கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல் USS Canberra !
அமெரிக்கக் கடற்படைக் கப்பலான USS Canberra 2026 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கா–இலங்கை கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Canberra (LCS 30) என்ற போர்க்கப்பல், வழக்கமான துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இவ்வாண்டில் இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.
Independence வகையைச் சேர்ந்த இந்தக் கடலோரப் போர் நடவடிக்கைக் கப்பலின் வருகையை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வரவேற்றுள்ளது. இந்த விஜயம், அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பலின் விஜயங்களைச் சுமுகமாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கு ஆதரவளித்த இலங்கைக் கடற்படையின் தொழில்முறைச் செயற்பாடுகளையும் ஒத்துழைப்பையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பாராட்டியுள்ளார்.
“இந்த விஜயங்களைச் சுமுகமாகவும் திறம்படவும் முன்னெடுப்பதில் இலங்கைக் கடற்படை வெளிப்படுத்திய தொழில்முறைச் செயற்பாடுகளையும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒவ்வொரு விஜயமும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட எமது கடற்படை கூட்டாண்மையின் வலிமையையும், இந்தியப் பெருங்கடல் முழுவதும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
USS Canberra கடந்த ஜூன் மாதமும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. USS Canberra (LCS 30) என்பது அமெரிக்காவின் அலபாமா மாநிலம், மொபைல் நகரில் கட்டப்பட்ட Independence வகையைச் சேர்ந்த கடலோரப் போர் நடவடிக்கைக் கப்பலாகும்.
வேகம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல், கரையோர நீர்ப்பரப்புகளிலும் திறந்த கடற்பரப்புகளிலும் செயற்படக்கூடியது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய நடவடிக்கை முறைமைகளைக் கொண்டுள்ள இக்கப்பல், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடல் கண்ணிவெடிகளை எதிர்கொள்ளுதல் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படையின் பிரசன்னத்தையும் தடுப்பாற்றலையும் பேணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இக்கப்பலின் செயற்பாடுகள், முக்கியமான கடல் வழித்தடங்களைப் பாதுகாத்தல், கடற்பயணச் சுதந்திரத்தைப் பேணுதல் மற்றும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அமெரிக்கக் கடற்படை கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது, 1942 ஆம் ஆண்டு சாவோ தீவுப் போரில் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போரிட்டபோது இழக்கப்பட்ட அவுஸ்திரேலியக் கடற்படைக் கப்பலான HMAS Canberra வின் நினைவாக, புதிய கப்பலுக்கு USS Canberra எனப் பெயரிடப்படுவதாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 2018 பெப்ரவரியில் அறிவித்தார்.
USS Canberra என்ற பெயரைத் தாங்கும் இரண்டாவது அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இதுவாகும். 2023 ஜூலை 22 ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ரோயல் அவுஸ்திரேலியக் கடற்படையின் Fleet Base East தளத்தில் நடைபெற்ற நிகழ்வில், நட்பு நாடொன்றில் சேவையில் இணைக்கப்பட்ட முதலாவது அமெரிக்கக் கடற்படைக் கப்பல் என்ற வரலாற்றுச் சாதனையையும் இது படைத்தது.
இந்தக் கப்பலின் பெயர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பகிரப்பட்ட இராணுவ சேவை மற்றும் தியாகத்தின் மரபை நினைவுபடுத்துகிறது. அதேவேளை, கொழும்புக்கான அதன் தற்போதைய விஜயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா–இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான தொடர்ச்சியான தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
editor