2026 ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வணிக நாமமாக இலங்கை வங்கி மீண்டும் தேர்வு

Bank of Ceylon retains its position as Sri Lanka’s most valuable brand for 2026 with a brand value of Rs. 65.5 billion and AAA brand strength rating.

2026 ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வணிக நாமமாக இலங்கை வங்கி மீண்டும் தேர்வு

  • Brand Finance Lanka மதிப்பீட்டில் 65.5 பில்லியன் ரூபாய் பெறுமதியுடன் முதலிடத்தைத் தக்கவைத்தது இலங்கை வங்கி


இலங்கையின் முன்னணி நிதியியல் நிறுவனமான இலங்கை வங்கி (BOC), 2026 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வணிக நாமம்' என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளது. 

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வணிக நாம மதிப்பீட்டு நிறுவனமான Brand Finance UK இன் இலங்கைக்கான அங்கத்துவ அமைப்பான Brand Finance Lanka வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவரிசையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, இலங்கை வங்கியின் வர்த்தக நாமப் பெறுமதி 14.1% வருடாந்த வளர்ச்சியுடன் 65.5 பில்லியன் ரூபாயாக உயர்வடைந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்கள் இலங்கை வங்கியின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், வங்கியின் உறுதியான நிதிப் பின்னணியுமே இச்சாதனைக்கு முதன்மையான
காரணமாகும்.


இம்முறை இலங்கை வங்கியின் வர்த்தக நாம வலிமை மதிப்பீடு (Brand Strength Rating) AAA என்ற உயரிய நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வங்கியின் வலுவான வாடிக்கையாளர் உறவுமுறை, சந்தைத்
தலைமைத்துவம், நவீன வங்கியியல் சேவைகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திட்டங்கள் ஆகியவற்றிற்கு கிடைத்த சான்றாக இத்தரமுயர்வு அமைந்துள்ளது.

வர்த்தக நாம முதலீடு (Brand Investment), வர்த்தக நாமப் பெறுமதி (Brand Equity) மற்றும் வர்த்தக நாமச் செயற்பாடு (Brand Performance) ஆகிய மூன்று பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டே Brand Finance Lanka இந்த மதிப்பீட்டை முன்னெடுக்கிறது. நிதிப் பகுப்பாய்வுகள் மற்றும் சுதந்திரமான நுகர்வோர் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த இத்தரவரிசை, வங்கியின் நிதி பலத்தை சர்வதேச தரத்தில் உறுதிப்படுத்துகிறது.


87 ஆண்டுகாலப் பாரம்பரியமும் உலகளாவிய அங்கீகாரமும் வெறும் நிதிசார் இலாபங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், டிஜிட்டல் மயமாக்கல், வாடிக்கையாளர் திருப்தி, நிலையான அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இலங்கை வங்கி காட்டிவரும் ஈடுபாடே இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணியாகும்.


கடந்த 87 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் நம்பிக்கைக்குரிய நிதிப் பங்காளியாகச் செயற்பட்டு வரும் இலங்கை வங்கி, மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்பத் தன்னைத் தொடர்ச்சியாகத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. கிராமப்புற மக்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவையை வழங்கி வருவதில் வங்கி முன்னோடியாகத் திகழ்கிறது.


அத்துடன், Brand Finance நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட உலகின் முன்னணி 500 வங்கி வர்த்தக நாமங்கள் 2026 (Top 500 Banking Brands 2026) உலகளாவியப் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கை வங்கி என்ற சாதனையை இலங்கை வங்கி படைத்துள்ளது. இது சர்வதேச நிதி அரங்கில் வங்கியின் வளர்ந்து வரும் நற்பெயரையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது. 


பொருளாதார வலிமையும் வரிப் பங்களிப்பும்

இலங்கை வங்கி நிதித்துறையில் ஈட்டியுள்ள வெற்றி நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 2025 ஆம் நிதியாண்டில், வங்கி 77 பில்லியன் ரூபாயை வரியாகச் செலுத்தி, இலங்கையின் மிகப்பெரிய பெருநிறுவன வரி செலுத்தும் நிறுவனமாக தனது இடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. மேலும், வரிக்கு முந்தைய இலாபமாக 120.8 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்து, தனது செயற்திறன் சிறப்பையும் நிதியியல் பலத்தையும் நிரூபித்துள்ளது. 


டிஜிட்டல் வங்கியியலும் நிலைபேறான அபிவிருத்தியும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப வங்கியியல் சேவைகளை வழங்கி வரும் இலங்கை வங்கியின் முதன்மை டிஜிட்டல் தளமான BOC Flex, இதுவரை 2.5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களையும், 2 டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான 
பரிவர்த்தனைப் பெறுமதியையும் எட்டியுள்ளது. மேலும், BOC Flex Tap Pay போன்ற நவீன தொழில்நுட்ப அறிமுகங்கள் மூலம் இலங்கையில் பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் வங்கி தீவிரமாகச்
செயற்பட்டு வருகிறது.

 
சுற்றாடல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை முதன்மைப்படுத்தி, இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றினால் இதுவரை வெளியிடப்பட்ட மிகப்பெரிய நிலைபேறான அபிவிருத்திப் பத்திரத்தை
இலங்கை வங்கி வெற்றிகரமாக வெளியிட்டு நிதியியல் துறையில் புதிய மைற்கல்லைப் பதித்துள்ளது.

தேசிய பேரிடர் நிவாரணமும் பரந்த கிளைக் கட்டமைப்பும்

தேசிய பேரிடர்களின் போது மக்களுக்கு உதவுவதில் இலங்கை வங்கி முன்னணியில் நிற்கிறது. அந்த வகையில், அண்மையில் நாட்டின் சில பகுதிகளைப் பாதித்த டித்வா; (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட
சமூகங்களை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம் (Rebuild Sri Lanka) நிதியத்திற்கு 500 மில்லியன் ரூபாயை இலங்கை வங்கி நன்கொடையாக வழங்கியுள்ளது.

வங்கிச் சேவைகளை மக்கள் மயப்படுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள அனைத்து 331 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தனது சேவையை விரிவாக்கியுள்ளது.BOC Connect முகவர் வங்கியியல் உள்ளிட்ட 2,500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள், ATM, CRM மற்றும் டிஜிட்டல் மையங்கள் ஊடாகத் தீவுமுழுவதும் தடையற்ற சேவையை வழங்கி வருகிறது. மேலும், ஐக்கிய இராச்சியம், இந்தியா (சென்னை) மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலும் தனது சர்வதேசக் கிளைகளை நிறுவி, சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.