கிழக்கு மாகாணத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகள்: சவால்கள், சூழல் மற்றும் எதிர்வினைகள்.

Gender-based violence in Batticaloa, Trincomalee, and Ampara is shaped by conflict, displacement, and inequality, posing serious human rights and development challenges in Sri Lanka.

கிழக்கு மாகாணத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகள்: சவால்கள், சூழல் மற்றும் எதிர்வினைகள்.

பாலின அடிப்படையிலான வன்முறை என்புத ஒருவரின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் குறிக்கின்றது. இது உடல், உள, பாலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனைத்து வன்முறைகளையும் உள்ளடக்குகின்றது. பொதுவாகவே பாலின வன்முறை எனப்படும் போது ஆண் ,பெண் என இருபாலாரும் பாதிக்கப்படுகின்ற போதிலும் பெண்கள், பெண் குழந்தைகள் ஒப்பீட்டளவில் பாரியளவு இவ்வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். இலங்கையின் கிழக்கு மாகாணமானது கடந்த முப்பதாண்டு உள்நாட்டுப் போருக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களை உள்ளடக்கியதொன்று. குறிப்பாக ஆயத மோதல்கள், இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள், பொருளாதார சவால்கள், குடும்ப தலைமைத்துவம் ஏற்றல், கலாசார முரண்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதொரு மாகாணம். இது வெறும் பாலின சார் வன்முறைகள் மட்டுமல்ல இவை மனித உரிமைசார் மற்றும் அபிவிருத்திகளுடன் தொடர்புடைய விடயங்களும் கூட.  

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பாலின வன்முறையின் வடிவங்கள்

கிழக்கு மாகாணத்தில் அதிகமாக இடம்பெறுகின்ற வன்முறைகளுள் வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப சார் வன்முறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் குறிப்பாக உடல் ரீதியான தாக்குதல்கள், திருமணமான துணையால் கட்டாய பாலியல் உறவிற்கு உட்படுத்தப்படல், வார்த்தைகள் மூலமான அவமதிப்பு, உளவியல் துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதார ரீதியான முடிவெடுத்தலில் குடும்பத்தினரின் கட்டாய தீர்மானங்கள் என்பன பாரியளவில் பதிவாகியுள்ளன.  யுத்தத்தின் போதான மனவடுக்கள், வேலையின்மை மற்றும் போதைப்பொருள் பாவனை இவற்றிற்கான முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  அத்துடன் பொதுவிடங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது வன்முறைகளும் பாலியல் ரீதியான தொந்தரவுகளும் பரவலாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பொதுவிடங்கள் எனும் போது பொதுப்போக்குவரத்து மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றிலேயே அதிகளவில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதிலும் வயது குறைந்த இளம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப்பெண்கள் தமக்கான பாதுகாப்பு மற்றும் வன்முறைகள் இடம்பெறும் போது பாதுகாப்பினை பெறுவதற்கான வழிமுறையின்மை போன்றவற்றினால் இவ்வாறான பாலியல் வன்முறைகளின் போது அதிகளவில் பாதிப்படைகின்றனர் என்பதும் பதிவாகியுள்ளது.

அத்துடன் இவ்வாறான வன்முறை பாதிப்புக்களுக்கும் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அதே சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ச்சியான பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கும் பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார் வன்முறைகள் முக்கிய காரணிகளாகின்றன. போரியல் காலத்தில் துணையை இழந்து குடும்ப தலைமைத்துவம் ஏற்றுள்ள பெண்கள், சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்களை சேர்ந்தவர்கள் போன்றவர்கள் தமக்கான காணி மற்றும் சொத்துரிமைகள் மறுக்கப்படல் , சுரண்டல்கள் காரணமாகவும் தொழில்சார் உதவிகளைப்பெறல், அரச திணைக்களம் சார் உதவிகளை பெறுவதில் உள்ள தடைகள் போன்ற காரணங்களால் இரட்டை சுமைகளை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாக ஏனையவர்களில் தங்கியிருத்தல், குடும்ப ரீதியான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், பாதிப்பிற்கான நீதியை பெறுவதில் அல்லது அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் குறைந்தளவான வாய்ப்புக்கள் என்பன வன்முறைகளின் தீவிரத்தினை அதிகப்படுத்துகின்றது.

