விஷ்மியின் சதம் வீண் : இலங்கையை வீழ்த்தியது அயர்லாந்து
பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றியீட்டியது.
பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்தது.
ஓலா ப்ரெண்டகாஸ்ட் குவித்த ஆட்டம் இழக்காத கன்னிச் சதம் அயர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. இதன் காரணமாக விஷ்மி குணரட்னவின் கன்னிச் சதம் வீண் போனது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் விஷ்மி குணரட்னவும் ஹசினி பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்து பின்னர் வேகத்தை அதிகரித்த விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார்.
இலங்கை சார்பாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் குவித்துள்ளார்.
விஷ்மி குணரட்னவுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஹசினி பெரேரா 46 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கையை 260 ஓட்டங்களாக உயர்த்தினர்.
பந்துவீச்சில் ஓலா ப்ரெண்டகாஸ்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா டல்ஸெல் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆலின் கெலி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
260 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஓலா ப்ரெண்டகாஸ்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அவரை விட அமி ஹன்டர் 42 ஓட்டங்களையும் சாரா ஃபோபஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: ஓலா ப்ரெண்டகாஸ்ட்.
அறிமுக வீராங்கனை
அயர்லாந்து சார்பாக இன்றைய போட்டியில் அலிஸ் டெக்டர் அறிமுகமானார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் இப் போட்டியைக் கண்டுகளித்ததுடன் அலிஸ் ஹெக்டர் தனது அறிமுகப் போட்டியில் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றினார்.
அவரது மூத்த சகோதரரான ஹெரி டெக்டர் ஆடவர் அணியில் இடம்பெறுவதுடன் மேலும் இரண்டு சகோதரர்கள் அயர்லாந்து கனிஷ்ட அணிகளில் இடம்பெற்றனர்.
editor