இந்துப் பெருங்கடல் பாதுகாப்பை வலுப்படுத்த CARAT 2026 பயிற்சியை தொடங்கிய அமெரிக்காவும் இலங்கையும்

The United States and Sri Lanka have launched CARAT 2026, a bilateral maritime exercise aimed at enhancing regional security, maritime domain awareness, humanitarian assistance, disaster response, and naval interoperability in the Indian Ocean.

இந்துப் பெருங்கடல் பாதுகாப்பை வலுப்படுத்த CARAT 2026 பயிற்சியை தொடங்கிய அமெரிக்காவும் இலங்கையும்

அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் இந்து சமுத்திரத்தினை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுதல் ஆகியவற்றிற்கு உதவியாக, தமது கடற்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை பலப்படுத்தும் ஒரு இருதரப்பு கடல்சார் பயிற்சியான Cooperation Afloat Readiness and Training (CARAT) பயிற்சியினை ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்தன.

இலங்கைக் கடற்படையின் ஏற்பாட்டில் ஜூலை 27ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம்  திகதி வரை திருகோணமலையிலும் கொழும்பிலும் நடைபெறும் CARAT Sri Lanka 2026 பயிற்சியானது, கடல்சார் ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, பொதுவான சவால்களுக்கு ஒன்றிணைந்து பதிலளிப்பதற்கு எமது படைகளைத் தயார்படுத்தும் ஒரு வார கால தரை மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக, அமெரிக்க கடற்படை, அமெரிக்க கடலோர காவற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. 2017ஆம் ஆண்டு முதல் CARAT Sri Lanka பயிற்சியானது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான நீடித்த பாதுகாப்புப் பங்காண்மைக்கு அடித்தளமாக விளங்கும் நம்பிக்கை, அனுபவம் மற்றும் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்துள்ளது.


“இலங்கையுடனான எமது பாதுகாப்புப் பங்காண்மைக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டினை இப்பயிற்சி பிரதிபலிக்கிறது.” என இலங்கைக்கான பாதுகாப்பு இராஜதந்திர அலுவலரும், அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியுமான லெப்.கேணல் மெத்திவ் ஹவ்ஸ் கூறினார். “எமது மாலுமிகள் தோளோடு தோள் சேர்ந்து பயிற்சி செய்யும்போது, நம்பிக்கை, ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒருங்கிணைந்து செயற்படும் திறன் மற்றும் தொழில்முறை உறவுகள் ஆகியவற்றைக் கட்டியெழுப்புகிறார்கள். மிகவும் அவசியமான தருணங்களில் நாமனைவரும் ஒன்றிணைந்து இன்னும் செயற்திறனுடன் எதிர்வினையாற்றுவதற்கு அவை உதவுகின்றன. பல ஆண்டுகால ஒத்துழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இவ்வாறான உறவுகள், இலங்கை மக்களுக்கு உதவியாக எமது படைகள் ஒன்றோடொன்று தடையின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வழிவகுத்ததை, கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் போதான பதிலளிப்புப் பணிகளின் போது நாம் நேரடியாகப் பார்த்தோம்.” எனஅவர் மேலும் தெரிவித்தார்.


இந்து சமுத்திரம் முழுவதும் கடல்சார் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், அங்கு இடம்பெறும் சம்பவங்களுக்குப் பதிலளிப்பதற்குமான திறனை பலப்படுத்துவதற்கு இரு நாட்டினதும் கடற்படைகளுக்கும் உதவி செய்து, கடல்சார் கள விழிப்புணர்வுப் பயிற்சிக்கும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யக்கூடிய அமெரிக்க கடற்படையின் P-8A Poseidon கடல்சார் ரோந்து மற்றும் உளவு விமானமொன்றும் இப்பயிற்சியில் பங்கேற்கிறது.


அமெரிக்கா வழங்கும் பாதுகாப்புத்துறை தொடர்பான உதவிகள் இலங்கையின் நீண்டகாலத்திறன்களைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், டக்ளஸ் முன்ரோ எனும் அமெரிக்கா இலங்கைக்கு மாற்றிய முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக்கப்பலான, கடல்சார் நடவடிக்கைகளின்போது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட காற்று நிரப்பக்கூடிய கடினமான அடித்தட்டினைக் கொண்ட படகினைப் (RHIB) பயன்படுத்தும் SLNS கஜபாகு கப்பலில் அமெரிக்க கடலோர காவற்படையின் கடல்சார் ஈடுபாட்டுக்குழுவொன்றும் (Maritime Engagement Team) பயிற்சிகளில் ஈடுபடும்.


அமெரிக்க கடற்படை வீரர்களும், இலங்கைக் கடற்படை வீரர்களும் ஒன்றிணைந்து கடல்சார் கள விழிப்புணர்வு, தந்திரோபாய மருத்துவம், வெடிபொருட்களை அகற்றுதல், மற்றும் கடலில் பயணிக்கும் படகுகள் போன்றவற்றைச் சென்று பார்வையிடுதல், அவற்றில் ஏறுதல், அவற்றைச் சோதனையிடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்களை கடலில் பிரயோகிப்பதற்கு முன்பாக, அவ்விடயங்கள் தொடர்பாக வாரம் முழுவதும் இடம்பெறும் வகுப்பறைப் பரிமாற்றங்களிலும், நேரடிப் பயிற்சிகளிலும் பங்குபற்றுவர். படை வீரர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவுகளைப் பலப்படுத்தும் சமூக சேவை செயற் திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் என்பன CARAT Sri Lanka பயிற்சியின் மற்றுமொரு இன்றியமையாத பகுதியாகும். தேவைப்படும் போதெல்லாம் எமது படைகள் திறம்பட ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதிசெய்ய உதவும் வகையில், ஒரு நெருக்கடி நிலை உருவாவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே நம்பிக்கையினைக்
கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான தொடர்புகள் உதவுகின்றன.


உலகின் மிகவும் பரபரப்பான கடல்வழித்தடங்களிலொன்றினருகே இலங்கை அமைந்திருப்பதன் காரணமாக, எமது கடற்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான திறனானது நிஜஉலக முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். CARAT பயிற்சியினூடாக நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இயற்கைப் பேரிடர்களுக்கு பதிலளிப்பதற்கும், மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்காக இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல்வழித் தடங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவுவதற்குத் தேவையான பங்காண்மைகளையும் நடைமுறைத் திறன்களையும் அமெரிக்காவும் இலங்கையும் பலப்படுத்துகின்றன.