வன்முறைத்தீவிரத்தில் பங்காற்றும் காரணிகள்

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தளவில் பாலின வன்முறை ஆழமாக வேரூன்றுவதற்கு சமூக மற்றும் கலாசார கட்டமைப்பினையும் வரலாற்று பாரம்பரியங்களையும் மேற்கோள்காட்டலாம். இன்றும் இக்கட்டமைப்புக்களின் சேர்கையினால் ஆணாதிக்க மனப்பாங்கும் சமூக மற்றும் குடும்பங்களில் காணப்படுகின்ற ஆண் மற்றும் ஆணாதிக்க மேலாதிக்கத்துடனான குடும்ப கட்டமைப்பினையும் பரவலாக அவதானிக்க முடியும். உதாரணத்திற்கு குடும்பத்தில் துணைவரால் வன்முறைகள் முன்னெடுக்கப்படும் போது எதிர்காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதியோ அல்லது துணைவரின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதாலோ தமக்கு நிகழ்கின்ற வன்முறையை வெளியில் சொல்வதற்கான எதிர்ப்பும் நிர்ப்பந்திப்பும் ஏனைய குடும்ப உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதற்கு குடும்ப கௌரவம், பாரம்பரியம் மேற்கோள்காட்டப்படுகின்றது.  

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இழைக்கப்பட்ட வன்முறையை வெளிப்படையாக சொல்லும் போதோ முறையிடும் போதோ பாதிக்கப்பட்ட பெண் குறித்த சமூக பார்வை இன்னும் இழிவானதாகவே இருக்கின்றது. அல்லது பாதிப்பிற்குள்ளானவரை சமூக அவமதிப்பு செய்வது, சமூக தனிமைப்படுத்தல், பாதிக்கபட்டவர் சார் காரணிகளை முன்வைத்தல் (உதாரணமாக ஏன் இந்த நேரத்தில் வெளியே போகவேண்டும், நவீன உடை அணிவது தான் பாலியல் வன்முறையை தூண்டியிருக்கும் போன்ற கருத்தாடல்கள்) போன்ற காரணிகளால் பலர் தமக்கு இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்து வெளியிடுவதில்லை. இதுவே மனவழுத்தங்களாகவும் மௌனவடுக்கலாகவும் தீவிரமடைகின்றன. யுத்தகால இடப்பெயர்வின் போதும் அதற்கு பிந்தைய காலத்திலேயுமே இவ்வாறான பாலின வன்முறைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போர் காலத்தில் இவ்வாறான விடயங்கள் கருத்திற்கொள்ளப்படாமையும் முறைப்பாடுகள் செய்யப்படாமையும் கூட எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணமாயிருக்க முடியும்.

அடுத்ததாக இவ் வன்முறைகள் குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய சேவைகளை பெறுவதற்குமான நிர்வாக கட்டமைப்புக்கள் குறித்தும் நாம் கவனஞ்செலுத்த வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக இவ்விடயங்கள் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்குகின்ற போதிலும் தமக்கு இழைக்கப்பட்ட வன்முறைகளை வெளிப்படுத்தும் போது பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்கின்ற பயம், தமது சுயம் குறித்த இரகசியத்தன்மை பேணப்படுவது குறித்த அச்சம், நம்பிக்ககையீனம் என்பன வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள் சட்ட மற்றும் மருத்துவ ஆதரவினை நாடுவதற்கு தடையாகவுள்ளன.

தேசிய, பிரந்திய புள்ளிவிபரங்கள்

தேசிய கணக்கெடுப்பின் படி இலங்கையில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் பாலியல்சார் வன்முறையினை எதிர்கொண்டவராயிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகள், சிவில் சமூக அமைப்புக்களின் அறிக்கைகளின் படி கிழக்கு மாகாணத்தில் போருக்கு பிந்திய காலகட்டத்தில் அதிக வன்முறைகள் சார் ஆபத்துகள் நிலவுகின்றமை மேற்கோள்காட்டப்படுகின்றன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பெண்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வன்முறையின் ஏதோவொரு வடிவத்தினை எதிர்கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக கடந்தகால பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொவிட் நிலைமைக்கு பின்னரான காலகட்டத்தில் இவ்வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும் எனினும் முறைப்பாடு செய்யப்பட்டவை ஒப்பீட்டளவில் குறைவென்றும் பெண்கள் அமைப்புக்கள் மேற்கோள்காட்டுகின்றன. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் வன்முறைகள் குறித்து பகிரப்படாமை உண்மை நிலவரத்தினை விடவும் அதிகமானது என்றும் கூறப்படுகின்றது.

