புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் சர்வதேச வரிச் சலுகைகள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம், மனித உரிமைகள், நீதிமன்றக் கண்காணிப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவது தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு அமைவாக இல்லாவிட்டால், ஐரோப்பிய சந்தையில் இலங்கைக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகள் பாதிக்கப்படலாம் என ஆடைத் தொழில்துறையினர் எச்சரிக்கின்றனர். இதனால் ஆடை ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் சர்வதேச வரிச் சலுகைகள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது

1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக அது தீவிரமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது ரகசியமல்ல. அதனால்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நீண்ட காலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு இருக்கையில், அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இதன் மூலம் பழைய அடக்குமுறை சட்ட முறைகள் அப்படியே பராமரிக்கப்படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விடயம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிக முக்கியமானது, ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு
வழங்கும் GSP+ வரிச் சலுகை இதை நேரடியாகச் சார்ந்துள்ளது.


தகுதி


GSP+ சலுகை என்பது இலவசமாகக் கிடைக்கும் பரிசு அல்ல. இது இலங்கையின் பொருட்களுக்கு
ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையில் வரியில்லாமல் நுழைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, அதற்குப் பதிலாக மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனையை எங்களுக்கு வழங்குகிறது.


இந்தப் பட்டியல் 2027-28 ஆண்டுகளில் 32 உடன்படிக்கைகள் வரை மேலும் விரிவடையும். ஐக்கிய
நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவது என்னவென்றால், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் கட்டாயமாக அந்த சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் என்பதே. அதாவது, பயங்கரவாதம் பற்றிய வரையறைகள் மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும், பொதுமக்களின் கூடல், ஒழுங்கமைதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், கேள்வி கேட்கவும் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும்.


வீழ்ந்த தொழில்துறைக்கு மேலும் ஒரு அடி


ஆடைத்தொழில் என்பது ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 40%க்கும் மேலான பங்கைக் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழிலாகும். துணி மற்றும் ஆயத்த ஆடைப் பொருட்கள் மூலம் மேலும் சுமார் 522 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதாரத்திற்கு சேர்க்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மொத்த ஏற்றுமதிகளில் 30%க்கும் மேலான பங்கை வாங்குகிறது, இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இலங்கை 705 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அது நன்கு தெளிவாகிறது.


எனவே மேலும் ஒரு பொருளாதார வீழ்ச்சியையோ அழுத்தத்தையோ இந்தத் துறையால் தொடர்ந்து தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்க முடியாது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை மேற்கொண்ட ஆடை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டை விட 8% குறைந்துள்ளது.


அதே வேளையில் அந்தக் காலத்தில் ஐரோப்பா சீனாவிலிருந்து மேற்கொண்ட ஆடை இறக்குமதி 5% ஆகவும், வியட்நாமிலிருந்து மேற்கொண்ட இறக்குமதி 9% ஆகவும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், மற்ற நாடுகள் வளரும்போது, ஐரோப்பாவில் இலங்கைக்கு உள்ள மதிப்புமிக்க சந்தைப் பங்கு வேகமாக இழக்கப்பட்டு வருகிறது என்பதே. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஐரோப்பா என்பது இலங்கைக்கு எந்த வகையிலும் பலவீனமடைய அனுமதிக்க முடியாத மிக முக்கியமான சந்தையாகும்.


புதிய மசோதாவில் உள்ள பலவீனங்கள்


2018 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நான்கு முயற்சிகளை நெருக்கமாகக் கவனித்த சட்ட நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், இந்தப் புதிய பிரதி முந்தைய சட்டமூலங்களை விட ஓரளவு சிறப்பாக இருந்தாலும், அது இன்னும் சர்வதேச தரங்களை விட மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது என்பதே. புதிய சட்டமூலத்தில் அவர்கள் சுட்டிக்காட்டும் சில குறைபாடுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.


 பரந்த மற்றும் தெளிவற்ற வரையறைகள்: சாதாரண குற்றவியல் சட்டத்தால் ஏற்கனவே கட்டுப்படுத்தப்படும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் சில அறிக்கைகளை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற விடயங்கள் கூட இந்தச் சட்டத்தால் 'பயங்கரவாதம்' என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.


 அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம்: எந்தவொரு நீதிமன்ற தலையீடும் அல்லது முறையான சட்ட வரம்பும் இல்லாமல், வெறுமனே 'நியாயமான காரணங்கள் என்ற அடிப்படையில் எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கு ஜனாதிபதிக்கு நேரடி அதிகாரம் உள்ளது. பழைய அடக்குமுறைச் சட்டத்தில் கூட இத்தகைய சர்வாதிகார அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை.


 பயணக் கட்டுப்பாடுகள்: சாதாரண குடிமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை, நீதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக 72 மணி நேரம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த பொலிசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.


