பால்நிலை சார் வன்முறைக்கு எதிராகக் குரல்கொடுக்க செம்மஞ்சளாய் ஒளிர்ந்த கொழும்பு!
பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான 2026ஆம் ஆண்டின் 16 நாட்கள் செயற்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக கொழும்பின் தாமரைக் கோபுரமும் மாநகர சபைக் கட்டடமும் செம்மஞ்சளாய் ஒளிர்ந்தன.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலை சார் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கொழும்பு நகரின் இரண்டு முக்கிய அடையாளச் சின்னங்கள் நவம்பர் 25 முதல் 27 வரை அடையாளபூர்வமாக செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.
Women In Need (WIN) அமைப்பின் தலைமையில், நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் மற்றும்
கொழும்பு மாநகர சபை (CMC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த
முன்னெடுப்பின் கீழ், கொழும்பு மாநகர சபை கட்டடம் மற்றும் தாமரைக் கோபுரம் (நெலும் குலுன) ஆகியன தொடர்ச்சியாக மூன்று மாலைப் பொழுதுகளும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செம்மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்பட்டன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேசப் பிரச்சாரமான 'பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுத் திட்டம் 2026' ஆரம்பமாவதை இம்முன்னெடுப்பு குறிக்கின்றது.
வன்முறை, பாகுபாடு மற்றும் அச்சமின்றிப் பெண்களும் சிறுமிகளும் வாழக்கூடிய பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் கொழும்பு நகரத்தின் கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதும், ஒருமைப்பாட்டை உணர்த்துவதுமே இவ்வடையாளச் சின்னங்களை ஒளியூட்டுவதன் நோக்கமாகும். அரச நிறுவனங்கள், இராஜதந்திரப் பங்காளிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட பொதுமக்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த அடையாளபூர்வமான செயற்பாட்டைப் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கான பரந்த அழைப்பாக மாற்றுவதற்கு இத்திட்டம் எதிர்பார்க்கின்றது.
பால்நிலை சார் வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைவரதும் கூட்டுப் பொறுப்பு அவசியம் என இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) வலியுறுத்தினார். “பால்நிலை சார் வன்முறைகளைத் தடுப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆதரவை வளர்த்தல் மற்றும் வலையமைப்புகளைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இந்த 16 நாட்கள் செயற்பாட்டுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முன்னெடுப்பில் சிறுவர்களும் ஆண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
எமது தாய்மார், சகோதரிமார், மனைவியர் மற்றும் புதல்விகளுக்காக வன்முறையற்றதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில், இவ்வாண்டு பல்வேறு தொடர் செயற்பாடுகளில் தூதரகம் இணைந்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
பால்நிலை சார் வன்முறைகளுக்குத் தீர்வு காண்பதிலும், பாதுகாப்பான சமூகங்களைக் கட்டியெழுப்புவதிலும் உள்ளூராட்சித் தலைமைத்துவத்தின் பங்கைச் சுட்டிக்காட்டிய கொழும்பு
மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் (Vraîe Cally Balthazaar), இப் பிரச்சாரத்தில் மாநகரத்தின்
பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்தினார்.
“கொழும்பு அனைவருக்குமான நகரமாகும்; பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு, கௌரவம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவது ஒரு கூட்டுப் பொறுப்பாகவே தொடரப்பட வேண்டும். எமது அடையாளச் சின்னங்களைச் செம்மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டுவதன் மூலம், வன்முறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுடன் எமது நகரம் துணைநிற்கின்றது என்பதையும், அனைத்து விதமான பால்நிலை சார் வன்முறைகளுக்கும் எதிராக நிற்கின்றது என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றோம். பெண்களும் சிறுமிகளும் அச்சமின்றி வாழவும், பணியாற்றவும், சுதந்திரமாக நடமாடவும் கூடிய, அத்துடன் அவர்களது குரல்களும் செவிமடுக்கப்பட்டு, அவை மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது,” என அவர் தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களையும் சிறுமிகளையும் தொடர்ந்தும் பாதித்து வரும் இப்பிரச்சினை குறித்துப் பொதுமக்களின் கவனத்தை மேலும் அதிகளவில் ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக Women In Need (WIN) அமைப்பு இம்முன்னெடுப்பைக் கருதுகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காககும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காககும் பணியாற்றும் ஒரு அமைப்பு என்ற ரீதியில்; வன்முறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உதவிகளை நாடுவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், கௌரவத்துடன் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்ற சூழல்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை 'WIN' அமைப்பு வலியுறுத்துகின்றது.
அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கு வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது எனச் சுட்டிக்காட்டிய Women In Need அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாவித்ரி விஜேசேகர, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், வலுவான நிறுவன ரீதியான நடவடிக்கைகள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கான மேலதிக ஆதரவு ஆகியவை அவசியம் என
அழைப்பு விடுத்தார்.
“பால்நிலை சார் வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பினாலோ அல்லது நிறுவனத்தினாலோ மட்டும் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையல்ல. இதற்கு அரசாங்கம், சட்ட வலுவுறுத்தல் பிரிவினர், சுகாதாரத் துறை நிபுணர்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய அனைவரதும் கூட்டு அர்ப்பணிப்பு அவசியமாகும். Women In Need அமைப்பின் பணிகள் ஊடாக, பெண்கள் உதவியை நாடும்போதும், ஆதரவு மற்றும் நீதி வழங்கும் கட்டமைப்புகளை அணுகும்போதும் எதிர்கொள்ளும் சவால்களை நாம் நேரடியாகக் காண்கின்றோம். இது குறித்த உரையாடல்களைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதும், வன்முறையைச் சூழ்ந்துள்ள மௌனத்தை உடைப்பதும், தமக்கு ஆதரவு கிடைக்கின்றது என்பதையும், தாம் தனித்து விடப்படவில்லை என்பதையும் பாதிக்கப்பட்டு மீண்ட ஒவ்வொருவரும் அறிந்திருப்பதை உறுதிசெய்வதும் மிகவும் முக்கியமானது என நாம் நம்புகின்றோம். இந்தச் செய்தியை நகர மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் கொழும்பு மாநகர சபை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்,” என அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வொன்றின் போது மாநகர சபை கட்டடம் ஒளியூட்டப்படுவதன் மூலம், இப் பிரச்சாரம் நவம்பர் 25 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. அன்றைய மாலைப் பொழுதிலேயே தாமரைக் கோபுரமும் செம்மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்படவுள்ளதுடன், நவம்பர் 27 ஆம் திகதி வரை இவ்வடையாளச் சின்னங்கள் இப் பிரச்சாரத்தின் அடையாள நிறத்தில் தொடர்ந்தும் காட்சியளித்தன.
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, "மௌனத்திலிருந்து நீதியை நோக்கி: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைவரதும் பங்கு (From Silence to Justice: Everyone's Role in Ending Violence Against Women and Girls) எனும் தொனிப்பொருளின் கீழ், நவம்பர் 30 ஆம் திகதி Women In Need அமைப்பு விசேட குழு நிலை விவாதம் ஒன்றை நடாத்தவுள்ளது. சட்ட வலுவுறுத்தல் பிரிவினர், சுகாதாரத் துறை, சட்ட ஆலோசனைத் துறை மற்றும் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கான முன்னணி ஆதரவுச் சேவைப்
பிரதிநிதிகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இவ்விவாதத்தில்; வன்முறைகள் குறித்து முறைப்பாடளிப்பதிலும், அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதிலும், நீதியைப் பெறுவதிலும் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
பாலின சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை முன்னேற்றுவதில் சர்வதேசக் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகமும் இம்முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கின்றது.
இக்கூட்டாண்மையின் ஊடாக, மூன்று மாலைப் பொழுதுகளில் அடையாளச் சின்னங்களை ஒளியூட்டும் நிகழ்வையும் தாண்டி, பொதுமக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், தொடர்ச்சியான ஈடுபாட்டை ஊக்குவிப்பதும் இப்பிரச்சாரத்தின் எதிர்பார்ப்பாகும்.
இறுதியாக, ‘செம்மஞ்சளாய் ஒளிரும் கொழும்பு' (Colombo Lights Orange) என்பது வெறும் அடையாளபூர்வமான பிரச்சாரமாக மட்டுமன்றி, அதற்கு அப்பாற்பட்டதொரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. பால்நிலை சார் வன்முறைகளுக்குத் தீர்வு காண்பதில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் தமது பொறுப்பை உணர்ந்துகொள்ளவும், துஷ்பிரயோகங்களைச் சூழ்ந்துள்ள மௌனக் கலாசாரத்திற்கு சவால் விடவும், வன்முறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தமக்குரிய பாதுகாப்பையும் நீதியையும் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவளிக்கவும் விடுக்கப்படும் ஒரு வலுவான அறைகூவலாக இது அமைந்துள்ளது.
கொழும்பு நகரத்தின் அடையாளச் சின்னங்கள் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் இவ்வேளையில், அது உணர்த்தும் செய்தி மிகவும் தெளிவானது: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்குக் கூட்டு நடவடிக்கை, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு என்பவற்றோடு மௌனமாக இருக்க மறுக்கும் ஒரு சமூகமும் அவசியமாகும்.
editor