நெருக்கடி நிலை முகாமைத்துவத்திலிருந்து காலநிலைத் தாங்குதிறனை நோக்கி: இலங்கையின் விவசாய உணவு முறையின் எதிர்காலத்திற்கான புத்தாக்கம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு, FAO பிரதிநிதி விமலேந்திர சரண், முன்கூட்டிய எச்சரிக்கைகள், அனர்த்தத் தயார்நிலை நிதியளிப்பு மற்றும் காலநிலைச் சீரமைவான விவசாயம் மூலம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார்.

நெருக்கடி நிலை முகாமைத்துவத்திலிருந்து காலநிலைத் தாங்குதிறனை நோக்கி: இலங்கையின் விவசாய உணவு முறையின் எதிர்காலத்திற்கான புத்தாக்கம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விமலேந்திர சரண் எழுதிய கட்டுரை
 

தீவிர வானிலை நிகழ்வுகள் பயிர்களை அழிக்கும்போதும், உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவிக்கும்போதும், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கும்போதும், அதன் பாதிப்புகள் விவசாய நிலங்களுடன் மட்டும் முடிவடைவதில்லை. அவை உணவுப் பொருட்களின் விலைகள், குடும்பங்களின் ஊட்டச்சத்து நிலை, கிராமப்புற வருமானம் மற்றும் அரச நிதி நிலைமை ஆகியவற்றையும் பாதிக்கின்றன. டித்வா சூறாவளி இந்தப் பாதிப்புகளுக்கு இலங்கை எவ்வளவு எளிதில் உள்ளாகக்கூடும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியது. எல் நினோவின் தாக்கத்தால் மேலும் காலநிலை அழுத்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை ஒரு முக்கியமான தெரிவை எதிர்கொள்கிறது: அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் பெரும் செலவுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதா, அல்லது அவை மனிதாபிமான நெருக்கடிகளாக மாறுவதற்கு முன்னரே வாழ்வாதாரங்களையும் விவசாய உற்பத்தியையும் பாதுகாப்பதற்காக முதலீடு செய்வதா?

பொருளாதார ரீதியான பாதிப்புகள் மிகப் பெரியவை. டித்வா சூறாவளியினால் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி பௌதிகச் சேதங்கள் ஏற்பட்டதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4 சதவீதமாகும். விவசாயத் துறைக்கு மாத்திரம் சுமார் 814 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பௌதிகச் சேதங்களுக்கான மதிப்பீடுகளே தவிர, வருமானம் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட முழுமையான இழப்புகளையோ அல்லது மீட்சிக்கான இறுதிச் செலவுகளையோ உள்ளடக்குவதில்லை. நிதி வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு நாட்டில், தவிர்க்கக்கூடிய ஒவ்வொரு இழப்பும் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய அரிய வளங்களை மீள்கட்டமைப்புப் பணிகளுக்குத் திருப்பிவிடுகிறது.

ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், “இன்றே புத்தாக்கம்; நாளைய ஊட்டச்சத்து” என்ற கருப்பொருள், போதுமான, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பாதுகாக்க, அவற்றை நாம் எவ்வாறு உற்பத்தி செய்கிறோம், விநியோகிக்கிறோம், நுகர்கிறோம் என்பவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. புத்தாக்கம் என்பது புதிய தொழில்நுட்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. காலநிலை அபாயங்களை நாம் எவ்வாறு முன்கூட்டியே கணிக்கிறோம், முடிவுகளை எடுக்கிறோம், நிதி வளங்களைத் திரட்டுகிறோம், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க உதவுகிறோம் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாகும்.

முன்கூட்டிய எச்சரிக்கையிலிருந்து உடனடி நடவடிக்கைக்கு

இலங்கையைப் பொறுத்தவரையில், முதலாவது முன்னுரிமை முன்கூட்டிய எச்சரிக்கைகளை உரிய நேரத்திலான நடவடிக்கைகளாக மாற்றுவதாகும். நம்பகமான முன்னறிவிப்புகள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைத் தூண்டல் வரம்புகள் மற்றும் உள்ளூர் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில், குறுகிய காலத்தில் விளையும் விதைகள், உரங்கள் மற்றும் ஏனைய விவசாய உள்ளீடுகளை உரிய நேரத்தில் வழங்குதல், பயிர்ச்செய்கைக் கால அட்டவணைகளை மாற்றியமைத்தல், கால்நடைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாத்தல், நீர் முகாமைத்துவம் தொடர்பான நடைமுறை ஆலோசனைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பயிர்ச்செய்கைக்கான காலப்பகுதி முடிவடைந்த பின்னர் ஒரு விவசாயியைச் சென்றடையும் எச்சரிக்கையால் பெரிதாகப் பயனில்லை.

முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்குப் பொருளாதார ரீதியாகவும் வலுவான நியாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உலகளாவிய ஆதாரங்களின்படி, விவசாயத் துறையில் அபாயங்களைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் முன்கூட்டிய நடவடிக்கைகள், முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் ஏழு டொலர் வரை தவிர்க்கப்பட்ட இழப்புகளையும் மேலதிக நன்மைகளையும் உருவாக்கியுள்ளன. பல்வேறு அனர்த்தங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளில் செய்யப்படும் முதலீடுகள், ஒவ்வொரு டொலருக்கும் ஒன்பது டொலர் பெறுமதியான பொருளாதார நன்மைகளை வழங்குவதாக உலக வானிலை அமைப்பு (WMO) மதிப்பிட்டுள்ளது.

இவை உலகளாவிய மதிப்பீடுகளாகும்; ஒவ்வொரு திட்டத்திற்கும் இத்தகைய வருமானம் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமல்ல. இருப்பினும், ஒரு விடயம் தெளிவாகிறது: தயார்நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத மேலதிகச் செலவு அல்ல; மீண்டும் மீண்டும் ஏற்படும், தவிர்க்கக்கூடிய இழப்புகளே பெரும் சுமையாகும்.

இதன் அளவைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். விவசாயத் தயார்நிலை மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியொன்றை ஏற்படுத்துவது, டித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்ட 814 மில்லியன் டொலர் சேதத்தில் சுமார் 1.2 சதவீதம் மட்டுமே. இத்தகைய நிதி வசதி அனர்த்த இழப்புகளை முற்றாகத் தடுத்துவிடாது; இதுவொரு முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டமும் அல்ல. எனினும், பயிர்ச்செய்கைப் பருவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டும்போது, சிறு விவசாயிகள் மீண்டும் பயிரிடுவதற்கும் உற்பத்திச் சொத்துகளை மாற்றுவதற்கும் இழந்த வருமானத்தை ஈடுசெய்வதற்கும் அதிக செலவிலான உதவியை நாடும் நிலை ஏற்படுவதற்கு முன்னரே, இவ்வாறான முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிதி வசதியொன்றின் மூலம் விரைவாக உதவிகளை வழங்க முடியும்.

பிராந்திய நாடுகளிடமிருந்து பெறக்கூடிய பாடங்கள்

இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை ஏனைய நாடுகள் நிரூபித்துள்ளன. பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய அண்டை நாடுகளில், முன்கூட்டிய எச்சரிக்கைகள், சமூக வலையமைப்புகள் மற்றும் நிதி வசதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே 150 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிபந்தனைக்குட்பட்ட அனர்த்த நிதி வசதியொன்றை ஏற்பாடு செய்ததன் மூலம், நிதி முகாமைத்துவத்திலும் நேபாளம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இதே கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு FAO ஆதரவளித்து வருகிறது. தேசிய நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப முகவரமைப்புகளுடன் இணைந்து, மட்டக்களப்பிற்கான ஒருங்கிணைந்த வெள்ள அனர்த்த முன்கூட்டிய நடவடிக்கை நெறிமுறையையும், குருநாகலுக்கான வறட்சி நடவடிக்கைத் தூண்டல் முறையையும், வானிலைத் தகவல்களைப் பொதுச் சுகாதார அபாயங்களுடன் இணைக்கும் எலிக்காய்ச்சல் தொடர்பான வானிலை அடிப்படையிலான நடவடிக்கைத் தூண்டல் முறையையும் உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படுகிறது.

