சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக ரோபோ போர் லீக் ஆரம்பம்: மனித வடிவ ரோபோக்களின் புதிய சகாப்தம்
China’s robotics company EngineAI has launched URKL, the world’s first commercially operated full-size humanoid robot combat league in Shenzhen, featuring AI-powered T800 robots competing in a historic tournament.
மனித வடிவ (Humanoid) ரோபோக்களைப் பயன்படுத்திய உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ரோபோ போர் லீக் சீனாவின் ஷென்சென் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஷென்சென் நன்ஷான் கலாசார மற்றும் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், “White Eagle” மற்றும் “Bullfighter” என பெயரிடப்பட்ட இரண்டு மனித வடிவ ரோபோக்கள் நேருக்கு நேர் மோதின.
ஐந்து சுற்றுகள் கொண்ட கடுமையான போட்டியின் முடிவில், கருப்பு கவசத்துடன் களமிறங்கிய “Bullfighter” அணி 3–2 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டித் தொடரை ஷென்செனைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான EngineAI நிறுவனம் URKL (Ultimate Robot Knock-out Legend) என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து அணிகளும் ஒரே மாதிரியான EngineAI T800 மனித வடிவ ரோபோவை பயன்படுத்தி போட்டியிட்டன. அணிகளுக்கிடையேயான வித்தியாசம் மென்பொருள் அல்கோரிதம், இயக்க கட்டுப்பாடு, தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களில் காணப்பட்டது.
EngineAI நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாவோ தொங்யாங் (Zhao Tongyang), “இது எங்களின் புறப்பாட்டு புள்ளி. முதல் விமானம் 30 மீற்றர் மட்டுமே பறந்தது; இன்று அது கடல்களைக் கடக்கிறது. URKL இங்கிருந்து ஆரம்பமாகிறது” என தெரிவித்தார்.
சீனா, அமெரிக்கா, போலந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அணிகள் ஆரம்ப கட்டத்தில் போட்டிக்காக பதிவு செய்தன. தகுதிச் சுற்றுகளின் பின்னர் 32 அணிகள் பிரதான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் ஹொங்கொங் திரைப்பட நடிகரும் தற்காப்புக் கலை நிபுணருமான Donnie Yen சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு EngineAI பொறியியல் குழுவினருக்கு விருதுகளை வழங்கினார்.
1.73 மீற்றர் உயரம் கொண்ட T800 ரோபோ, மூட்டுகளில் 450 நியூட்டன்-மீட்டர் உச்ச விசையை உருவாக்கும் திறன் கொண்டது. இது சுழல் உதைகள், மேல் குத்துக்கள் மற்றும் விழுந்த பின்னர் வேகமாக எழும் இயக்கங்கள் போன்ற சிக்கலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியது.
இந்த ரோபோ, நேரடி காட்சி உணர்திறன் (real-time visual feedback) தொழில்நுட்பத்தின் மூலம் எதிராளியை அடையாளம் காணவும், அடுத்த நகர்வுகளை கணிக்கவும், எதிர்தாக்குதல்களை மேற்கொள்ளவும் முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சவால் என்பது குத்துவது மட்டும் அல்ல. உணர்தல், முடிவு எடுப்பது மற்றும் மீண்டும் செயல்படுவது ஆகியவை ஒரு நொடிக்குள் நடைபெற வேண்டும்” என சாவோ தொங்யாங் குறிப்பிட்டார்.
மேலும், போட்டியில் பயன்படுத்தப்படும் முக்கிய மென்பொருள் குறியீடுகளை திறந்த மூலமாக (open source) வெளியிட உள்ளதாக EngineAI அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோ போர் லீக் எதிர்காலத்தில் தொழிற்துறை, போக்குவரத்து, உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கையில் மனித வடிவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என EngineAI தெரிவித்துள்ளது.
editor