சிவில் சமூக, அரச மற்றும் சர்வதேச பதில்கள்

கிழக்கு மாகாணத்தில் பாலின அடிப்படையில் இடம்பெறுகின்ற வன்முறைகளையும் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதிலும் பல்வேறு சிவில், சமூக அமைப்புக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தேவை நாடும் மகளிர் (Women in Need – WIN) அமைப்பானது பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர தங்குமிடங்களை ஒழுங்குசெய்வது, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை, சட்ட ரீதியான அணுகளை வழங்குவது போன்ற நேரடி சேவைகளை வழங்குகின்றுத. அதேபோன்று சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பானது பெண்களை வலுப்படுத்தல், சட்ட உதவிகளை வழங்குதல், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், பொருளாதார உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல் போன்ற சேவைகளை நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வு, வலுவூட்டல், அரசியலில் பெண்களது வகிபாகத்தினை அதிகரித்தல், இளம் பெண்களுக்கான நிகழ்வுகளையும் வலுப்படுத்தல்களையும் மேற்கொள்ளல், அவர்களுக்கான உளநல ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றில் கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பு (ESDF), அருவி, Search for Common Ground  (SFCG), சர்வோதயா, சூழல் மற்றும் காலநிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வலுவூட்டல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் Re-Leaf,  Dreams Space  போன்ற அரச சார்பற்ற அமைப்புக்கள் கவனஞ்செலுத்தி வருகின்றன.

அதேவேளை காவல் நிலையங்களிலும் தற்போது மகளிர்-சிறுவர் பிரிவுகள் ஒப்பீட்டளவில் முன்னரைவிடவும் சிறப்பான முறையில் பங்காற்றி வருகின்றன.  அத்துடன் ருnனி, ருNகுPயு சர்வதேச அமைப்புக்களும் நிதியுதவிகள் மற்றும் அனுசரணையினை வழங்குவதன் மூலம் தம்முடைய பங்களிப்புகளை வழங்கி வருகின்றன. அத்துடன் 2024-2028 வரையான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கான பல்துறை தேசிய செயல் திட்டம்பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் வன்முறைகள் இடம்பெறாமல் தடுப்பதற்குமான வலுப்படுத்தலினை வழங்குகின்றது.

எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்.

கொள்கை வகுப்பு , சேவைகள் போன்றவை இன்று கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சிப்பாதையில் உள்ள போதும் பாலின வன்முறைக்கெதிரான முறையீடுகளை செய்வதிலும் சட்டரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் சவால்கள் தொடர்கின்றன. சமூக பார்வை, அவமதிப்புக்கள், குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் என்கின்ற அச்சம், சட்டரீதியான அனுகலின் போதான தாமதங்கள் காரணமாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படுவதிலும் முறைப்பாட்டின் பின்னரான நடவடிக்கை எடுத்தலிலும் தொய்வுநிலை இன்றும் தொடர்கின்றன. அத்துடன்  பாலின வன்முறைகள் குறித்த விழிப்புணர்வுகள், பயிற்சிகள் ஆலொசனைகள் என்பன குறிப்பிட்ட சில பகுதிகளைத்தாண்டி ஏனையவர்களுக்கும் வழங்கப்படுவதில் பல்வேறுப்பட்ட சிரமங்களும் தாமதங்களும் காணப்படுகின்றன. இதனால் சட்ட ரீதியான விடயங்களை முன்னெடுப்பதும் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் குறைந்தளவிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றன.  

மேலும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கம் சார் கற்பிதங்கள், பாடசாலைக்கல்வி பாடத்திற்றிட்டங்களில் பாலியல் கல்வி குறித்த விடயங்கள் இன்றும் உள்ளீர்க்கப்படாமை, தாமதித்த தண்டனை வழங்கள் , பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு போன்ற விடயங்களும் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை. ஆத்துடன் இன்றுவரை பாலியல் வன்முறைகள் குறித்த வழிப்புணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இவை குறித்து ஆண்கள் , இளைஞர்களுக்கும் விழிப்புணர்வுகள், பயிற்சிகள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். இத்தகைய அணுகுமுறைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

(இக்கட்டுரையானது  Ewing Independent Center for Women and Children  அமைப்பின் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான செயல்வாத திட்டத்தின் கீழ் எழுதப்பட்டதாகும். )

கேஷாயினி எட்மண்ட்