செயற்பாட்டு ரீதியிலான வறட்சி முன்னறிவிப்புகள் மற்றும் நிறுவன மட்ட அனர்த்த முகாமைத்துவத் திட்டமிடல் ஆகியவற்றிலும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து FAO பணியாற்றி வருகிறது. அபாயத் தகவல்களை உரிய நேரத்தில் எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முடிவுகளாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு அனர்த்தத்தின்போதும் புதிதாக நிதி திரட்டுவதற்குப் பதிலாக, இலங்கை தனது தயார்நிலை நிதியளிப்பு முறையை நிறுவனமயப்படுத்த வேண்டும். இதற்காக முன்கூட்டிய நடவடிக்கைகளுக்கென கணிக்கக்கூடிய நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்துதல், முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான நடவடிக்கைத் தூண்டல் அளவுகோல்கள் மற்றும் உதவி வழங்குவதற்கான பொறுப்புகளை முன்கூட்டியே தீர்மானித்தல், டிஜிட்டல் விவசாய உள்ளீட்டு வவுச்சர்கள் மற்றும் அதிர்ச்சிகளுக்குப் பதிலளிக்கும் சமூகப் பாதுகாப்பு முறைமைகள் போன்ற விரைவான உதவி வழிமுறைகளைப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படும் நன்கொடையாளர் நிதியுதவியும் பொருத்தமான அபாய நிதியளிப்பு உபகரணங்களும் உள்நாட்டு வளங்களுக்கு மேலதிக ஆதரவாக அமையலாம். இதற்காக மேலதிக அரச கடனே எப்போதும் தீர்வாக இருக்க வேண்டும் என்று கருத வேண்டியதில்லை. சரியான நேரத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு, பாதுகாக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள், தவிர்க்கப்பட்ட இழப்புகள், அவசர உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படாத குடும்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியை அளவிட வேண்டும்.

உடனடி நிவாரணத்திற்கு அப்பால் நீடித்த தாங்குதிறனை உருவாக்குதல்

உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நீடித்த தாங்குதிறனை உருவாக்குவதற்கு திறன்மிக்க நீர்ப்பாசனம், காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய விதைகள், காலநிலைச் சீரமைவான விவசாயம், எளிதில் அணுகக்கூடிய வானிலைத் தகவல்கள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட விவசாய விரிவாக்கச் சேவைகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் அவசியமாகும். டிஜிட்டல் கருவிகள் மூலம் அபாயத் தகவல்களையும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் உதவிகளுடன் இணைக்க முடியும்.

மீன்பிடித் துறையிலும் அபாயங்களை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம், தாங்குதிறன் மிக்க மீன்பிடி இறங்குதளங்கள், சேமிப்பு வசதிகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவை அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. வலுவான வேளாண் உணவு முறைமைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் ஆகியோர் பொதுவான முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்களின் சிந்தனைகளையும் திறன்களையும் பயன்படுத்திக்கொள்வதும் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாகும். உலக உணவு தின இளைஞர் புத்தாக்கச் சவால் திட்டத்தின் ஊடாக, FAO, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஹட்டன் நேஷனல் வங்கி ஆகியவை இணைந்து, அதிக தாங்குதிறன் கொண்ட வேளாண் உணவு முறைமைகளை உருவாக்குவதற்கான நடைமுறைத் தீர்வுகளை இளம் புத்தாக்குநர்கள் முன்வைக்க ஆதரவளித்து வருகின்றன.

நம்பிக்கையளிக்கும் புதிய சிந்தனைகளை விவசாயிகளும் மீனவர்களும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய தீர்வுகளாக மாற்றுவது, எதிர்காலத்திற்குத் தயாராகும் முயற்சியின் இன்றியமையாத பகுதியாகும்.

எல் நினோவை இலங்கையால் தடுக்க முடியாது; காலநிலை அபாயங்களையும் முற்றாக இல்லாதொழிக்க முடியாது. இருப்பினும், அடுத்த எச்சரிக்கை வெளியாகும்போது அதனுடன் செயல் திட்டம், நிதி வளங்கள் மற்றும் உடனடியாகச் செயற்படும் திறன் ஆகியவை இருக்க வேண்டுமா என்பதை இலங்கை தீர்மானிக்க முடியும். தயார்நிலையால் அவசர உதவிக்கான தேவையை முற்றாக நீக்க முடியாது. ஆனால், அத்தகைய உதவி அவசியமாகும் அளவுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும்.

இந்த உலக உணவு தினத்தில், தெரிவு என்பது இப்போது செலவிடுவதா அல்லது பின்னர் செலவிடுவதா என்பதல்ல. அறுவடைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் ஊட்டச்சத்தைப் பாதுகாக்க முன்கூட்டியே முதலீடு செய்வதா, அல்லது அவை இழக்கப்பட்ட பின்னர் மிக அதிக விலையைச் செலுத்துவதா என்பதே உண்மையான தெரிவாகும்.