரநிலைகள் ஏற்படுவதற்கு முன்னரே கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது, நெருக்கடி நிலைமைகளின்போது தொடர்பாடல், ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான பதிலளிப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் போது அமெரிக்க மற்றும் இலங்கைப் படைகள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கியமை இத்தகைய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பொருட்களை விநியோகிப்பதற்காக அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J Super Hercules விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.
மொன்டானா தேசிய காவற் படைக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை 2021ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறையின் State Partnership Program கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 2025 நவம்பரில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பேரனர்த்த பதிலளிப்பு, விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேலும் முறைப்படுத்தப்பட்டது.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாக பசிபிக் பிராந்திய அமெரிக்க விமானப்படை இசைக்குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், இலங்கை இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியொன்றையும் நடத்தவுள்ளனர்.
காட்டுத்தீ, வெள்ளம் உள்ளிட்ட அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதில் மொன்டானா தேசிய காவற் படையின் அனுபவங்களையும், பேரனர்த்த முகாமைத்துவத்தில் இலங்கையின் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதன் மூலம் இரு தரப்பினரதும் தயார்நிலை மற்றும் செயற்பாட்டுத் திறன் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
editor