மகாவலி கங்கை பெருக்கெடுப்பு : பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் கலையும் கல்விக் கனவுகள்

The University of Peradeniya—renowned as one of Sri Lanka’s most beautiful, expansive, and prestigious universities—has suffered extensive damage following recent heavy rains and cyclone conditions. Surrounded by the scenic Mahaweli River and known for its rich heritage, architectural beauty, and unique natural landscape, the university faced severe flooding as the river overflowed. The disaster has not only harmed the university’s infrastructure but has also disrupted students’ education and affected their future aspirations.

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு : பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் கலையும் கல்விக் கனவுகள்

“அப்பாவி மாணவர்களின் கனவுகள் மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. பெற்றோரை மனதில் நினைத்துக் கொண்டு உயிரை கையில்  பிடித்தவாறு ஹொஸ்டலிருந்து வெளியே ஒடினோம்.” என்கிறார் பேராதனை பல்கலைக்கழக மாணவியொருவர்.

இலங்கை  பல்கலைக்கழகங்களில் விசாலமானதும், மிக அழகானதும், தரம் வாய்ந்ததும் என  எண்ணற்ற அடைமொழிகளைப் பேராதனைப் பல்கலைக்கழகம் தன் வசம் கொண்டுள்ளது.  பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள நிலப்பரப்பு, அதனுடைய சூழல், வரலாற்றுச்  சிறப்பு, மற்றும் பாரம்பரிய கட்டடக்கலை ஆகியவற்றால் இதுவொரு தனித்துவமான  இடமாக விளங்குகிறது. பல்கலைக்கழகத்தை சுற்றி ஓடும் மகாவலி ஆற்றின் அழகிய  தோற்றம் அதன் சூழலுக்கு மேலும் அழகுச் சேர்க்கிறது. எனினும்  துரதிஷ்டவசமாக அண்மையில் பெய்த கனமழை, சூறாவளி தாக்கத்தால் ஆறு  பெருக்கெடுத்து பல்கலைக்கழகத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன்  மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்தது.

பல்கலைக்கழக  வளாகத்தில் வெள்ள நீர் உட்புகுந்தமையால் பல கட்டடங்கள், ஆய்வகங்கள்  மற்றும் நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடம் என்பன நீரில் மூழ்கின. மாணவர்களின்  விடுதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் குடியிருப்புகளிலும் வெள்ளநீர்  புகுந்தமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.  குறிப்பாக விடுதிகளிலிருந்த மாணவர்கள் உணவு, மின்சாரம், குடிநீர்  வசதிகளின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  அவசரக்காலத்தின் போது குறைந்த  இடவசதி காரணமாக அவர்கள் தற்காலிக விரிவுரை அரங்கில்  தங்கவைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் தகவல்களின்படி  வௌ்ளப்பெருக்கு ஏற்படும் போது கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள்  வளாகத்திலுள்ள 22 விடுதிகளில்  இருந்துள்ளனர். இதில் மகாவலி ஆற்றுக்கு அருகிலிருந்த நான்கு விடுதிகள் அதிக  ஆபத்துள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டன.

இதுதொடர்பில் மாணவி அப்ஸரா விபரிக்கையில்,

விடுதியிலிருந்து  பார்க்கும் போது மழையுடன் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் என்றுமில்லாதவாறு  அதிகரித்திருப்பது தெரிந்தது. ஆனால் அதில் அப்பாவி மாணவர்களின் கனவு  மூட்டையும் அடித்துச் செல்லப்படுமென்பதை நினைத்தும் பார்க்கவில்லை.   நவம்பர் 27ஆம் திகதி கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டது.  இதனால் ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. அப்போது நேரம் 1  மணியிருக்கும். ஹொஸ்டலிருந்த மாணவர்களை வெளியே போகச் சொல்லி அறிவித்தல்  வந்தது. உடனே மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமானார்கள். எனினும்  பிரச்சினையில்லை என்று பிறகு அறிவித்தலொன்று வந்தமையால் மாணவர்கள் விரிவுரைக்கு சென்று வந்து வழமைப்போல் ஹொஸ்டலில் இருந்தார்கள். பிறகு மாலை 6  மணியிருக்கும் வெள்ளம் பெருக்கெடுப்பதால் உடனடியாக போக  சொன்னார்கள். எல்லாவற்றையும் எடுத்துச் செல்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே  தரப்பட்டது. எதை எடுப்பது, எதை விடுவதென்று எதுவுமே தெரியவில்லை.  கீழ்தளத்திலிருந்த முதலாம் வருட மாணவர்கள் சிலர் சுகவீனமடைந்திருந்தார்கள்.  அவர்களை அங்கிருந்து வெளியேறுவது சிரமமாகவிருந்தது.