 தடுத்து வைத்தல்: ஒரு முறைக்கு இரண்டு மாதங்கள் வீதம் தடுத்து வைக்கும் உத்தரவுகளை, ஒரு வருடம் வரை தொடர்ச்சியாக புதுப்பிக்க முடியும். இங்கு நீதிமன்ற நீதவான்களிடம் எதிர்பார்ப்பது பொலிசின் கோரிக்கைகளுக்கு கையொப்பமிடுவது மட்டுமே.


 இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுதல்: சாதாரண குடிமக்களைத் தடுத்து
நிறுத்துதல், சோதனை செய்தல், கைது செய்தல் மற்றும் 48 மணி நேரம் தடுத்து வைத்தல்
ஆகியவற்றுக்காக ஆயுதப்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கு நிரந்தர
அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தால் மாதந்தோறும் அங்கீகரிக்கப்பட
வேண்டிய அவசரச் சட்டங்களைப் போலல்லாமல், இராணுவத்திற்கு வழங்கப்படும் இந்தப்
பொலிஸ் அதிகாரங்கள் நிரந்தரச் சட்டமாக மாறும்.


நீதிமன்றத்திற்கு உரிய இடம்


இந்த முழுச் சட்டத்திலும் காணப்படும் பொதுவான அம்சம் நீதிமன்ற மேற்பார்வை இல்லாததே. ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு அதிகாரங்கள் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதிப்பது யார் என்பதே. சாதாரண குற்றவியல் சட்டம் ஒரு நீதவானை தொடர்ந்து இதற்காக இணைத்து வைத்திருக்கும்போது, இந்தச் சட்டம் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று துறை வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இங்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மிகவும் எளிமையானவை. தடுத்து வைக்கும் உத்தரவுகளை அங்கீகரிப்பதற்கு முன் நீதவான்களுக்கு சான்றுகளை ஆய்வு செய்ய அனுமதிப்பது, அமைப்புகளைத் தடை செய்வதில் நீதிமன்றத்திற்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் கைதுகளை பொலிஸாருக்கு மட்டுமே ஒப்படைப்பது ஆகியவையே அந்த எளிய நடவடிக்கைகளாகும்.


சட்டமூலத்தின் முதல் வாசிப்பு அக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற்றது. அரசியலமைப்பின் படி, ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 14 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும், அதன் பின்னர் தீர்ப்பு வழங்க நீதிமன்றத்திற்கு மூன்று வாரங்கள் காலம் உள்ளது. எனவே நவம்பர் மாதத்திற்கு முன் இது தொடர்பாக ஒரு விவாதத்தை நடத்த இடமில்லை. நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு முன் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் விரும்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றம் சட்டத்தின் அரசியலமைப்புத்தன்மை பற்றியே தீர்ப்பளிக்க முடியுமே தவிர கொள்கை பற்றி தீர்ப்பளிக்க முடியாது என்பதால், சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரே நடைமுறை வழி குழு நிலையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மட்டுமே. முந்தைய சட்டமூலம் தொடர்பாகவும் அரசாங்கம் பல பிரேரணைகளை ஏற்றுக்கொண்டதால், இந்தச் சட்டத்தை மேலும் மாற்றுவதற்கான வாய்ப்பு இதிலிருந்து தெளிவாகிறது.

ஆடைத்தொழில் துறையின் கருத்து


இலங்கைக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டம் தேவையில்லை என்று ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) எந்த வகையிலும் வலியுறுத்தவில்லை, மேலும் நீதிமன்ற மேற்பார்வை இல்லாத இவ்வளவு பரந்த மற்றும் அடக்குமுறைச் சட்டம், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் சர்வதேச வர்த்தக வாய்ப்பைக் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். தற்போதைய GSP+ சலுகைக் காலம் 2027 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது, மற்ற அனைத்து பயன்பெறும் நாடுகளைப் போலவே இலங்கையும் இந்தச் சலுகையின் அடுத்த புதிய வர்த்தக சுழற்சிக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய வடிவமைப்பின் படி இந்த PSTA சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது புதிய சுழற்சிக்காக நாடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு பங்களிக்கும் முக்கிய தடையாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் என்பது கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கும் அதிகாரத்துவ நிறுவனமாகும், இந்தச் சட்டத்தின் காரணமாக இலங்கையின் விண்ணப்பம்  தோல்வியடைந்தால், நாட்டுக்கு உரிய மிகப்பெரிய வர்த்தக வரிச் சலுகைத் திட்டம் நாட்டுக்கு முற்றிலுமாக இழக்கப்படும். எனவே ஆடைச் சங்கம் வலியுறுத்துவது என்னவென்றால், சட்டமூலத்தை முடிந்தவரை விரைவாகத் திருத்திக்கொள்வது மிக முக்கியம் என்பதே. அது நிறைவேற்றப்பட்ட பின்னர் திருத்துவதற்குச் செல்வது மிகவும் பாதகமானதாக இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.