SATA 2026 விருதுகள்: முன்னணி சர்வதேச விமான சேவைக்கான மக்கள் தெரிவு விருதை மீண்டும் வென்றது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

SATA 2026 தெற்காசிய பயண விருதுகளில் முன்னணி சர்வதேச விமான சேவைக்கான மக்கள் தெரிவு விருதை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது.

SATA 2026 விருதுகள்: முன்னணி சர்வதேச விமான சேவைக்கான மக்கள் தெரிவு விருதை மீண்டும் வென்றது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

தெற்காசிய பயண மற்றும் சுற்றுலாத்துறையில் தனது அங்கீகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தெற்காசிய பயண விருதுகள் (South Asian Travel Awards – SATA) 2026 நிகழ்வில், முன்னணி சர்வதேச விமான சேவைக்கான மக்கள் தெரிவு விருதை (Visitors’ Choice Award) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் வென்றுள்ளது.

கடந்த ஆண்டுகளிலும் இவ்விருதைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இவ்வாண்டு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இந்தப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு சர்வதேச விமான நிறுவனமாகத் தெரிவுசெய்யப்பட்டது. SATA விருதுகளின் 10 ஆவது ஆண்டு விழா, இம்மாத முற்பகுதியில் மாலைதீவின் மாலே நகரிலுள்ள ஹோட்டல் பார்செலோ நசந்துராவில் நடைபெற்றது.

மாலைதீவின் பயண மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது விழாவில், அரசாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், இராஜதந்திரிகள், முன்னணி விமான நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் அவற்றின் தலைமையகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் திமுது தென்னகூன், இந்த அங்கீகாரம் பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கும் பிராந்தியத்தில் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதற்குமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

“தெற்காசிய பயண விருதுகள் 2026 இல் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் பெருமையடைகிறோம். மக்கள் தெரிவு விருதுகளில் முன்னணி சர்வதேச விமான சேவையாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பது, எமது பயணிகளுக்குச் சேவையாற்றுவதிலும் பிராந்தியத்தில் எமது இருப்பை வலுப்படுத்துவதிலும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கான முக்கிய அங்கீகாரமாகும். நாம் வழங்கும் பயண அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவும், நாம் சேவையாற்றும் சந்தைகள் மற்றும் சமூகங்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த விருது ஊக்கமளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களுக்கு வசதியான இணைப்புகளை வழங்கும் விரிவான விமான வலையமைப்பை முன்னெடுத்து வருகிறது.

தெற்காசியாவில், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள 15 இடங்களுக்கு வாரந்தோறும் சுமார் 130 விமானப் பயணங்களை இந்நிறுவனம் இயக்குகிறது. வணிகம் அல்லது ஓய்வுக்காக கொழும்புக்கு வருகை தரும் பயணிகளுக்கும், அங்கிருந்து உலகின் ஏனைய இடங்களுக்குப் பயணத்தைத் தொடரும் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் விமான அட்டவணைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விருது, பிராந்திய பயண மற்றும் சுற்றுலாத்துறையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், தரமான பயண அனுபவத்தை வழங்குதல் மற்றும் பயணிகள், தொழில்துறைப் பங்காளர்களுடனான உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

தனது நேரடி விமான சேவைகள் மற்றும் இணை விமான சேவை ஒப்பந்தங்கள் (Codeshare Partnerships) மூலம், 63 நாடுகளில் உள்ள 130 இடங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளை இணைக்கிறது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளின் பல்வேறு நகரங்களுக்கு இந்நிறுவனம் நேரடி விமான சேவைகளை வழங்குகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், A330-200, A330-300, A320 மற்றும் A321 ரக விமானங்களைக் கொண்ட முழுமையான எயார்பஸ் விமானக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.