பெற்றோர்  கடன்பட்டு வாங்கிக் கொடுத்த மடிக்கணினி வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது,  பரீட்சைக்கு தயார்ப்படுத்திய Notes தண்ணீரில் நனைந்தன.  திரும்பக்கூடாத முடியாத அறைகளில் 7, 8 மாணவர்களென தங்கினோம்.  சிற்றூண்டிச்சாலை ஊழியர்கள் அவர்களிடமிருந்த பொருட்களை  வைத்து சில உணவுகளை மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அம்மா அப்பாவை  போல் சில விரிவுரையாளர்கள் கடினமான அந்த சூழலிலும் எங்களை பற்றி  தேடிப்பார்த்தார்கள் என்றார் அவர்.

இதுஇவ்வாறிருக்க  வௌ்ள அனர்த்தம் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பல பில்லியன் நஷ்டம்  ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் , முழுமையான  சேத விபரங்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. முதற்கட்ட சேத  மதிப்பீட்டின் படி பல்கலைக்கழகத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கும்  தேவையான உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் புதிய மேம்பாடுகளுக்கும்  கிட்டத்தட்ட ரூ. 7–8 பில்லியன்கள் தேவைப்படுமென தெரிவிக்கிறார்.  

இதுதொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரா. ரமேஸ் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கான நிதி  ஒதுக்கீடு கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தை  பொறுத்தவரை கிட்டதட்ட கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக 50வீதமான நிதி  ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது. இதனால் ஏற்கனவே பல்கலைக்கழகம் வளப்பற்றாக்குறை, விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்படாமை என பல்வேறு பிரச்சினைகளுக்கு  மத்தியிலேயே இயங்கியது. மாணவர்களின் தொகை அதிகரிக்குமளவுக்கு  விரிவுரையாளர்கள் தொகை அதிகரிக்கப்படவில்லை. இத்தகையதொரு சூழ்நிலையில்  இவ்வனர்த்தம் பல்கலைக்கழகத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இது  மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார கஷ்டத்துக்கு மத்தியிலேயே பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி  கற்கின்றனர். சிலநேரங்களில் கடன்வாங்கி, நகைகளை அடகுவைத்து கூட  மடிக்கணினிகளை வாங்கியிருப்பார்கள். வௌ்ளத்தால் பல மாணவர்களின்  மடிக்கணினிகள் பழுதடைந்துள்ளன. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அவற்றை மீள  கொள்வனவு செய்து மீண்டும் கல்வியை தொடர்வதென்பது பெரும் சிரமமாகும்.  மடிக்கணினிகள் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். குறிப்பாக விஞ்ஞானம்,  பல்மருத்துவம், விலங்கு விஞ்ஞானம், விவசாயம், முகாமைத்துவம் போன்ற  பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டாயமாக தேவை.  எனவே  அரசாங்கம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கடன் அடிப்படையில் மடிக்கணினிகளை  கொள்வனவு செய்ய உதவவேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  உளவியல்ரீதியான ஆலோசனைகள் தேவை.  சில மாணவர்களின் பெற்றோரும்  இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனை,  பொருளாதார உதவிகள் தேவை.

ஆய்வுக்கூடத்திலிருந்த பரிசோதனை உபகரணங்கள்  பல சேதமடைந்துள்ளன. குறிப்பாக விலங்கு விஞ்ஞானப்பீடத்திலிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பரிசோதனை  உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இவை கடந்த காலத்தில் வெளிநாட்டு  நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கப்பெற்றவை. இவற்றை மீண்டும் கொள்வனவு  செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதில் பாரிய பிரச்சினையுள்ளது.

