இலங்கையின் எதிர்காலம் குறித்து ஒரு சிறிய கிராமிய மருத்துவ நிலையம் உணர்த்துவது என்ன?

இலங்கையின் பதுளை மாவட்டம் மீரியபெத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமிய மருத்துவ நிலையம், சனத்தொகை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு மத்தியில் நாட்டின் எதிர்கால சுகாதாரத் தேவைகளை வெளிப்படுத்துகிறது. UNFPA-வின் ஆதரவுடன் மீளச் செயற்படுத்தப்பட்ட இந்த மருத்துவ நிலையம், நெருக்கடியான காலங்களில் பெண்கள், குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு வலுவான ஆரம்ப சுகாதார சேவைகள், சமூக ஆதரவு மற்றும் தாக்குப்பிடிக்கும் சுகாதாரக் கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஒரு சிறிய கிராமிய மருத்துவ நிலையம் உணர்த்துவது என்ன?

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பசறை எனும் நகரத்துக்கு மேலுள்ள மலைப்பகுதிகளைக் கடந்து மீரியபெத்தை எனும் கிராமத்துக்குச் செல்லும் பாதை, தேயிலைத் தோட்டங்களையும் சிறிய குடியிருப்புகளையும் ஊடறுத்துச் செல்கிறது. தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு அடிப்படை சுகாதாரச் சேவைகளைப் பெறுவது இலகுவானதல்ல. அந்தப்
பாதையின் முடிவில், வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சிறிய மருத்துவ நிலையம் காணப்படுகிறது. பேரனர்த்தத்தின் பின்னர் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இந்த நிலையம், அதனை நம்பியிருக்கும் பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் உயிர்நாடியாக விளங்குகிறது.

இலங்கைக்கான எனது அண்மைய பயணத்தின்போது, சனத்தொகையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நாட்டின் அபிவிருத்திப் போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பாராளுமன்றத்திலும், பிரதமர் அலுவலகத்திலும், அரசாங்கத்தின் பல்வேறு பங்காளிகளுடனும் முக்கியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன். குறிப்பாக, சனத்தொகை மாற்றங்களுக்கு
ஏற்ப நாட்டின் கொள்கைகளையும் திட்டங்களையும் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை பல ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் பெற்றுக்கொண்ட சுகாதாரம், கல்வி மற்றும் மனித அபிவிருத்தி சார்ந்த முன்னேற்றங்களைப் பாதுகாத்து மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நாட்டின் உறுதியான விருப்பம் என்னை மிகவும் கவர்ந்தது. ஏற்கனவே அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாதுகாப்பதுடன், மாறிவரும் சனத்தொகை நிலைமைகள் மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்ப அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற தேசிய உறுதிப்பாட்டையும் என்னால் தெளிவாக உணர முடிந்தது.

ஆனால், மீரியபெத்தை அந்தக் கலந்துரையாடல்களுக்கு ஒரு மனித முகத்தைக் கொடுத்தது. அங்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் காத்திருந்தனர். மறுபுறம், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது அனுபவத்துடனும் அர்ப்பணிப்புடனும் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மக்களுக்கு தேவையான சுகாதாரப் பராமரிப்பைத் தடையின்றி வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு தெளிவாகத் தெரிந்தது. 

பதுளை மாவட்டத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய மருத்துவ நிலையத்தில், எதிர்காலம் என்பது வெறுமனே கொள்கை ஆவணங்களிலும் கலந்துரையாடல்களிலும் இடம்பெறும் ஒரு கருத்தாகத் தெரியவில்லை. மாறாக, அங்கு அது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நடைமுறையில் வழங்கப்படும் ஒரு நம்பிக்கையாகவும், ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்படும் ஒரு உறுதிமொழியாகவும் உணரப்பட்டது.

இலங்கை தற்போது ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்திற்குள் நுழைகிறது. நாட்டின் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பிறப்பு விகிதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன; அதேவேளை, இளைஞர்கள் வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இதனுடன், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் சமூகங்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் இதுவரை இல்லாத அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.


சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாதுகாப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதல்ல. மாறிவரும் சனத்தொகை நிலைமைகளுக்கும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடங்களுக்கும் ஈடுகொடுத்து, அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தக்கூடியதாக மாற்றுவதும் நம்முன் உள்ள முக்கிய சவாலாகும். டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்தச் சவால் மக்களின் வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

கடந்த ஆண்டு இறுதியில் டிட்வா சூறாவளி இலங்கையைத் தாக்கியபோது, நாட்டின் 25 மாவட்டங்களிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பல வீதிகள் சேதமடைந்ததுடன், தொடர்பாடல் சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வசித்த மக்கள் அத்தியாவசிய சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் மகப்பேற்று வயதிலுள்ள சுமார் 520,000 பெண்களும் அடங்கினர். இவர்களில் 22,570க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களும் சுமார் 193,000 வயது முதிர்ந்த பெண்களும் உள்ளடங்குகின்றனர்.


கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் போன்றவர்களுக்கு சுகாதாரச் சேவைகள் தொடர்ந்து கிடைப்பது மிகவும் அவசியமான நிலையில், அனர்த்தத்தின்போது ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தடைகள் அவர்களின் தேவைகளை மேலும் சிக்கலாக்கின.


ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பொறுத்தவரை, இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட நிலைமை விரைவிலேயே ஆபத்தானதாக மாறக்கூடும். சுகாதார நிலையமொன்றுக்குச் செல்ல வேண்டிய குறுகிய பயணம், சேதமடைந்த வீதிகளைக் கடந்து பல மணிநேரப் பயணமாக மாறிவிடலாம். இதனால் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் தகுதியான சுகாதாரப் பராமரிப்பையும் பெற்றுக்கொள்வது கடினமாகிறது.


உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA), மீரியபெத்தை உள்ளிட்ட மிகவும் தொலைதூரமான பகுதிகளில் சமூக சுகாதாரச் சேவைகளை மீளச் செயற்படுத்த உதவியது. கைவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடம் தற்போது முழுமையாகச் செயற்படும் சமூக மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு நிரந்தரமாகப் பணியாற்றும் மருத்துவத் தாதி ஒருவர் தங்குவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பு சேவை தடையின்றி தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிசெய்ய முடிகிறது. நான் அங்கு சென்றபோது, அந்த இடத்தைத் தங்களுக்கான ஓர் இடமாக
மாற்றிக்கொள்ள அங்குள்ள மக்கள் ஆரம்பித்துவிட்டதாக ஒரு மருத்துவத் தாதி என்னிடம் தெரிவித்தார். புதிதாகப் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை அழகுபடுத்துவதற்காக தாய்மார்கள் பூந்தொட்டிகளில் செடிகளைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். இதனால், அந்த இடம் ஒரு மருத்துவ நிலையத்தைப் போல அல்லாமல், தங்கள் வீட்டைப் போன்ற உணர்வைத் தர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.


இந்தச் சிறிய செயலில் ஒரு ஆழமான செய்தி வெளிப்படுகிறது. மருத்துவ நிலையத்தின் ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு செடி நம்பிக்கையின் அடையாளமாகும். இந்த மருத்துவ நிலையம் தொடர்ந்து இயங்கும் என்ற நம்பிக்கையை அது வெளிப்படுத்துகிறது. உண்மையான மீளெழுச்சி என்பது சூறாவளியால் சேதமடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. அவசரநிலையை கடந்த பின்னரும் மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய சேவைகளையும் வசதிகளையும் உருவாக்குவதே உண்மையான மீளெழுச்சியாகும்.


நுவரெலியாவில், ஒரு பொது பூப்பந்தாட்ட மைதானம் இடம்பெயர்ந்த 35 குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. குடும்பங்களுக்கு இடையே எந்தத் தடுப்புகளும் இல்லாமையால், தனிப்பட்ட சுதந்திரம் என்பதே இல்லாமல் இருந்தது. தாய்ப்பால் ஊட்டும் ஒரு தாய்க்கும் அல்லது மாதவிடாயை எதிர்கொள்ளும் ஓர் இளம் பெண்ணுக்கும், இத்தகைய நிலைமை அவர்களின் அடிப்படை கண்ணியத்தையே பாதித்தது.


ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது (UNFPA), பெண்கள் மற்றும் சிறுமிகள் தமக்கான உளவியல் ஆலோசனைகளைப் பெறவும், பாதுகாப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும், முக்கியமாகத் தமக்கான தனிப்பட்ட சுதந்திரமான இடத்தைப் பெறக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழலை அமைப்பதற்கு உதவி புரிந்தது. சூறாவளி தாக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே தங்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு உதவி கோருவதற்கு இந்தச் சூழல் பெண்களுக்குப் பெரும் பக்கபலமாக இருந்ததாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.


விநியோகிக்கப்பட்ட பொருட்கள் அல்லது புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை வைத்து மட்டும் மனிதநேய நிவாரணப் பணிகளை மதிப்பிட்டுவிட முடியாது. தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குத் தனிப்பட்ட பாதுகாப்பு, சுயமரியாதை, உடலியல் சுதந்திரம் (Bodily autonomy) மற்றும் பயமின்றி உதவி கோரும் வாய்ப்பும் முக்கியமாகும். கண்டியில், நெருக்கடிகளை எதிர்கொண்டு மீளும் திறன் என்பதன் உண்மையான அர்த்தம் மேலும் தெளிவாகப் புரிந்தது.


தொலுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில், சூறாவளிக்குப் பின்னரான நாட்களை மருத்துவர்களும் மருத்துவத் தாதியர்களும் நினைவுகூர்ந்தனர். அக்காலப்பகுதியில் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் கையடக்கத் தொலைபேசி சமிக்ஞையும் இருக்கவில்லை; வீதிகளும் தடைப்பட்டிருந்தன. இந்த நிலையில், அவர்களிடம் இருந்த வழிமுறைகளைக் கொண்டே பணிகளைத் தொடர்ந்தனர். கையால் எழுதிப் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நடந்து செல்ல வேண்டிய பாதைகள் மற்றும் நேரடியாகக் கொண்டு சென்று பரிமாறப்பட்ட தகவல்கள் என அவர்கள் கடினமாகப் பணியாற்றினர்.


கர்ப்பிணிப் பெண்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதுடன், முழுமையான தொடர்பாடல் தடைக்கு மத்தியிலும் அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்கப்பட்டன. தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட சுகாதாரக் கட்டமைப்பு என்பது வலுவான கட்டிடங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கொள்கைகள் ஆகியவற்றால் மட்டுமே உருவாகிறது என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். இவை முக்கியமானவைதான். ஆனால், தொலுவவில் அதன் உண்மையான அர்த்தம் வேறுவிதமாக வெளிப்பட்டது. பதிவேட்டை எடுத்துக்கொண்டு சென்ற மருத்துவத் தாதி, தடைப்பட்ட வீதிகளை அறிந்திருந்த மருத்துவர், சரியான வீட்டைச் சென்றடையும் வரை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாறப்பட்ட தகவல் ஆகியவற்றிலும் அந்தத் தாக்குப்பிடிக்கும் திறன் வெளிப்பட்டது.


களப்பணியாளர்களின் இந்த அனுபவங்கள், சனத்தொகை முதுமையடைந்து வரும் நிலையிலும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் சூழலிலும், இலங்கை இதுவரை அடைந்துள்ள அபிவிருத்தி முன்னேற்றங்களைத் தொடர்ந்து பாதுகாப்பதே நாட்டின் முக்கியப் பணியாகும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

சனத்தொகையில் ஏற்படும் மாற்றங்களை வெறுமனே தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாகப் பார்க்காமல், மக்கள் இன்று எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதற்கேற்ப நமது கொள்கைகளும் திட்டங்களும் மாற வேண்டும் என்பதற்கான அறிகுறிகளாக அவற்றைப் பார்க்க வேண்டும். இதற்குத் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதும், வலுவான ஆரம்ப சுகாதார வலையமைப்புகளை உருவாக்குவதும், நெருக்கடி நேரங்களில் மக்களுக்கு முதலில் உதவிக்கு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதும் அவசியம்.


இலங்கையின் அனுபவம் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறது: தாக்குப்பிடிக்கும் திறன் என்பது வெறும் சொல்லாகவோ முழக்கமாகவோ இருக்கக் கூடாது; அது நெருக்கடியான நேரங்களில் நடைமுறையில் வெளிப்பட வேண்டிய ஒன்றாகும். அது நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட ஒரு சிறிய மருத்துவ
நிலையம். நெரிசலான தற்காலிக தங்குமிடத்துக்குள் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிடைக்கும் ஒரு பாதுகாப்பான இடம். தொடர்பாடல் வலையமைப்புகள் செயலிழந்தபோது, பதிவேட்டை எடுத்துக்கொண்டு கால்நடையாகச் செல்லுகிறார் ஒரு மருத்துவத் தாதி. அதைவிட முக்கியமாக, இன்றைய நெருக்கடியை மட்டும் சமாளிப்பதற்குப் பதிலாக, நாளை வரவிருக்கும்
மாற்றங்களுக்கும் தயாராக இருக்கும் ஒரு நாட்டின் மனப்பாங்கை காணமுடிகிறது.


ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) இந்தப் பயணத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுவதில் பெருமிதம் கொள்கிறது. ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க உதவுதல், மக்களின் சுகாதாரத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் அமைப்புகளை வலுப்படுத்துதல், சனத்தொகை மாற்றத்தை அனைவருக்குமான உரிமைகளையும் தெரிவுகளையும் விரிவுபடுத்தும் ஒரு வாய்ப்பாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பயணத்திற்கு UNFPA தொடர்ந்து பங்களிப்பு வழங்கும்.
இலங்கையின் அடுத்த கட்டம் தேசிய உத்திகளிலும் திட்டங்களிலும் வடிவமைக்கப்படும். ஆனால், அதன் உண்மையான அர்த்தத்தை மீரியபெத்தை போன்ற இடங்களில்தான் காண முடியும். அங்கு ஒரு சிறிய மருத்துவ நிலையம், நிரந்தரமாகப் பணியாற்றும் ஒரு மருத்துவத் தாதி, ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள சில செடிகள் ஆகியவை நீடித்த முன்னேற்றமும் நம்பிக்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை எளிமையாக எடுத்துக்காட்டுகின்றன.

எழுதியவர்: கலாநிதி அலெக்சாண்டர் (சாஷா) பொடிரோசா


ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசியா மற்றும் பசிபிக்
பிராந்தியத்திற்கான தற்காலிக பிராந்திய இயக்குநர்