சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கி அங்குரார்ப்பணம் : சீனாவுடனான நிதி ஒத்துழைப்பில் புதிய மைல்கல்
இலங்கையில் சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லை கடந்த கொடுப்பனவுகள், நிதி ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கி நிறுவப்பட்டுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் சீன நாணயத்தில் மேற்கொள்ளப்படும் எல்லை கடந்த கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்குவதற்கும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வு 15 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, சீன வங்கியின் தலைவர் ஆகியோர் இணைந்து சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கிச் சேவையை ஆரம்பித்தனர். நிகழ்வில் வங்கித்துறை, வர்த்தகத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் சீன நாணயத்தின் ஊடான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை இந்தத் தீர்வை வசதி மேம்படுத்தும். இதன் மூலம் இலங்கை – சீனா வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்களை மேலும் சீராக முன்னெடுக்கவும், பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீர்வை வங்கியின் அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், இரு நாடுகளின் வங்கித்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இது உதவக்கூடும்.
அரசாங்கம், மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுகூடிய இந்நிகழ்வு, இலங்கை – சீனா நிதி இணைப்புகளை வலுப்படுத்துவதில் இரு தரப்பினருக்கும் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
சீன நாணய தீர்வை வங்கியின் நிறுவல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவைத்துள்ளது.
editor