பல்கலைக்கழகத்தின்  உட்வீதிகள் சேதமடைந்துள்ளன. கழிவகற்றல் முறை முற்றாக சேதமடைந்துள்ளது.  அவற்றை மீள கட்டியெழுப்ப வேண்டும். சுமார் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி  கற்கின்றனர். கழிவகற்றல் முறை சீராகப்படாவிட்டால் பெரும் சுகாதார  பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மின்வழங்கலுக்கான  வயர்கள் அனைத்தும் நிலத்துக்கு கீழ் உள்ளமையால் மின் வழங்கல்  செயழிழந்துள்ளது. அவற்றை தேடி சீரமைப்பதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதுமட்டுமின்றி  பல்கலைக்கழகத்தை சுற்றி மலைகள் இருப்பதால் எதிர்காலத்தில் மண்சரிவு,  நிலநடுக்கம் போன்றவற்றை தடுப்பதற்கான புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு  பல்கலைக்கழகம் மறுசீரமைக்க வேண்டும். இதற்கு உடனடியாக அரசாங்க உதவிகள்,  வெளிநாட்டு உதவிகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்குக்கான காரணமென என்ன?

இப்பகுதியில்  வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்தமையால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம்  அதிகரித்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்தது. எனவே அதிகப்படியான நீரை வெளியேற்ற போதுமான வடிகால் அமைப்புகள் காணப்படாமை,  சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் காடழிப்பு போன்றவையும்  மண்ணரிப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.  

இதுதொடர்பில் பேராசிரியர் எம்.எஸ் சந்திரபோஸும் ஒரு கருத்தை புவியியல்ரீதியில் முன்வைத்துள்ளார்.

இவ்விடம்  அக்கால புவிச்சரிதவியல் அறிஞர்களால் ஆராயப்பட்டு தெரிவு செய்யப்பட்ட ஓர்  பகுதியாகும். சுவாத்தியமான காலநிலை, பரந்த நிலப்பரப்பு, ஆற்றுக்கரை  அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பான இடமென அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.  வருடம் பூராகவும் சீரான மழை, ஒரேவகையான வெப்பம் என்பன மாணவர்கள்  களைப்பில்லாமல் தமது படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய ஆற்றலை உருவாகும்  என்பதற்காகவே இவ்விடம் தெரிவுசெய்யப்பட்டிருந்தது. இத்தகைய இயற்கை சூழலில் அமைந்த  பல்கலைக்கழகத்தை உலகில் ஒருசில நாடுகளில் மாத்திரமே காணலாம்.  

பேராதனை  பல்கலைக்கழகத்தில் மகாவலி ஆற்றின் இடதுக்கரையில் நிர்மாணிக்கப்பட்ட  பெண்களுக்கான விடுதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இப்பிரதேசம் மகாவலி  நதியின் ஆற்றுச்சிறை பகுதியாகும். (Watershed / Catchment Area).அதாவது  மகாவலி ஆறு கடந்துசெல்லும் ஒரு பூர்வாங்கப் பகுதியென சுருக்கமாக கூறலாம்.   இப்பகுதியில் கடந்த 30வருடங்களாக பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத  காரணத்தாலும் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்படாமையால் கம்பளை, பேராதனை  போன்ற பகுதிகளுக்கு வௌ்ள பாதிப்புகள் ஏற்படாது என்ற காரணத்தாலும் இப்பகுதியில் விடுதி அமைக்கப்பட்டது. இதுவும் பேராதனை பல்கலைக்கழக வெள்ள  அனர்த்தத்துக்கு காரணம் என்கிறார்.

 எதுஎவ்வாறாயினும்  பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்காலத்திலும் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ  வேண்டும் என்பதே எம். அனைவரினதும் விருப்பமாகும். அதற்கு, இந்த இடத்தின்  சிறப்புகளை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அனைவரினதும் கடமையாகும்.

எதிர்காலத்தில்  மண்சரிவு ,வௌ்ளம் போன்ற திடீர் இடர்களிலிருந்து பல்கலைக்கழகத்தை பாதுகாக்க நீண்டகால முகாமைத்துவ நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

வசந்தா அருள்ரட்ணம்