கொழும்புத் துறைமுக தளவாட மையத் திட்டம் கைவிடப்பட்டமை எதிர்கால முதலீடுகளையும் பாதிக்கலாம் - ஒரு பாதை ஒரு மண்டல முன்முயற்சிக்கான அமைப்பின் இலங்கை பணிப்பாளர் மாயா மயூரன்

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகியமை இலங்கையின் நற்பெயரையும் எதிர்கால வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கலாம் என BRISL பணிப்பாளர் மாயா மயூரன் எச்சரிக்கை.

கொழும்புத் துறைமுக தளவாட மையத் திட்டம் கைவிடப்பட்டமை எதிர்கால முதலீடுகளையும் பாதிக்கலாம் - ஒரு பாதை ஒரு மண்டல முன்முயற்சிக்கான அமைப்பின் இலங்கை பணிப்பாளர் மாயா மயூரன்

கொழும்புத் துறைமுகத்தில் 392 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ளமை, இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கும் எதிர்கால வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஒரு பாதை ஒரு மண்டல முன்முயற்சிக்கான அமைப்பின் இலங்கைக்கான (BRISL) பணிப்பாளர் மாயா மயூரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட திட்டங்களின் நடைமுறைப்படுத்தலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிக்கல்கள், இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பதிலளிக்கையில்,

சீன நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து விலகியிருப்பது ஒரு குறிப்பிட்ட தளவாட மையத் திட்டத்தின் இழப்பாக மட்டும் கருதப்படக்கூடாது என மாயா மயூரன் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் சர்வதேச முதலீட்டாளர்களிடையே இலங்கை தொடர்பான எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் பின்னர் மாற்றப்படுகின்றன அல்லது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் உருவாகின்றன என்ற எண்ணம் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டால், எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டக்கூடும்.

இலங்கையின் சர்வதேச நற்பெயர் பாதிக்கப்படுவது, எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகியமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம், அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஏற்பட்டிருக்கக்கூடிய புவிசார் அரசியல் அழுத்தங்கள் முக்கிய காரணிகளாகும். இதைவிட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊடாகவும் அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

சீன நிறுவனங்கள் இலங்கையில் முக்கிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதால் ஏற்படக்கூடிய மூலோபாய நன்மைகள் தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்துவதாகவும், இதனால் இத்தகைய திட்டங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் குறிப்பாக நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சீன நிறுவனம் ஒன்று போட்டித்தன்மை வாய்ந்த கொள்வனவு நடைமுறையின் மூலம் தெரிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) பெற்ற கடனுதவி மூலம் நேரடியாக நிதியளிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரப்பட்டதுடன், அதற்குப் பதிலாக இந்தியா மானிய அடிப்படையில் அல்லது உதவியாகத் திட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது.

எனினும், பல ஆண்டுகள் கடந்தும் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களைத் தடுக்க முன்வைக்கப்படும் மாற்று வாக்குறுதிகள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கை முக்கியமான அபிவிருத்தி வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

இந்நிலையில், குறித்த மூன்று தீவுகளிலும் காற்றாலை மற்றும் சூரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்காக, MS/Sinosar-Etechwin என்ற சீனக் கூட்டு நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை முதலில் வழங்கியது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு உள்ள மூலோபாய அமைவிடத்தைப் பயன்படுத்தி, பிராந்திய தளவாட மற்றும் வர்த்தக மையமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

அத்தகைய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணக்கம் காணப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதும், சர்வதேச உறவுகளில் சமநிலையான அணுகுமுறையைப் பேணுவதும் அவசியம்.

சீன நிறுவனம் விலகியுள்ள நிலையில், இத்திட்டத்தைப் பொதுத்துறை – தனியார் கூட்டாண்மை (PPP) அல்லது வேறு முறையில் முன்னெடுப்பது குறித்து மாற்று யோசனைகள் முன்வைக்கப்படலாம். ஆனால், புதிய ஏற்பாடுகளை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது திட்டம் எதிர்பார்த்தபடி நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம்.

தற்போதைய அரசாங்கம் முதலீடுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில் தயக்கம் காட்டுவதாகவும், அதிகாரத்துவ நடைமுறைகள் தனியார் துறைக்குச் சவால்களை ஏற்படுத்துகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தால், அரசாங்கம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும் அபாயங்களை ஏற்றுக்கொள்வதையும் தவிர்க்கக்கூடும்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான தொகையே செலவிடப்பட்டிருக்கலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினத்திற்கு ரூ. 1,380 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களில் வெறும் ரூ. 385 பில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது 30 வீதத்துக்கும் குறைவு. இந்நிலையில், அரசாங்கம் தனது கடமையில் தோல்வியடைந்துள்ளதுடன் அபாயங்களையும் தவிர்த்து வருகிறது.

அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டால், அது இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கிய சக்திகளுடன் உறவுகளைப் பேணும்போது, இலங்கை தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் வகையில் திறமையான பேச்சுவார்த்தைகளையும் சமநிலையான இராஜதந்திரத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

உள்நாட்டு அரசியல் ஆதரவைப் பெறுவதற்கான முடிவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நாட்டின் நீண்டகாலப் பொருளாதார இலக்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.

சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் நிறுவனத்தின் விலகல் இலங்கைக்கு ஒரு முக்கியமான இழப்பு என்பதுடன், வெளிநாட்டு முதலீடுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பகமான கொள்கைகள், திறமையான பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்ச்சியான திட்ட நடைமுறைப்படுத்தல் அவசியம் எனச் சுட்டிக்காட்டினார்.