சமுத்திரம், சர்வதேச சூழலியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் இலங்கை வருகை

சமுத்திரம், சர்வதேச சூழலியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் இலங்கை வருகை

சமுத்திரம், சர்வதேச சூழலியல் மற்றும் விஞ்ஞானபூர்வ விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பதில் உதவி செயலர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜோன் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.


 இம்மாதம் 17 - 31 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜோன், இதன்போது இயற்கை மற்றும் கடற்பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் வளி மாசடைவு, காலநிலை மாற்ற நெருக்கடி, காடழிப்பு, சிவில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், விஞ்ஞான தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவித்தல், நிறைபேறான கடற்பிராந்தியப் பாதுகாப்புடன்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று நாடுகளினதும் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.


 அதன்படி இவ்விஜயத்தின் முதற்கட்டமாக திங்கட்கிழமை (19) நாட்டை வந்தடைந்த ஜெனிஃபர் லிட்டில்ஜோன், கொழும்பில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்காளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 இதன்போது குறிப்பாக காலநிலை மாற்றம், கடற்பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.


 அதேவேளை இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து 21 - 28 ஆம் திகதி வரை இந்தியாவுக்கும், 28 - 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கும் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜோன் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.